இவை இல்லாதன ஊரல்ல என்று எதிர்மறையாற் கூறினார் உறுதிப்பொருள் தருதற்கு. ஊரல்லாவிடின் பின் அவை எவையோ? எனின், அவை மனிதர் வாழுமிடமாயினும் கொடு விலங்குகள் வாழும் அடவி காடே என்றார். ஊர் - இப்பாட்டில் ஊரில் வாழ்வாரை ஆகு பெயராற் குறித்தன. அடவி காடே - விலங்குகள் வாழும் காட்டை மக்கள் வாழுமிடமாக்க, அதை எறிந்து சுட்டுப் பண்படுத்துதல்போல, இத்தன்மைகள் இல்லா ஊர்களையும் ஊராரையும் உரிய கழுவாயுள் நிறுத்தும் பண்பு செய்யவேண்டு மென்பது. அடவிகாடு என்பது சுடுகாட்டையும் குறிப்பாலுணர்த்தும். "திருநீறு இடாத நெற்றியைச் சுடு" என்பது முதலாக உபநிடதம் கூறும்; "நீரில்லா நெற்றி பாழ்" என்பது நீதி நூல். அருப்பு ஓடு மலர் - அரும்பின் தன்மை நீங்கி அலரும் பருவத்து மலர். பறித்து - பறித்தலை விதிப்படி தாமே செய்து. இடுதல் - அருச்சித்தல். முன் பறித்திட்டுப் பின் உண்ணுதலின் இன்றியமையாமையை வற்புறுத்துதற்கு "உண்பதன்முன் மலர் பறித்திட் டுண்ணாராகில்" என்று மேல்வரும் பாட்டிலும் கூறினார். இப்பாட்டிற் கூறும் நெறி நில்லார் என்னாவர் என்பதுணர்த்துதற் கெழுந்தது மேல்வரும் பாட்டு. - (6) திருநாமமாகிய ஐந்தெழுத்து என்க. ஒருகாலும் - நாளுக்கு ஒரு காலாகிலும். அருநோய்கள் கெட வெண்ணிறணிதல் - திருநீற்றுப் பதிகத்தினுளறிக. அளி - இங்கு உய்யும் வகை என்ற பொருள் குறித்தது. - (7) பூமிமேற் புகழ் தக்க பொருளே - முதற் பாட்டிலும் இப்பாட்டிலும் இறைவரைப் பொன் மணி எனக் கூறியதன் கருத்துக் காட்டியபடி. - (8) பிழைத்தனகள் - பன்மை விகுதிகள் இரண்டும், "அறியாமலேனு மறிந்தேனும் செய்து, செறிகின்ற தீவினைகள்" இருவகை என்று குறித்தன. எத்தனையும் - எல்லாமும். எத்துணைக் கொடுமையாயினவையும். இத்தனையும் எம்பரமோ! - ஐயோ! - இறைவரது கருணைப் பெருக்கினையும் தமது தரத்தின் சிறுமையினையும் எண்ணி எண்ணி இரங்கியது. "நைந்துருகிப் பாய்வது போலன்பு நீர்பொழி கண்ணும்" என்ற நிலைக்குக் காரணம் இவ்விரக்கப் பெருக்கு என்க. - (9) நடுவே - ஐயறிவிற் குறைந்த வுயிர்கட்கும் மக்களுக்கும் இடைப்பட்ட நிலையில் உருவத்தால் விலங்கல்லேன்; தன்மையால் விலங்கல்லா தொழிந்தே னல்லேன் - கொடிய விலங்கேயானேன். எதிர்மறைகள் தேற்றமும் உறுதியும் பயந்தன. இலம் - வறுமை. இலம் பொல்லேன் - வறுமையாற் பொல்லாதேன். இரப்பதே யன்றி என்க. - (10) ஏகாந்தர் அல்லாராகில் மதிப்போமல்லோம். ஏகாந்தம் - அநேகாந்தத்துக்கு எதிரானது; மறுதலையான முடிவுடையது. ஏகாந்தரல்லாராகில் - நாம் சிவனுக்கடிமையே என்று ஒரு தலையாகத் துணிந் தன்பு செய்யாராகில். அன்பராகில் - கடவுளார் என்க. ஏகாந்தரல்லார் எமது உள்ளத்தில் கடையில் வரத் தக்கார்; அன்பர் முதலில் வரத் தக்கார் என்ற குறிப்புத் தர, அல்லாராகில் என்பதை வாக்கியத்தின் இறுதியிலும், அன்பர் என்பதை வாக்கிய முதலிலும், வைத்துக் கூறினார். தனித் திருத்தாண்டகம் IIIதிருச்சிற்றம்பலம் | தாண்டகம் |
| ஆமயந்தீர்த் தடியேனை யாளாக் கொண்டா ரதிகைவீ ரட்டான மாட்சி கொண்டார் தாமரையோன் சிரமரிந்து கையிற் கொண்டார் தலையதனிற் பலிகொண்டார் நிறைவாந் தன்மை வாமனனார் மாகாயத் துதிரங் கொண்டார் மானிடங்கொண் டார்வலங்கை மழுவாட் கொண்டார் காமனையு முடல்கொண்டார் கண்ணா னோக்கிக் கண்ணப்பர் பணியுங்கொள் கபாலி யாரே. |
1 |