சமணர் வஞ்சம், மறுமாற்றத் திருத்தாண்டகம் பெரும் சமயம் வீழ்ந்தது" என மருள்வாராய், "இதனை அரசன் அறிந்தால் வெகுண்டு நமது விருத்தியினையும் தவிர்க்கும்; நாம் இனிச் செய்வதென்ன?" என்று வஞ்சனை தெரிந்து சித்திரிப்பாராகித், தமக்கையார் சைவத்தில் நிற்றலால் அவரிடம் சென்று சேர்வதற்காகப் பொய்ப் பிணி கொண்டு தருமசேனர் போய், நமது தெய்வ நிந்தையும் சமய லங்கனமும் செய்தனர் என்று முறைப்படுவோமென்று துணிந்தனர்; அவ்வாறே பல்லவனகரில் வந்து 1அரசனிடம் முறையிட்டனர். அது கேட்ட அரசன் வெகுண்டு, "அவ்வாறு செய்த தீயோனை என்ன செய்வது?" என்று வினவ, "அவனை அலை புரிவாய்!" என்று அஞ்சாது கூறினர் கொலை புரியா நிலைகொண்டு பொய்யொழுகு மமண்குண்டர். அரசன் மந்திரிகளையும் சேனையையும் அனுப்பி நாவுக்கரசரைத் தன்பாற் கொண்வர ஏவினன். அவ்வாறே அவர்கள் திருவதிகையிற் சேர்ந்து நாயனாரைச் சூழ்ந்துகொண்டு, "மன்னவன் உம்மை அழைக்க எம்மை விடுத்தான்; வாரும்!" என்று நாயனாரிடம் அறிவித்தனர். அவர் "நாமார்க்கும் குடியல்லோம்!; சிவனுக்கே மீளா ஆளாயினோம்; நீர் அழைக்கும் அடைவில்லோம்" என்று "நாமார்க்குங் குடியல்லோம்" என்று தொடங்கும் மறுமாற்றத் திருத்தாண்டகத்தை அருளிச் செய்து, மறுத்தனர். அவர்கள் அவரை அடி வணங்கி வேண்டிக்கொள்ள, இங்கு வரும் வினைகளுக்கு எம்பெருமான் உளன் என்று இசைந்து இருக்க அவரை அவர்களும் அரசன் முன் கொண்டு சேர்த்தனர். சமணர் செய்வித்த தீமைகள் :- 1. நீற்றறையிலிட்டது அரசன் அமணரைப் பார்த்து "இவனை இனிச் செய்வதென்ன?" என்று கேட்க, அறநெறி துறந்த அவர்கள் "நீற்றறையிலிடுக" என்று அஞ்சாது கூறினார்கள். அரசன் அணையிட, அவ்வாறே நீற்றறையினுள் வைத்துக், கருந்தாள் கோத்துச் சேமஞ் செய்தனர். ஆண்ட அரசுகள் அந்நீற்றறையினுள் அணைந்தபோது இறைவரது திருவடிநிழலைத் தலைக்கொண்டே, ஈசனடியார்க்கு ஈண்டுவரும் துன்பமுமுண்டோ? என்று தொழுதிருந்தனர். நீற்றறையானது, இளவேனிலின் தண்ணிலவலர்ந்து, தென்றல் வீச, வண்டுகள் முரலும் நீர்த்தடம்போற் குளிர்ந்தது. "மாசில் வீணையும்" என்று தொடங்கும் திருக்குறுந்தொகைப் பதிகம்பாடி இறைவரைத் துதித்து, ஆண்ட அரசுகள், அங்கு இனிது அமர்ந்திருந்தனர். ஏழுநாட்கள் கழித்து அமணர் நீற்றறையைத் திறந்தார்கள். ஒரு தீங்குமின்றி ஆனந்த வெள்ளத்தினழுந்தி, அம்பலவர் திருவடியமுதுண்டு, இருந்த அவரைக்கண்டு, "இது என்ன அதிசயம்" என்று வியந்தனர். -2. விடம் ஊட்டியது ஆயினும், அவ்வமணர் "இது அதிசயமன்று; நமது சமண சமயச் சாதகத்தால் இது செய்து பிழைத்திருந்தான்; இனிச் செய்யத்தக்கது இவனை வலியவிடத்தை ஊட்டுவதே யாகும்" என்று அரசனுக்குச் சொன்னார்கள். அவனும் அவர்களது பெரிய மயக்கத்துட் பட்டவனாதலினால், "அவ்வாறே செய்யும்" என்று சொல்ல, அவ்வாறே அவர்களும் நஞ்சு கலந்த பாற்சோற்றை நாயனாருக்கு ஊட்டினர். நாயனாரும், அது அமணர் வஞ்சனையாற் சமைத்த நஞ்சு மமுதாகும்" என்று துணிந்து, அதனை உண்டு, ஊனமின்றி யிருந்தனர். புவன முழுதும் பொடியாக்கும் விடம் நாதருக்கு அமுதமாயிற்று என்றால், அவர்தம் மடியார்க்கு இச் சிறு நஞ்சும் அமுதாவது அற்புதமாமோ? 1. | இந்த அரசன் மகேந்திரவர்மப் பல்லவன். குணபரன் என்ற பட்டப் பெயர் பூண்டவன். சரித்திர ஆராய்ச்சிக் குறிப்புப் பார்க்க. |
|