-3. யானையினால் இடர் செய்தல் அதுகண்டு அமணர் வெருக்கொண்டு, "இவன் பிழைக்கில் எமக்கொல்லாம் இறுதி வருதல் உறுதி" என்று துணிந்து, "நமது சமயத்திற் கற்ற, விடந்தீர்க்கும் மந்திரங்களினால் நஞ்சு தன்னை இடர் செய்யாது தடுத்துக் சொண்டான்; இவன் தொலையாவிட்டால் எமது உயிரும் உனது அரசும் தொலைவது உறுதி" என்று அரசனிடம் சொன்னார்கள். அது கேட்ட அரசனும் "இனி என்ன செய்வது?" எனக் கேட்க, "மந்திர சாதகங்களை வராமல் நாங்கள் தடுக்கிறோம்; இவனை உனது யானையின் முன் விட்டு இடறச் செய்க" என்றார். அவனும் அவ்வாறே ஏவினான். கடுஞ்சினத்தோடு கடுவிசையில் கைவீசி முடுகி வந்தது அவ் விறல் வேழம். நாயானார் சிறிதும் வெருளாமல் யானை யுரிவை போர்த்த இறைவரது திருவடிகளையே தெளிவுற்றனர். "உரிவை யுடையார் ஒருவர் தமர்நாம்; ஆதலின் அஞ்சுவதியா தொன்று மில்லை; அஞ்ச வருவதுமில்லை" என்ற துணிவுடன், "சுண்ணவெண் சந்தனச் சாந்தும்" என்ற திருப்பதிகத்தை அருளிச் செய்தனர். யானை அவரை வணங்கி எழுந்து அகன்றது. பாகர் மீண்டும் அதனைத் தொடக்கி அடர்த்துத் திரித்து அவர்மேல் மிறைசெய்து காட்டினர்; அது அப்பாகர்களையே தொன்று அமணர்கள்மேல் ஓடி உழறிப் பலரையும் மிதித்துக்கொன்று நகரங் கலங்கச் செய்தது. -4. கல்லிற் பூட்டிக் கடலிற் பாய்ச்சுதல் அதினின்றும் பிழைத்த அமண்கையர், மானமழிந்து மனம் வருந்தி மன்னவன் காலில் வீழ்ந்து புலம்பினர். "நமது சமயத்தினின்றேநாடிய முட்டி நிலையால் இவ்வாறு உனது சிறப்பை அழித்தவன் போயினால் உனக்குப் பரிபவம் தீரும்" என்றனர். அவனும் "இனிச் செய்யக் கடவதனைச் சொல்லும்" என்று கேட்கக், "கல்லுடன் சேர்த்துக் கட்டிக் கடலிற் பாய்ச்சுக" என்றார்கள். அரசனும் அவ்வினை மாக்களை "அவ்வாறே செய்க" என்று ஏவிவிட, அவர்களும் அமணர்களுடன் போய் அவ்வாறே செய்து முடித்தனர். நாயனார் "எவ்வாறாயினு மாகுக. எந்தை பெருமானை நான் ஏத்துவன்" என்று கொண்டு, அற்றங்காக்கும் இறைவரது திருவைந் தெழுத்தையும் ததிப்பாராகிச் "சொற்றுணை வேதியன்" என்னும் நமச்சிவாயத் திருப்பதிகத்தினை அன்போடு பற்றிய வுணர்வினால் பாடியருளினர். கடலினுள்ளே கல் மிதந்தது; கட்டிய பாசக்கயிறுகள் அறுபட்டன; நாயனார் கல்லாகிய தெப்பத்தின்மீது விளங்கினார். இருவினைப் பாசமு மலக்கல்லில் கட்டிட வரும் பிறவிப் பெருங்கடலில் வீழும் எல்லா மாக்களையும் அங்கு நின்றும் ஏறும்படி அருளவல்ல திருவைந்தெழுத்து நாவுக்கரசர் பெருமானை இந்தக் கடலினுள் ஒரு கல்லின்மேல் ஏற்றியிட்டது அரியதென்று உரைக்கவும் படுமோ? கல்லே சிவிகையாயிற்று. வருணன்முன்பு மாதவஞ் செய்தானாதலின் அதனைத் தன் அலைகளாகிய கைகளாற் சிரத்திற் றாங்கித் திருப்பாதிரிப்புலியூர்ப் பாங்கரில் கரையில் சேர்ந்து எழுந்தருளு வித்தனன். அங்கு நாயனார் இறைவரை வணங்கித் "தன் அடியோங்களுக்கு இறைவர் தோன்றாத் துணையா யிருந்தனர்" என்ற கருத்துடன் "ஈன்றாளுமாகி" என்ற திருப்பதிகம் பாடித் துதித்தருளினர். அதன்பின் திருவீரட்டானேசுவரர் பாதங்களை மிகவும் நினைந்து கொண்டு, திருவதிகையினை அடைவாராகித், திருமாணிகுழியினையும், திருத் தினைநகரினையும் வணங்கிக், கெடிலத் திருநதியினைக் கடந்து சென்று அணைந்தனர். தொண்டர்கள் நகரை அலங்கரித்து நாயனாரை எதிர்கொண்டனர். வெண்ணீறு துதைந்த திருமேனியும், தாழ்வடமும், இறைவரது திருவடிகளைத் தடவிய மனமும், அன்புநீர் வழியும் கண்ணிணைகளுமாக நாயனார் நகருட் புகுந்தனர். அவரது திருவேடத்தைக் கண்ட அடியார்கள், இந்தத் திருவேடத்தையும் இந்தக் கருணையையும் கண்டால் |