பதிகக் குறிப்பு :- புகலூர் இறைவர் என்னை இவ்வுலகத்துத் தங்க வைக்காது தனது திருவடியின் கீழ் நிலையாக இருக்கச் செய்யும் என்று முன்னுணர் வினால் மொழிந்தது. பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) சரண் - அடைக்கலம். புன்னைப் பொழில் - புன்னை - தலமரம். - (2) பார்க்க. என்னை இருத்திடும் - நாயனாரது உட்குறிப்பாகி முத்தி விண்ணப்பம். (திருஞான - புரா - 1244, 1245); (வெள் - 30) முதலியவை இங்கு வைத்துக் கருதத்தக்கன. கிடக்கலொட்டான் - கிடப்பதைச் சகிக்க லாற்றாதவராகிய. சிவலோகம் - திருவடி - அருள் நிறைவு. - (2.4) "என்னை...யாது?" - இடும்பை என்பவை யாவும் என்பாற்கூடி நின்றன. என்னை அதற்கென்று தேவரீர் நியதிப்படுத்தி யிராவிடில் அவற்றுக்குத் தங்குமிடம்தான் யாது? என்று இறைவரை வினாவியது. இடும்பை - துன்பம். இங்கு அவற்றுட் பெரிய பிறவித் துன்பங் குறித்தது. துன்பங்களின்பா லிரங்கக் கூறியதுபோன்ற இகழ்ச்சிக் குறிப்பு. - (4 - 9) என்னளவே....கிடப்பார் - இடைக்கலத்தே - இங்கு உலகிலுமின்றி, அங்குச் சிவனிடத்துமின்றி இடையில் தடுமாறி; "இடைக்கல மல்லேன்" (தேவா); கிடப்பார் என்னளவே என்று கூட்டுக. கிடப்பார் நிலை என்னளவேயாகும். என்னிடத்ததேயாம். "என்னொப்பில் என்னையும்" (திருவா). நானே அந்நிலைக்குச் சிறந்த உதாரணமாவேன். ஆட்பட்டு - ஆட்பட்டும். சிறப்பும்மை தொக்கது. எனக்கு ஒன்றும் இரங்காத உத்தமனே உன்னளவே என்க. இரங்காத உத்தமன் - இகழ்ச்சிக் குறிப்புச் சொல். முரண் அணிச் சுவைபடக் கூறியதுமாம். இரங்காத உத்தமன் என்ற நிலைக்கு நீயே உதாரணம். ஒன்றும் சிறிதும்; எவ்வாற்றானும். - (10) ஒணப் பிரான் - விட்டுணு. திருவோணத்தைத் தனது நாளாக உடையவன். தோள் நற் - பிரான் - இராவணன் இகழ்ச்சிக் குறிப்பு. ந - நல்ல; கோணப்பிரான் - அடியாரின் பொருட்டுச் சாய்ந்த திருக்கோலமுடைய பெருமான். திருப்புகலூர் இறைவரது திருமேனி ஒருபாற் சாய்ந்திருக்கும் நிலையாற் போந்த பெயர். தலச் சரிதக்குறிப்பு. இப்பதிகத்துச் சில பாடல்களே கிடைத்துள்ளன!. 1692. | மண்முதலா முலகேத்த மன்னுதிருத் தாண்டகத்தைப் "புண்ணியா! வுன்னடிக்கே போதுகின்றே" னெனப்புகன்று நண்ணரிய சிவானந்த ஞானவடி வேயாகி யண்ணலார் சேவடிக்கீ ழாண்டவர சமர்ந்திருந்தார். |
427 (இ-ள்.) மண் முதலாம் உலகு ஏத்த - இந்தப் பூவுலக முதலாகிய எல்லா உலகங்களும் எடுத்துத் துதிக்கும்படி; மன்னு திருத்தாண்டகத்தை - நிலைபெற்ற திருத்தாண்டகப் பதிகத்தை; "புண்ணியா!...போதுகின்றேன்" எனப்புகன்று - "புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன்" என்ற முடிபுடையதாக எடுத்துப் பாடியருளி; நண்ணரிய - சென்று சேர்வதற்கரிய; சிவ ஆனந்த ஞான வடிவேயாகி - சிவானந்தத்துடன் ஒன்றுபட்ட பரம ஞான வடிவமேயாகி; அண்ணலார் அமர்ந்திருந்தார் - பெருமை பொருந்திய சிவபெருமானது சேவடியின்கீழே ஆண்ட அரசுகள் எழுந்தருளி மீளாது அமர்ந்திருந்தனர். (வி-ரை.) மண் முதலாம் உலகு - என்றது ஏனை மேல் கீழ் உலகங்கள் இருவினைப் பயன்களாகிய இன்பத் துனபங்களை அனுபவித்துக் கழித்து மீளப் பிறவிக்கேதுவாதலல்லது, சிவ தருமங்களைச் செய்தற்கிடனாய் முத்திக்கேதுவாத லில்லாமையின், சிறப்புப்பயன் நோக்கி மண்ணுலகை எடுத்துக்கூறி மண்முதலாம் |