அமணர் தீமை விளைக்கச் சினம் உண்டாயவாறு தான் என்னே!" என்று இரங்கித் தீமைவாராது காத்துத் தொண்டரை ஆண்டுகொண்ட பெருமானைத் தொழுது துதித்தனர். நாயனார் திருவீரட்டானத்துட் சென்று இறைவரை வணங்கி அன்பு மீதூரத் திளைத்து, "இவரை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த வாறுதான் என்னே!" என்ற கருத்துக்கொண்ட ஏழைத் திருத்தாண்டகம் பாடியருளிப், பின்னர்ப், பல பதிகங்களையும் பாடியருளி உழவாரத் திருத்தொண்டு செய்து பணிசெய்திருந்தருளினர். அரசன், சைவனாகிக் "குணபரவீச்சரம்" எடுப்பித்தது இப்பால், சமணர் சார்பினால் தீங்கு புரிந்தொழுகிய மகேந்திர வருமப் பல்லவ அரசனும் தனது பழவினைப் பாசம் ஒழிந்தமையினாலே அத் தீய தொடக்கினின்றும் நீங்கி, வந்து, நாயனாரைப் பணிந்து அமணர்களை நீத்துச் சிவபிரானது நெறியைச் சார்ந்தனன். உண்மை உணர்ந்தமையினாலே அவன் பாடலபுத்திரத்தில் சமண்பள்ளிகளையும் பாழிகளையும் இடித்துக்கொணர்ந்து திருவதிகையில் சிவபெருமான் எழுந்தருளியிருக்கக் குணபாவீச்சரம் என்னும் திருக்கோயிலை எடுப்பித்துச் சைவனாகி விளங்கினான் நாயனார் சிவத்தல யாத்திரை மேற்கொண்டது இந்நாளில், நாயனார் சிவபெருமானது திருத்தலங்கள் பலவற்றையும் சென்று வணங்கித் தமிழ் பாடித் தொண்டு செய்யத் திருவுளங்கொண்டு புறப்பட்டனர். திருவெண்ணெய் நல்லூர் - திருவாமாத்தூர் - திருக்கோவலூர் முதலிய பல பதிகளையும் வணங்கிக் கொண்டு திருப்பெண்ணாகடத்தினை அணைந்தனர். அங்குத் திருத்தூங்கானை மாடத்தில் எழுந்தருளிய இறைவரை வணங்கிச், "சமணரது தொடக்குண்டு போந்து இவ்வுடலினோடு உயிர்வாழ நான்தரியேன். இவ்வுடலைத் தரித்து வாழும் பொருட்டு, எனது நாயகரே! உமது குறிகளாகிய இலச்சினையை என் உடலிற் பொறித்தருளுதல் வேண்டும்" என்று விண்ணப்பித்துப், "பொன்னார் திருவடிக்கொன்றுண்டு விண்ணப்பம்" என்று தொடங்கும் திருவிருத்தத் திருப்பதிகம் பாடியருளினார். அவ்வளவில் சிவபெருமானருளினாலே வேறொருவரு மறியாதபடி ஒரு சிவபூதம் வந்து நாயனாரது திருத்தோள்களில் சூலக்குறியையும் இடபக் குறியையும் பொறித்தது. அதனைக் கண்டு நாயனார் மகிழ்ந்து சிவபெருமான் றிருவருளைப் போற்றி வணங்கி "நான் உய்ந்தொழிந்தேன்" என்றெழுந்தனர். பின், பலநாள் அங்குத் தங்கித் திருப்பணி செய்து, அங்கு நின்றும் புறப்பட்டுத் திருநெல்வாயிலரத்துறை யையும், திருமுதுகுன்றத்தையும், மருங்குள்ள பல பதிகளையும் பணிந்துகொண்டு, கிழக்கு நோக்கி நிவாநதிக்கரை வழியே போய், ஊனாலும் உயிராலும் உள்ள பயன் கொளநினைந்து திருத்தில்லை மருங்கு அணைந்தனர். திருவெல்லையினைக் கடந்தனர்; இடையில் மருதப்பணைகளையும் திருநந்த வனங்களையும் கண்டு தொழுது சென்றனர்; திருநகர்ப் புறமதிலின் மேலைவாயின் வழியே போந்தனர். அடியார்கள் எதிர்கொண்டு தொழத், தாமும் எதிர் தொழுது, சிவமே நிலவிய திருவீதியினை அணைந்தனர். நாயனாரது வருகையை முன் வைத்து, அடியார்கள் திருவீதிகளை விளக்கி அலங்கரித்தனர்; நாயனார் திருவீதியினைத் தொழுது ஏழ்நிலைக் கோபுரத்தின்கீழ் வீழ்ந்து பணிந்து, திருமாளிகையை வலம் வந்து, கனக சபையினைக்கண்டு, ஆனந்தக் கூத்தப்பெருமானது திருநடங்கண்டு தொழுதனர். கைகள் தலைமிசை யேறின. கண்கள் கண்ணீர் மழை பொழிந்தன. கரணங்கள் உருகின. மெய் பல முறையும் வீழ்ந்தெழுந்தது. இவ்வாறு அவரது ஆர்வம் அளவின்றிப் பெருகியது. அத்தனாரது திருவருட் குறிப்பு "என்று வந்தாய்" என்றிருந்த தன்மையினைக் கண்டு அவ்வுண்மைக் குறிப்பினைத் திருவிருத்தப் பதிகத்தாற் றுதித்தருளினர். அதன் |