ஆளுடைய பிள்ளையார் பாற் கூடியது :- II - இரண்டாவது முறை சந்திப்பு இரண்டு நிலவின் கடல்கள் ஒன்றாகி யிசைந்தன போலக் கூடிக் கலந்தன. அப்பர் சுவாமிகள் பிள்ளையாரை இறைஞ்ச, அவரும் எதிர் வணங்கி, "அப்பரே! நீர் வரும் நாளில் திருவாரூர் நிகழ் பெருமையினை வகுத்துரைப்பீர்" என்று கூறினர். அப்பர் பெருமான் "அதனை என்னென்று சொல்வேன்?" என்று சொல்வாராகி, "முத்துவிதானம்" என்னும் திருப்பதிகம்பாடி அச்சிறப்பினை எடுத்துக் கூறியருளினர். அதுகேட்ட பிள்ளையார் "யான் திருவாரூர் சென்று கும்பிட்டே மீண்டுவந்து உம்முடனமர்வேன்" என்று அங்கிருந்தபடியே திருவாரூருக்கு எழுந்ததருளினர். அப்பர் சுவாமிகள் உள்ள நிறைந்த அன்பு பெருகிக் கண்பொழி நீர் உடலை நனைப்பச் சென்று திருப்புகலூர் இறைவரைத் தொழுது பணிசெய்து இன்புற்று அங்கு அமர்ந்திருந்தனர். சிலநாள் சென்றபின் ஆளுடைய பிள்ளையாரும் திருவாரூர் தொழுது மீண்டு புகலூரில் வந்தருளினர். பெருவிருப்போடு நாயனார் அவரை எதிர்கொண்டு அங்கு இருவரும் உடன் எழுந்தருளி யிருந்தனர். பிள்ளையார், நாயனார் திருநீலநக்கர், சிறுத் தொண்டர், முருகனார். - உடனுறைவின் பயன் அது கேட்டுச் சிறுத்தொண்டை நாயனாரும், திருநீலநக்க நாயனாரும் அங்கு எழுந்தருளச், சீரடியார் பலரும் வந்துகூடி, அனைவரும் முருக நாயனாரது திருமடத்தில் உடன் பயில் கேண்மையில் அமர்ந்து, திருத்தொண்டின் நிலையுணர்ந்தும், திருப்பதிகச் செந்தமிழின்றிறம் போற்றியும், திருத்தொண்டர் பெருமையினை விரித்துரைத்தும் இவ்வாறு ஒருப்படு சிந்தையினார்களாய், உடன் உறைவின் பயன் பெற் றமர்ந்திருந்தனர். அந்நாளில் சிவதலங்கள் பலவற்றையும் சென்று தொழுவதற்கு நினைந்து பிள்ளையாரும் நாயனாரும் திருப்புகலூர்தொழுது புறப்பட, ஏனை அடியார்கள் விடை கொண் டேகினார்கள். நாயனார் முன்னாகச் செல்லவும், அவரைப் பின்பற்றித் தொடர்ந்து, பிள்ளையார் சிவிகையில் எழுந்தருளவும் இவ்வாறு செல்வார்களாய்த், திருவம்பர் சென்று வணங்கித், திருக்கடவூர் சேர்ந்து இறைவரை வணங்கிக் குங்குலி யக்கலய நாயனாரது திருமடத்தில் எழுந்தருளியிருந்தனர். திருக்கடவூர் மயானத்தையும், திருவாக்கூரையும் வணங்கிக்கொண்டு திருவீழிமிழலையில் சென்று வணங்கி, நாயனார் "திருவீழி மிழலையானைச் சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே" என்ற திருத்தாண்டகத்தாற் போற்றிக், காதல் சிறந்தோங்க அங்குத் தங்கிக், கும்பிட்டுத், திருத்தொண்டு செய்துகொண்டு அப்பதியில் அந்த மெய்ம்மை யருந்தவர்க ளிருவர்களும் அடியார்களும் தங்கி இருந்தார்கள். வீழிமிலையிற் படிக்காசு பெற்றது சில நாள்கள் செல்ல, மாரி சுருங்கிற்று; வளம்பொன்னி நதியும் பருவம் மாறிற்று; நீர் வளத்தால் வரும் உணவு அருகிற்று; உலகில் இலம்பாடு சேர்ந்து வறுமையினால் நாடு எங்கும் வற்கடமாய் உலகோர் பட்டினியால் கண் சாம்பி வருந்தினர். வீழிமிழலையுடைய பெருமான் இருபெரு மக்களின் கனவிலும் தோன்றினர். "கால நிலைமையினால் உங்கள் கருத்தில் வாட்டமுறீர்; ஆயினும் உங்களை வழிபட்டுச் சாரும் அடியார்களுக்கு நீங்கள் அளிக்கும் பொருட்டு நாம் உங்களுக்கு நித்தம் ஓரோர் காசு அளிக்கின்றோம்" என்று அருளிச்செய்தனர். பிற்றைநாள், இருபெரு மக்களும் திருக்கோயிலில் வணங்கும்போது, கிழக்குப் பீடத்தில் பிள்ளையாரும், மேற்குப் பீடத்தில் நாயனாரும் காணுமாறு மிழலை நாயகர் பொற்காசு படியாக வைத்தருளினர். அதனைக் கொண்டு, நாளும், "அடியார்கள் வந்து இருபொழுதும் உண்க" என்று பறை சாற்றுவித்து இரு |