சிறப்பித்துப் பாடியருளிர். அணிமையில் உள்ள திருச்சோற்றுத் துறை முதலாகிய பல தலங்களையும் சென்று வணங்கித் திருப்பழனத்தில் பலநாள்கள் நாயனார் தங்கித் திருத்தொண்டு செய்தமர்ந்தருளினர். தமது தலைமேல் திருவடிவைத்தருளிய திருநல்லூரிறைவரது திருவடிகளை நினைந்துகொண்டு காவிரியின் தென்கரை யேறிச் சென்று திருநல்லூரை அடைந்து பணிந்து பணிசெய் திருந்தனர். திருவாரூர்த் திருவாதிரைத் திருநாள் தரிசித்தது அந்நாளில் திருவாரூரைச் சென்று வணங்குதற்குத் திருவுள்ளங் கொண்டு அருள் விடை பெற்றுப் புறப்பட்டுத் திருப்பழையாறைப் பல தளிகளையும், திருவலஞ்சுழி, திருக்குடமூக்கு, திருநாலூர், திருச்சேறை, திருக்குடவாயில், திருவாஞ்சியம், திருக்கீழ்வேளூர், திருவிளமர் முதலிய பல பதிகளையும் தொழுது திருவாரூரை வந்தணைந்த தருளினர். ஆண்ட அரசுகள் அணைந்த பெருஞ் செய்தி கேட்ட ஆரூரில் அடியார்கள் ஆரூர் அணிநக ரலங்கரித்து வீதிகள் விளங்கத் திருமலி மங்கலஞ்செய்து திருமதில் வாயிற்புறத்து வந்து நாயனாரை எதிர்கொண்டனர். நாயனார் அவர்களை வணங்கித் "தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியம் அமண் குண்டரிற்பட்டுப் பிணியொழிந் துய்யப்போந்தேனுக்கு முண்டோ?" என்று "குலம்பலம் பாவரு குண்டர்" என்ற திருப்பதிகம் பாடித் துதித்து, அற்ற உணர்வொடும், அவர்களுடனே திருவீதியுட்புகுந்து திருக்கோயிலை யணைந்து, வணங்கித், தேவாசிரியனை இறைஞ்சிப், புற்றிடங்கொண்டாரை நேர்கண்டு தொழுதனர். கண்டு தொழுது கீழே வீழ்ந்து உடம்பெங்கும் மயிர்க்கூச் செறியக் கண்கள் நீர்மழை பெய்யத், திருமூலட்டானரைப் "போற்றித் திருத்தாண்டகத்"தினால் துதித்தனர். "காண்டலே கருத்தாய் நினைந்திருந்தேன்" என்ற பதிகத்தாற் றிருமுன்பு நின்று துதித்துக், கோயில் வலம் வந்து வணங்கினர். திருமுன்றில் முன் சார்ந்து "ஆருரரைக் கையினாற் றொழாதொழிந்து கனியிருக்கக் காய்கவர்ந்த கள்வனேன்" என்னும் திருப்பதிகத்தாற் போற்றி அங்குத் தங்கியிருந்தனர். மார்பு நிறைய வழியும் கண்ணீருடைய திருவடிவும், வாக்கில் திருப்பதிகத் தமிழ் மாலைகளும், திருவடிகளையே சார்வாகும் திருமனமும், திரு உழவாரப் படையும், தாமுமாகப் பணிசெய்து ஒழுகினார். புற்றிடங்கொண்ட பெருமானைக் காலங்கள்தோறும் கும்பிட்டுப், "பாடிளம் பூதத்தினானும்" என்பது முதலிய பதிகங்களைப் பாடியருளி ஆவல் பெருக இவ்வாறு நிகழ்வாராயினார். நமிநந்தியடிகள் திருத்தொண்டினைச் சிறப்பித்துத் திருவிருத்தப் பதிகம் பாடித் திருவாரூரரனெறி யிறைவரைப் போற்றினர். அந்நாள்களில் திருவலிவலம், கீழ்வேளூர், கன்றாப்பூர் முதலிய தலங்களைக் கலந்து பாடித் திருவாரூரில் மீண்டும் அணைந்திருந்தருளினர். அப்போது வீதிவிடங்கப் பெருமானது திருவாதிரைத் திருவிழாவை அடியார்களுடன் சேவித்துப் போற்றியிருந்து திருப்புகலூரை வணங்கவிரும்வி விடை பெற்றுப் போந்தனர். அந்நாட்களில் ஆளுடையபிள்ளையார் சீகாழியினின்றும் புறப்பட்டுச் சிவதலங்கள் பலவும் வழிபட்டுத் திருப்புகலூரில் வந்து முருகநாயனார் திருமடத்தில் எழுந்தருளியிருந்தனர். அப்பர் பெருமான் திருவாரூரை வணங்கித் திருப்புகலூரை நோக்கி மீண்டருளினார் என்று கேட்டு அவரை எதிர்கொள்ளும் விருப்பினோடு அடியார் கூட்டம் புடைசூழ எழுந்தருளி ஆளுடையபிள்ளயார் நகர்ப் புறத்தே எதிரே வந்தருளினர். அவர் அவ்வாறு வருகின்றதை அப்பர் பெருமான் கேட்டு மகிழ்ச்சியோடும் வந்தருளினர். இருதிறத்து அடியார் கூட்டங்களும். |