(இ-ள்.) சித்திரையிற் சதயமாந் திருநாளில் - அவ்வாறு நாயனார் அமாந்திருந்த சித்திரை மாதத்துச் சதயமாகிய திருநாளிலே; வானவர்கள் மலர்மாரி மண்ணிறைய - தேவர்கள் பொழிந்த பூமழை மண்ணுலகின் வந்து நிறைய; விண்ணுலகின் மேல் - வானுலகத்தின்மேல் எங்கும்; ஐந்து பேரிய ஒலியும் - ஐவகைத் துந்துபிகளின் முழக்கமும்; மேல் நிறைந்த - மேலே நிறைந்தன; விரிஞ்சன் முதல்...தானிறைந்த - பிரமன் முதலாகிய எல்லாவித யோனி போதங்களில் வந்த எல்லாவுயிர்களும் தமக்குள்ளே முன்னர் உயிர்க்குயிராய் நிறைவாகப் பெற்றதனால் பெருமகிழ்ச்சியே வெளிப்பட நிறையப் பெற்றன. (வி-ரை.) சித்திரையிற் சதயமாந் திருநாளில் - மேலே சொல்லியவாறு நாயனார் இறைவரது திருவடிக்கீழ்ச் சிவானந்த ஞானவடிவேயாகி அமர்ந்திருந்த நாளாகிய சித்திரை மாதத்துச் சதய நாளிலே. அவர் திருவடிக் கீழே யமர்ந்த என்பது சொல்லெச்சம். சித்திரை - மாதமும், சதயம் - நாளுமாம். வானவர்கள் மலர்மாரி மண்ணிறைய - தேவர்கள் இவ்வற்புத நிகழ்ச்சி கண்டு அதன் பொருட்டுப் பூமழை பொழிந்தனர். அங்கு நின்றபடியே அருச்சித்தனர் என்ற குறிப்புமாம். நிறைய - மிகுதிப்பாடு குறித்தது. விண்ணுலகில் ஐந்து பேரிய ஒலியும் மேல் நிறைந்த(ன) என்க. பேரிய ஒலி - தேவதுந்துபி முழுக்கு. இவை தேவர்கள் முழங்குவனவும், அற்புத நிகழ்ச்சியில் தாமே முழங்குவனவும் ஆம். "இயற்றுபவ ரின்றியு மியம்பு, மங்கல முழக்கொலி மலிந்த" (திருஞான - புரா - 33). மலரும் ஒலியும் விண்ணாகிய ஒரே இடத்தினின்று, போந்தனவாயினும் மலர்கள் சொரிந்தபோது கீழ் விழுமியல்பை யுடையனவாதலின் மண்ணிறைந்தன என்றும், ஒலிகள் - ஆகாயத்தின் குணமாகி அலையுருவமாகி மேற்பரவு மியல்புடையன வாதவின் மேல் நிறைந்த என்றும் கூறிய குறிப்பும் காண்க. ஒலி - சாதி ஒருமையாதலின் நிறைந்த என - அகரவீற்றுப் பலவின்பாற் பன்மைவினை கொண்டது. மலர்மாரி மண்நிறைய, ஐந்து ஒலியும்மேல் நிறைந்த(ன). விரிஞ்சன் என்பது பிரமனை உணர்த்தி, அந்தத் தானத்துக்குரிய தேவயோனியை உணர்த்திற்று. ஆகு பெயர். விரிஞ்சன் முதல் யோனிகளாயின - என்றதற்கு இவ்வாறன்றி, விரிஞ்சனது படைப்புக்குட்பட்ட எவ்வகை யோனி பேதங்களும் என்றுரைத்தலுமாம். யோனிகளாயின எல்லாம் - யோனிகள் என்றது எண்பத்து நான்கு இலக்கம் என்று வகுக்கப்பட்ட யோனி பேதங்களை. எல்லாம் என்றது அவ்வகுப்புக்களுள் வரும் உயிர்களை. ஆயின என்பது அவற்றுட்படும் என்ற பொருளில் வந்தது. ஆக்கச் சொல் அவை பொருந்தப் படைக்கப்படும் என்பது குறித்தது. யோனிகள் என்றது வகைகளையும், எல்லாம் என்றது தொகைகளையும் குறித்தன. உண்ணிறைந்த பெருமகிழ்ச்சி தான் நிறைந்த - முன்னரும் உள்ளே நிறைவாகியதாயினும் வெளிப்பட்ட அனுபவ முறையால் தெரியலாகா வகையினின்றது; இப்போது அந்நிறைவு வெளிப்பட்டு அனுபவித்தறியப்படுமாறு நிறைவாகி விளக்கம் பெற்றது; முன்னிருந்தது "அண்டப் பரப்பெங்கு மண்டிப் பரந்தபே ரானந்த வெள்ள"மாகிய சிவானந்தத்தின் நுண்ணிய நிலை; இஞ்ஞான்று நிறைந்தது அதன் வெளிப்பாடாகிய பரிய நிலை; நிறைந்த - நிறைந்தன என அகரவீற்றுப் பலர்பால் வினைமுற்று. இதனை இவ்வாறன்றிப் பெயரெச்சமாகக் கொண்டு நிறைந்த திருநாளில் - என்று கூட்டி அந்நாளில் ஆண்டவரசு அமர்ந்திருந்தார் என்று முடித்தனர் முன் உரைகாரர்கள். அது பொருந்தாமை அறிந்துகொள்க. நாளில் - அமர்ந்திருந்த அந்த என அகர முன்னறிசுட்டு வருவிக்க. |