பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்737

 

முன்னுணர்வின் முயற்சியினால் - முன்னைய பிறவியின் உணர்வு சார அந்த மன எழுச்சியினாலே; திருவிருத்தம் பல மொழிந்தார் - பல திருவித்தங்களைப் பாடியருளினர்.

(வி-ரை.) மன்னிய அந்தக்கரணம் மருவு தலைப்பாட்டினால் - இதுகாறும் புறம்பேயும் இறைபணியினின்று பத்தரது திருவேடத்தையும் சிவாலயத்தையும் பரமேசுவரனெனக்கண்டு வியாபரித்து நின்ற அறிவு இச்சை செயல்கள் உண்முகமாக மடங்கிச் சிவானந்த மொன்றையே விடயீகரித்து நின்றமையால்.

தலைப்படல் - விடயீகரித்தல். "தலைப்பட்டாள் நங்கை தலைவன் றாளே" என்புழிப்போலக் கொள்க.

அந்தக்கரணம் - அந்தக்கரணங்களை அதிட்டித்து நிற்கும் அறிவு இச்சை செயல்களை அந்தக்கரணமென் றுபசரித்தார்.

தன்னுடைய சரணான தமியேனை - பாசங்களின் வாசனையினும் நீங்கித் திருவடியொன்றையே விடயீகரித்து நிற்றலின் இவ்வாறு கூறினார். "அறுகயி றூச லானேன்" (தேவா) என்றதுங் காண்க. "தமியே னுளம்புகுதல்" என்ற சிவஞானபோத உதாரண வெண்பாப் பகுதியுரை காண்க.

தன்னுடைய....இருத்திடும் - இது திருவித்தப் பதிகத்தின் கருத்தும் உட்குறிப்புமாம். பதிகக் குறிப்பும் பதிகப் பாட்டுக் குறிப்பும் பார்க்க. பதிக முதற்பாட்டின் குறிப்பினை நாயனாரது திருவுள்ள நிலையை புலப்படுக்கும்படி ஆசிரியர் எடுத்துக் காட்டியவாறு.

திருவிருத்தம் பல - பதிகப் பாட்டுக்கள் பல. பதிக முழுதும் கிடைத்திலது!

இனிச் சேவடிக்கீழ் இசத்திடும் - இனி - இவ்வுலகில் வந்த குறையாவும் தீர்ந்து விட்டபடியால் இனி வேறு இங்குத் தங்கும் செயலில்லை என்றது குறிப்பு.

சரண் ஆன - சரணமாக - புகலாக - வந்தடைந்த. தமியேன் - வேறு துணையில்லாதவன். உலகச்சார்பு - உடற்சார்பு - உயிர்ச்சார்பு முற்றும் நீங்கிய நிலையில் உன்னையன்றி வேறு சார்பில்லாதவன். "உன்பற் றொழிய ஒருபற்று மில்லையுடையவனே."

இருத்துதல் - நல்லதவத்தில் குறைகண்டு முன்னர் உலகிற் செல்ல விட்டது போல விடாமல் நிலையாய் வைத்தல் என்றது குறிப்பு.

முன்னுணர்வின் முயற்சி - முன்னைப் பிறவியின் உணர்வுவந்து மூள, அந்த மன எழுச்சியினால் வந்த முயற்சி, மனத்தூண்டுதல் வாக்குக்குக் காரணமாய்நிற்பது. "முன்னமே முனியாகி யெனையடையத் தவமுயன்றான்" (1313), "பண்டுபுரி நற்றவத்துப் பழுதினள விறைவழுவுந், தொண்டர்" (1314) என்றவையும் ஆண்டுரைத்தவையும் காண்க.

426

திருப்புகலூர்

திருச்சிற்றம்பலம்

திருவிருத்தம்

தன்னைச் சரணென்று தாளடைந் தேன்ற னடியடையப்
புன்னைப் பொழிற்புக லூரண்ணல் செய்வன கேண்மின்களோ!
என்னைப் பிறப்பறுத் தென்வினைக் கட்டறுத் தேழ்நரகத்
தென்னைக் கிடக்கலொட் டான்சிவ லோகத் திருத்திடுமே.

திருச்சிற்றம்பலம்