சமணம் சார்ந்து "தருமசேன" ராகுதல் சிறப்பிலே எல்லாத் திசைகளிலும் புகழ் பரவும் பெருமை திகழும்படி வரும் புகழனார் என்ற பெரியார் ஒருவார் உளராயினார். அவருக்கு ஒத்த உரிமைக் குடியில் வந்து மணம்புரிந்த மனைவியார் மாதினியார் எனக் காரணக் குறியீடு பெறக் கொண்ட பெயருடைய அம்மையார். மாதினியார் மணிவயிற்றினிடைச் செம்மலர் மேல் திருவனைய திலகவதியார் முன்னர்ப் பிறந்தனர். அதன்பின் சில ஆண்டுகளுக்கப்பால் அளவில்லாத கலைத்துறைகள் தழைக்கவும் தவநெறி வாழவும் உலகிருள் நீக்கி ஒளி தரும் சூரியன்போல மருணீக்கியார் அவதாரம் செய்தார். உரிய பருவங்களில் உரிய எல்லாச் சடங்குகளும் செய்யப் பெற்றுக், கலைகளின் றிறம் பயின்று, மருணீக்கியார் மறுவொழித்த இளம் பிறைபோல் வளர்ந்து வந்தனர். திலகவதியாருக்குப் பன்னிரண்டு வயதாயிற்று. ஒத்த குடித்தலைவராய், சிவனடிமை விருப்புடையராய், அரசரது சேனைக் கடன் பூண்ட வீரராய் விளங்கிய கலிப்பகையார் என்பவருக்குத் திலகவதியாரை மணம் பேசப், புகழனாரும் இசைந்தனர். ஆனால் மணம் நிகழ்வதன்முன் வேந்தற்குற்றுழி வினைமேல் வடபுலத்துப் பகைவரை எதிர்த்துப் போர் புரியும்படி அரச னேவிய படிக் கலிப்பகையார் சென்று விட்டனர். இப்பால், நிலையாமை வயப்பட்டுப் புகழனார் விண்ணுலகடையவே, உடன் பிரியா நிலைமையினால் கற்புநெறி வழுவாது மாதினியாரும் அவருடனே சென்று விட்டனர். இருமுது குரவரையும் ஒருங்கே யிழந்த இளஞ்சிறார் இருவரும் வருந்தினர். கிளைஞர் தேற்ற ஒருவாறு மனம் தேறி, வானமடைந்தார்க்குச் செய்யும் கடன்களை முடித்து இருந்தனர். அங்குப் போரின்மேற் சென்ற கலிப்பகையார் நெடுநாள் அமர்விளைத்துப், போரில் உயிர் கொடுத்துப் புகழ்கொண்டு, தமது கடன் கழித்தனர். அது கேட்ட திலகவதியார் "என் அன்னையும் அத்தனும் என்னை அவருக்குக் கொடுக்க இசைந்தார்கள்; அந்த முறையால் அவருக்கு இவ்வுயிர் உரியது; அவருடனே என் உயிரைச் சேர்ப்பேன்" என்று உயிர் நீக்கத் துணிந்தனர். மருணீக்கியார் அவர் திருவடிகளில் வீழ்ந்து, "தாய் தந்தையரைப் பிரிந்தும் உம்மை வணங்கப் பெற்று உயிர் தரித்தேன்; என்னைத் தனியே கைவிட்டு நீர் போவதாயின் நானு முன்னம் உயிர் நீப்பன்" என்று சொல்லி வருந்தினார். தம்பியார் உளராக வேண்டுமென்று கொண்ட கருணையினால், உயிர் நீத்து வானமடையும் நிலையினைத் தவிர்ந்து, மணமிசையாத கைம்மை நிலையினை மேற்கொண்டு எல்லா வுயிர்களுக்கும் கருணையினைப் பூண்டு, மனைத்தவம் பூண்டு திலகவதியார் இருந்தனர். மருணீக்கியார் இளம் பருவத்தே இல்லத்தில் இவ்வாறு வாழ்கின்ற இந்நாட்களில் உலக நிலையாமையை உணர்ந்து அறச் சாலைகளையும் தண்ணீர்ப்பந்தர்களையும் - சோலைகளையுமமைத்தல், குளங்கள் வெட்டுதல், விருந்தளித்தல் முதலிய அறங்களை யியற்றியும், நாவலர்க்கும் பிறர்க்கும் வளம் பெருக ஈந்தும் இவ்வாறு இறங்களைச் செய்தனர். அதன்பின் உலகநெறி நிலையாமை கண்டாராகி மருணீக்கியார் துறவு பூண்டு சமய விசாரம் புரியத் தொடங்கினர். அப்போது சமய கோடிகளின் நல்வழிகளைத் தெரிந்துணர இறைவ ரருளாமை யினாலே, அக்காலத்தில் நாடெங்கும் பரவிக், கொல்லாமை என்ற மேற் பகட்டினாலே உண்மை காண வொட்டாது உலகை மயக்கிச் சைவ விளக்கத்தை மறைத்து நின்ற சமண சமயத்துட் புகுவாராயினர். அணிமையில் இருந்த பாடலிபுத்திரம் என்னும் நகரத்தை அடைந்து அங்குச் சமணப் பள்ளியை அடைந்து சமண குருமார்களைச் சார்ந்தனர். அவர்களும் மெய்போலக் காட்டித் தமது சமய நெறிகளை மருணீக்கியாருக்குப் போதித்தனர்; அவற்றில் அவரும் சிறந்து விளங்கினர். அது கண்டு அவர்கள் தங்களுள் மேலாம் தருமசேனர் என்னும் பெயர் கொடுத்து அவரைத் தமது தலைவராக்கிக் கொண்டார்கள். |