பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்751

 

செம்பொன்பள்ளி - திருமயிலாடுதுறை - திருத்துருத்தி - திருவேள்விக்குடி - திருஎதிர்கொள்படி முதலிய தலங்களைப் பணிந்து பதிகம் பாடித் துதித்துப் பணிசெய்து திருவாவடுதுறையினை அடைந்தனர். "ஆவடு தண் டுறையாரை யடைந்துய்ந்தேன்" என்ற திருத்தாண்டகத்தை அருளிச் செய்து, திருக்குறுந்தொகை திருநேரிசை திருவிருத்தம் முதலிய பதிகங்களையும் பாடிக் கைத் திருத்தொண்டும் செய்து தங்கியருளினர். பின்னர்த் திருஇடை மருதூரைச் சென்று வணங்கித் திருச்சத்திமுற்றத்தினை அடைந்தனர். "கூற்றம் வந்து குமைப்பதன்முன் உனது திருவடிகளை என் தலைமேற் பொறித்து வைப்பாய்" என்ற கருத்துடன் அங்குக் "கோவாய் முடுகி" என்னும் பதிகம் பாடியருள, நாயகனார் "திருநல்லூருக்கு வா" என்றருள, அவ் வருட்குறியின் வழியே திருநல்லூருக்குச் சென்று வணங்கினர். அவ்வாறு வணங்கி மகிழ்ந்து எழும்பொழுதில் "உன்னுடைய நினைப்பை முடிக்கின்றோம்" என்று இறைவர் திருவடி மலர்களை நாயனாரது திருமுடியிற் சூட்டியருளினர். நாயனார் "நனைந்தனைய திருவடியென் றலைமேல் வைத்தார்" என்ற திருத்தாண்டகத்தாற் போற்றி, நினைந்து, உருகி, விழுந்து, எழுந்து, நிறைந்து, மலர்ந்து, உலவாக்கிழி பெற்றவறியோன் போல மனம் தழைத்தனர். இவ்வாறு நாயனார் அங்குத் தங்கிப் பணி செய்யும் நாட்களில் அருகில் உள்ள திருக்கருகாவூர், திருவாவூர்ப்பசுபதீச்சரம், திருப்பாலைத்துறை முதலாகிய தலங்களில் சென்று சென்று வணங்கித் தொண்டு செய்துகொண்டு திருநல்லூரை யொருகாலும் பிரியாதே உள்ளுருகிப் பணிந்து வந்தனர்.

அப்பூதியடிகள் மகனை விடம் மாற்றியது

சிவபெருமானது திருப்பழனத்தைப் பணிந்துகொண்டு அதன் பக்கத்திலுள்ள பதிகளையும் வணங்கி நாவுக்கரசர் அப்பூதியடிகளுடைய தலமாகிய திங்களூரை வந்தடைந்தனர். அந்தணர்களுட் சிறந்த ஆப்பூதியடிகள் தமது மக்களுடன் சாலைகள் - குளம் - கூவல் - தண்ணீர்ப் பந்தல் முதலிய பலவற்றையும் திருநாவுக்கரசர் பெயராற் பண்ணிய செய்தியைக் கேட்டு, அவர் திருமனையை நண்ணினார். முன் காணாமலே பெருங்கேண்மை கொண்ட, தமது தியானப் பொருளாயுள்ள திருநாவுக்கரசர்பெருமான், தாமே நேரே வந்தது கண்டு, அப்பூதியடிகள் மனமிக மகிழ்ந்து மனைவியார் மைந்தர் பெருஞ்சுற்றத்தார்களுடனே களிகூர நாயனாரைத் தொழுது அவரைத் திருமனையில் அமுது செய்தருள வேண்டினர். அவரும் இசையவே பெரு விருப்புடன் போனகமும் கறியமுது முதலாயினவும் வெவ்வேறு விதங்கள் பெற அமைத்தனர் நாயனாரை ஊட்டுவித்தற் பொருட்டுப் பரிகலமாக வாழைக் குருத்துக் கொண்டு வரத் திருநாவுக்கரசரது பெயர் பூண்ட தமது மூத்த மகனை ஏவினர். அவன் வாழைக் குருத்தை அரியும்போது அவனை ஒருதழல் நாகம் தீண்டிவிட்டது. அவன் அதனை வெளிப்படுத்தாது விரைந்து வந்து வாழைக் குருத்தினைக் தாயாரிடம் கொடுத்து, விட்ம் தலைக்கேறியதனால் மயங்கி வீழ்ந்தனன். பெற்றவர்கள் அது கண்டு, விடத்தினால் வீந்தான் என்பதைக் குறிகளால் அறிந்து கொண்டனர்; பெரியவர் அமுது செய்ய இது இடையூறாகும் என்று துணிந்து, யாதொரு தடுமாற்றமுமில்லாராகி, அவனது உடலைப் பாயினின் மூடிப் புறத்துவைத்துப் பரிகலமிட்டு, நாயனாரை அமுது செய்ய அழைத்தனர். அவரும் ஆசனத் தமர்ந்தபோது திருவருளால் உண்மை யறிந்து, அளவிறந்த கருணைகொண்டு, அந்த உடலைக் கோயிலின் முன் கொணர்வித்து, "ஒன்று கொலாம்" என்ற பதிகத்தைப் பாடி யருளினார். விடம் நீங்கிப் பிள்ளை எழுந்தனன். நாயனார் அப்பூதியார் திருமனையில் அமுது செய்தருளி, மீண்டும் திருப்பழனத்தை யடைந்து அப்பூதியாரைச் "சொன்மாலைப்" பதிகத்துள் வைத்துச்