பதிகக் குறிப்பு :- இறைவரது இன்னருள் விளையாட்டிற் பலவகையாலும் ஈடுபட்டழுந்தியது. பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) ஐயன் - முன்னோன். ஒப்புடைய மாதர் - மனத்திறத்தால் இல்லறத்தில் ஒத்த உரிமையுடைய மனைவி. மாதர் - பன்மை இல்லற நிலையில் மனைவியர்க்குரிய கடமைகளின் ஏற்றங் குறித்தது. "பெருகுதிரு மனையறத்தின், வேராகி விளங்குதிரு வெண்காட்டு நங்கை" (சிறுத் - புரா - 17). ஒண்பொருள் - மக்கள். "தம்பொரு ளென்பதம் மக்கள்" (குறள்). துய்ப்பன - தாம் அனுபவிப்பவை; உய்ப்பன - அடியார்க் குதவுவன. "அளவிலா மரபின் வந்த மட்கல மமுதுக் காக்கி .... அடியார்க்கென்று முளமகிழ் சிறப்பின் மல்க வோடளித்து" (362). துணையாய்த் துறப்பித்தல் - உள்ளத்துள் நின்று துணையாவார் தாமே என்று காட்டுதலால், முன்னர்த் துணையென்று கண்ட பொருள்களைத் துணையன்றென விடச் செய்தல். "துணையென்று நான்றொழப் பட்டவொண் சுடரை" (நம்பி. தேவா). பொன் - மணி - முத்து - முன்னர் அரியன என்று விரும்பியவை, இப்போது இறைவரை நோக்க, அரியவை யன்றெனக் கண்டநிலை, முத்து - மணிகளுள் ஒன்றாயினும் வேறு பிரித்தோதியது சிறப்பு நோக்கி. 492 - பார்க்க. இப்பாட்டால் உலகர் விரும்பும் உயிர்ச்சார்பு - பொருட் சார்புகள் யாவும் இறைவரே யாகும் தன்மையும், ஏனையவை யாவும் பொருளன்றாம்படியும் எடுத்துக் கூறப்பட்டன. - (2) இப்பாட்டால் முன் பாட்டிற் கூறியவாறு இறைவரையே எல்லாச் சார்புமாகக் கொள்வோர் பெறும் தன்மை கூறப்பட்டது. "எங்கெழிலென் ஞாயிறு" (திருவா - திருவெம்பாவை - 19); செம் பவள வண்ணர் - மெய் பற்றியும், செங்குன்ற வண்ணர் - உருவம் பற்றியும் நின்றன. செவ்வான வண்ணர் - "மாலையின் தாங்குருவே போலுஞ் சடைக்கற்றை" (அற் - அந் - 65). சிந்தையாரே - ஆதலால் கூற்றம் வெம்ப வருகிற்பதன்று என்பது முதலாக முன்சொல்லிய நிலைகளுக்குக் காரணங்கூறியபடி. பரிவு - துன்பம். - (3) இப்பாட்டால் இறைவர் உயிர்க்குயிராய் நின்று உயிர்களை இயக்கும் தன்மை கூறப்பட்டது. ஆட்டுவித்தல் - உலகில் இயங்கச் செய்தல். அடக்குவித்தல் - அவ்வாறியங்குதலை நிறுத்துதல். ஆட்டுவித்தல் கன்மம் புசிப்பதற்கும், அடக்குவித்தல் ஆணவம் நசிப்பதற்குமாம். ஓட்டுவித்தல் - பாசப் பற்றினின்றும் இறைவனை நோக்கி இயக்குவித்தல். உருகுவித்தல் - அதன்கண் உறைப்புப் பெறுவித்தல். பாட்டுவித்தல் - பணிவித்தல் - அதன்மேல் நிகழ்வன. காட்டுவித்தல் - பாசநிலை - பசுநிலை - பதிநிலைகளின் உண்மைகளைத் தெளியக் காட்டுதல். "தன்றிறமு மறிவித்து நெறியுங் காட்டி" (எறும்பியூர் - தாண்டகம் - 1); "மாலுங்கட்டி நெறிகாட்டி வாரா வுலக நெறியேறக், கோலங் காட்டி" (திருவா.) "காண்பா னொளியிருளிற் காட்டிடவும்" (திருவருட்பயன் - 66.); காண்பாரார் - காட்டாக்காலே எதிர்மறையானும் உடன்பாட்டானும் கூறியதன்றி வினாவானும் கூறியது உறுதிப்பொருள் பயப்ப முடித்துக் காட்டியவாறு. இப்பாட்டில் ஏனையவற்றில் வரும் வினாவும் எதிர்மறையும் உறுதிப்பொருள் தந்தன. - (4) நற்பதத்தார் - ஞானிகள். அப்பால் நின்ற சொற்பதம் - வேதசிரம். விடுவேனல்லேன் - "சிக்கெனப் பிடித்தேன்" (திருவா.) நிற்பதொத்து நிலையிலா நெஞ்சம் - சிறிதும் ஒன்றில் தங்காது அலையும் மனம். உடலும் நிலவாதது; அதனுள் நெஞ்சமும் நிலையிலாதது; ஆயின் இதனுள் நீ புகுந்து நிலைபெற நின்றது வியப்பும் உன் அருட்பெருமையுமாம் என்றபடி. கற்பகமே என்றதும் இக்கருத்து. - (5) ஊருக்கு இன்றியமையாது வேண்டப்படுவன திருக்கோயில் - திருநீறு - தளிகள் - பத்திமையாற் பாடுதல் - சங்கம் ஊதுதல் - விதானமும் வெண்கொடியும் அமைத்தல் - மலர் பறித்து இட்டு உண்ணுதல் என்ற இவை என்பது. |