பின்பு "பத்தனாய்ப் பாடமாட்டேன்" என்ற திருநேரிசைப் பதிகமும் பாடிக் கைத்திருத் தொண்டும்செய்து பணிந்து போந்தனர். "அன்னம் பாலிக்கும் தில்லைச்சிற்றம்பலம்" என்னும் திருப்பதிகம் பாடியருளித், திருமேனி வெண்ணீற்று வண்டலாடப், பல பணிகளும் செய்தருளியிருந்தனர். அந்நாளில் திருவேட்களமும், திருக்கழிப்பாலையும் வணங்கி, "அம்பலவரைத் தினைத்தனையும் மறந்துய்வனே" என்று நினைந்து பாடி, மீண்டு அணைந்து "அரியானை" என்று தொடங்கும் அடியவர் சிந்தை பிரியாத பெரிய திருத்தாண்டகமும் "செஞ்சடைக் கற்றை" என்னும் திருநேரிசையும் பாடிப் பணிகள் செய்தமர்ந்தருளினர். ஆளுடைய பிள்ளையாரிடம் அனைந்து :- 1 முதல்முறை சந்திப்பு அந்நாளில், சீகாழியில் ஆளுடையபிள்ளையார் திருவவதரித்து, மூன்றாண்டில் அம்மையாரது திருமுலைப்பாலுண்டருளித், திருஞானசம்பந்தராகி விளங்கிய செயலை அடியார்கள் சொல்ல நாயனார் கேட்டருளினர். அதிசயமாம் காதல்கூர அவரைக்கண்டு வணங்கவேண்டி அப்பொழுதே அம்பலவர் திருவருள் விடைபெற்றுத் திருவீதியினைப் புரண்டு வலங்கொண்டு போந்து, திருவெல்லை பணிந்து, திருநாரையூர் பணிந்து சென்று, சீகாழியினைச் சேர்ந்தருளினர். நாயனார் எழுந்தருளியது கேட்ட ஆளுடையபிள்ளையாரும் அவரைக் காணும் பெருவிருப்பு மேல்ஓங்க அன்பர்கள்சூழ எதிர்கொண்டு எழுந்தருளி வந்தனர். தொழுதுகொண்ட படியே அணைந்து, தொண்டர் திருக்கூட்டத்தினிடையே சென்று பெருங்காதலுடன் பிள்ளையாரது திருவடிகளை நாயானர் பணிய, அவரது திருக்கரங்களைத் தமது எழுதரிய திருக்கைகளாற் பற்றி எடுத்துப், பிள்ளையார் தாமும் எதிர்றைஞ்சி, "நீவிர் எமது அப்பரே" என்றுகூற, அவரும் "அடியேன்" என்றனர். அப்பெரு நிகழ்ச்சி கண்ட அன்பர்கள் பேரின்பமெய்தி அர! அர! என்று முழக்கம் செய்தனர். பிள்ளையார் கழல் வணங்கப் பெற்றதற்கு அரசுகள் உவந்தனர்; வாகீசரைக் காணப் பெற்றதற்குப் பிள்ளையார் மகிழ்ச்சி பொங்கினர். இவ்வாறு ஒருவர் ஒருவரிற் கலந்த உண்மையோடும் இருவரும் கூடித் திருத்தோணி யுடையவர் கழல் வணங்கும் விருப்பின்மிக்கனர். அருட்கடலும் அன்புக்கடலும் போலவும், சைவ நெறி புண்ணியக் கண்க ளிரண்டும் போலவும், அப்பனார் அருளும் அம்மையாரருளும் போலவும் கூடி, ஞானக்கன்றும் அரசும் சென்று திருக்கோயில் சேர்ந்தருளினர். உரிய முறையால் வணங்கித் திருமுன்பு விழுந் தெழுந்தபோது, பிள்ளையார் நாயனாரை நோக்கி, "அப்பரே! உங்கள் தம்பிரானாரை நீர் பாடுவீராக" என்றருளப், "பார்கொண்டு மூடி" என்ற திருவித்தப் பதிகத்தினாற் போற்றியருளிப் புறம்போந்து, பிள்ளையாரது திருமடத்தில் நாயனார் எழுந்தருளி அமுதுசெய்து நண்புறு கேண்மை அந்நாள் போல ஏந்நாளும் வளர்ந்தோங்க, உடன் பல நாள்கள் அங்கு வைகியருளினர். திருநல்லூரில் திருவடி தீக்கை பெற்றது அவ்வாறு இருபெரு மக்களும் அளவளாவி, அளவிலா மகிழ்ச்சியினோடு செல்லுநாளில், நாயனாரது திருவுள்ளத்தில் சிவபெருமான் எழுந்தருளிய பிறதலங்களையும் சென்று வணங்கும் விருப்பம் வாய்க்க, அதனைப் பிள்ளையாரிடம் விளம்புதலும், அவரும் அதனை உடன்பட்டு, இருவருமாகக் கூடிச் சென்று திருக்கோலக்காவை வணங்கி, அங்கு நின்றும் பிள்ளையார் மீண்டருளினர். அவரிடம் விடை கொண்டு நாயனார் எழுந்தருளித் திருக்கருப்பறியலூர், திருப்புன் கூர், திருநீடுர், திருக்குறுக்கை, திருநின்றியூர், திருநனிபள்ளி முதலாகிய தலங்களைக் காவிரியினிருகரையிலுமாகக் கலந்து சென்று வணங்கினர். திருச் |