1688. (இ-ள்.) இம்மாயம்....நோக்கி - இந்த மாயா சம்பந்தமாகிய பிறவியின் தொடக்கில் விழுத்தும் இருவினைகளின் உருவமாய் வந்த அந்த அரமங்கையரைப் பார்த்து; "உம்மால்...நீர்" என்று - உம்மால் இங்கு எனக்கு ஆக வேண்டிய குறையாது உளது? நான் திருவாரூர் அம்மானுக்கு ஆளாயினேன்; நீவிர் வீணே அலைதல் வேண்டா!" என்ற கருத்துக்கொண்டு; பொய்ம்மாயம்...புகன்றார் - "பொய்ம்மாயப் பெருங்கடலுள்" என்று தொடங்கும் திருத்தாண்டகத் திருப்பதிகத்தைப் பாடியருளினார். 423 இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு தொண்டன. 1687. (வி-ரை.) இத்தன்மை - மேலே மூன்று பாட்டுக்களிலும் சொல்லிய ஆடலும் பாடலும் பிறவுமாகிய செய்தொழிற் றன்மை. எவ்விதமும் - எல்லா விதங்களாலும். முற்றும்மை மேற் சொல்லாதனவாகிய அவ்வகைப் பிறவும் கூட்டி எல்லாமும் என்றுணர்த்திற்று. அத்தனார்...விழத்தவத்து மேலோர் - இச்செயல்களால் சித்த நிலை திரியாமைக்குக் காரணங் கூறுமுகத்தால் விழுத்தவமுடையாராதலின், என்று உடம்பொடு புணர்த்தி ஓதினார். நினைவகலாமையால் அன்பினால் உருகுதலும், அதனால் மெய்யுணர்வும், அவ்வுணர்வு மிகுதியினால் விழுத்தவமும் அதனால் மேன்மையுமாக ஒன்றற்கொன்று காரணமாய் வருதல் குறிக்க இவ்வாறு வைத்தோதினார். திருவடிக்கீழ் நினைவு அகலா அன்பு "நாயகன் சேவடி தைவரு சிந்தை" (1405), "செம்பொற் றாளே, சார்வான திருமனமும்" (1490), "ஓவரது சிவன்றாள்கள் தழுவிய சிந்தை" (1676) முதலியவையும், "மாற்பே றுடையான் மலரடியே", "இன்னம்ப ரான்ற னிணையடியே" "ஐயாற னடித்தலமே" "திருவடியென்றலை மேல் வைத்தார்" என்பன முதலிய தேவாரத் திருவாக்குக்களும் காண்க. மேல் வரும் திருப்பதிகத்திலும் "அம்மான்ற னடித்தொடர்வா னுழிதர்கின்றேன்" என்பதும் குறிக்க. "சிவபெருமான் றிருவடிக்கே பதிந்த நெஞ்சும்" (காஞ்சிப்புரா). அன்பு உருகும் - அன்பினால் உருகுகின்ற. உள்ள முருகுதற்கு அன்பே காரணமாம். "அன்பிற்கு முண்டோ அடைக்குந்தாழ்" (குறள்). மெய்த்தன்மை உணர்வு - மெய்யுணர்வு. அஃதாவது அழியாத் தன்மையுடைய சத்து என்னும் சிவத்தன்மையி னிலைத்த உணர்வு. "மெய்த்தன்மை விளங்குதிருச் செவி" (திருஞான - புரா - 478), "நாவின் வாய்மையால்" (மேற்படி 1078), "வாய்மை குலவுதலால்" (மேற்படி 980), "அருளின் வாய்மை" (மேற்படி 983) முதலியவை காண்க. விழுத்தவம் - சிவஞானச் செயல். சிவபூசையே தவமெனப்படும். சித்தநிலை திரியாது - நிலை - நிலைபெற்றதன்மை. திரிதல் - வைத்த நிலையினின்றும் பிறழ்தல்; வேறுபடுதல். திரியாது - ஒரு சிறிதும் துளங்கமால். செய்பணி - மனம் வாக்குக் காயம் என்ற மூன்றாலும் இறைவனைப் பூசித்தல். இவை மேல் விளக்கப்பட்டன. தலைநிற்றலாவது - சிறந்து நிற்றல்; முயலுதல் என்பதுமாம். தலை - ஏழனுரு பாகக் கொண்டு பணியில் பிறழாது நின்றனர் என்றலுமாம். நின்றார் - (1687) - நோக்கி - என்று - எனும் - தாண்டகம் புகன்றார் - (1688) என மேல்வரும பாட்டுடன் முடிக்க. தலைநின்றார் - தலைநின்றாராகி; முற்றெச்சம். முற்றாகக் கொள்ளினு மிழுக்கில்லை. பணியிற் றலைநின்றமை திருத்தாண்டகத்தாற் பெறப்படும். 422 1688. (வி-ரை.) இம்மாயப் பவத்தொடக்கு ஆம் - இகரச்சுட்டு இவ்வாறு அணிமையில் வந்து செயல்புரிந்த என்ற பொருளில் வந்தது. மாயம் - மாயா காரியமாகிய. |