பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்739

 

என்று விதந்துகூறியதுடன், ஏனையவற்றைத் தொக வைத்தார். "மண்ணிலிரு வினைக்குடலாய் வானிரயத் துயர்க்குடலாய்" என்ற கோயிற்புராணக் கருத்தை ஈண்டு வைத்துக் காண்க.

உலகு ஏத்த மன்னும் - உலகுயிர்கள் ஏத்தி நலம்பெற் றுய்யும் பொருட்டே நிலைபெற்று விளங்கும் திருப்பதிகம் என்றபடி.

"புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன்" என - இது இத்திருப்பதிகத்தின் மகுடமும் உட்குறிப்புமாம். முன் பாட்டின் கருத்தினையே தொடர்ந்து நாயனாரது திருவுள்ளக்கிடையை எடுத்துக் காட்டியபடி.

நண்ணரிய - சென்று சேர்தலரிதாகிய. "சென்றடையாத திரு" என்ற கருத்து. இடப்பெயர்ச்சி யின்றி உள்ளே நிறைந்து விரிந்த அருள் நிறைவு குறித்தது. போக்கு வரவும் இரவும் பகலும் என்ற நிலைகள் இல்லாத நிறைவினுள் வியாபக வியாப்பியமாய் அடைதலன்றி, நண்ணுதல் என்று கூறும், நிலையில்லாத, முடிந்த இடமாதல் குறிப்பு. ஏனையோர்க்கு நண்ணுதல் அரிய என்று உரைப்பாருமுண்டு.

சிவானந்த ஞானவடிவே ஆகி - சிவம் - சத்து; ஞானம் - சித்து. எனவே சச்சிதானந்தமாகிய இறைவனது நிறைந்த அருள் வடிவேயாகி என்றவாறு. ஏகாரம் - பிரிநிலை. என்னை? முன் இருந்தது சேவடிக் கீழிருக்கு நிலையே யாயினும் அது மாயிகமாகிய தேக முதலியவற்றுடன் கூடியிருந்த சீவன்முத்தி நிலையாகலின் அந்நிலையில் அறிவிச்சை தொழில்களின் விருத்தி புறத்தும் வியாபித்தலின்; இங்கு ஆகிய இந்நிலை அவ்வாறன்றிச் சிவானந்தானுபவம் ஒன்றுமே தோன்ற நிற்கும் நிலையாம். அளவும் குறைவுமாகிய எல்லாம் வேறு பிரிக்கப்பட்டன என்க. ஆகி - ஆக்கச் சொல் அருளின் நிறைவாகிய உண்மை குறித்தது, "அந்நின்ற நிலைபெயர்ப்பா ரையர்திரு மருங்கணைந்தார்" (965) "அடிநீழற் றலையா நிலைமை" (1029) என்பன முதலியவை காண்க அற்றாயின், அஞ்ஞான்று, "தூய வெண்ணீறு துதைந்த பொன் மேனி" முதலியனவாக உலகர் கண்டு கொண்டிருந்தபடி நாயனாரது திருவுருவம் என்னவாயிற்று? எனின், கருப்பூரச் சோதிபோலக் கரைந்து இறைவரது அருள் ஒளி நிறை வினுக்குள் கலந்ததென்க. நந்தனார் "உலகுய்ய நடமாடு, மெல்லையினைத் தலைப் பட்டார் யாவர்களுங் கண்டிலரால்" (1075) என்றதும், மணிவாசகனார் "இத்திருவாசகத்துக்குப் பொருளாவார் இவரே" என்று ஆனந்தப் பெருங்கூத்தரைக் "கைகாட்டித் தம்முருவங் காட்டாமல் மறைந்தார்" என்றதும் இங்கு வைத்துக் காணத்தக்கன. "பூம்புகலூர் மேவிய புண்ணியனே உன்னடிக்கே போதுகின்றேன்" என்று சொல்லிக்கொண்டு புகலூர்ப் பெருமானது அருள் நிறைவினுக்குள் உலகர் காணாவகை உருக்கரந்து கலந்தனர் என்பதாம்.

இறைவர் ஒரு சிங்கத்தின் உருவெடுத்து வந்து நாயனாரைத் தின்று விழுங்கி விட்டனர் என்று கற்பனைக் கதை கேட்கப் படுகின்றது. திருப்புகலூரில் அத்தகையதொரு உருவமும் செதுக்கப்பட்டுக் கோயிலினுள்வழிபடுமாறு வெளிச்சுற்று மதிற்சுவரில் வைக்கப்பட்டுள்ளது. தலபுராணமும், "சிங்கமே உன்னடிக்கே போதுகின்றேன்" என்ற திருவாக்கும் இதற்கு ஆதரவென்று சொல்லவும் படுகின்றது. ஆனால் திருத்தொண்டர் புராணமாகிய அருள் வாக்கு இதற்கு இடந்தரவில்லை. உயர்சைவத் திருவாளரும், பேரறிஞரும், பேரன்பருமாகிய கயப்பாக்கம் சதாசிவ செட்டியார், சுவாமிநாத பண்டிதர் முதலிய பெரியோர்கள் இவ்வரலாற்றைக் கண்டித்தொதுக்கினர். "சிங்கமே" என்றதனாற் சிங்க உருவமாக வந்தாரெனின், "போரேறே" (5) என்றதனாற் போரேறாகவும், "புரிசடையாய்" (6) என்றதனால் சடையாராகவும் வந்தார் என்ன வேண்டி