பக்கம் எண் :


754திருத்தொண்டர் புராணம்

 

வரும் தங்கள் தங்களுடைய திருமடங்களில் அடியார்கள் எல்லாருக்கும் வளம் பெருகச் சோறிட்டு, அளித்து, உலகங் காத்தனர்.

திருமகனாராதலின் பிள்ளையார் வாசியுடன் காசும், கைத்தொண்டாகும் அடிமையினால் நாயனார் வாசியில்லாக் காசும் பெற்றனர். வாசிதீரப் பாடி பிள்ளையார் வாசியில்லாக் காசு பெற்றனர். இவ்வாறு திருவருளின் பெருமையினால் உலகம் போற்றியிருக்கும் நாளில், மழைபெய்ய உலகம் செழித்தது; வறுமை மாறிற்று. பிற தலங்களை வணங்க எண்ணித் திருமிழலை மணியை வணங்கித் திருமறைக்காட்டில் இருவரும் சென்று சேர்ந்தனர்.

மறைக்காடு - கதவம் திறக்கப்பாடியது திருவாய்மூர்

திருக்கோயிலினை முறைப்படி வணங்கி உட்புகுந்தனர். வேதங்களாற் பூசிக்கப்பட்டு இலச்சினையிட்டுத் திருக்காப்பிடப்பட்ட அந்நாள் முதல் இதுவரை அடைத்தே நிற்கின்ற நேர் திருவாயிலின் முன் சேர்ந்தனர்; அக் கதவினை திறக்க வல்ல அம்மறைகளோதும் அடியார்கள் அணையாமையினால், அன்பர்கள், பக்கத்தில் வேறு வாயில் வழியாக உள்ளே சென்று இறைவரை வணங்கி வருவதை அங்குக் கேட்டறிந்தனர். பிள்ளையார் அரசுகளை நோக்கி "அப்பரே! நாம் இருவரும் நேரே உட்சென்று இறைஞ்சும்படி இக்கதவம் திறக்கப் பாடும்" என்றருள, அதனாலே நாயனாரும் "பண்ணினேர் மொழியாள்" என்ற பதிகம் பாடியருளினர். அதன் பயனைத் துய்ப்பாராகி, இறைவர் பதிகப் பத்துப் பாட்டு அளவும் கதவம் திறக்கத் தாழ்த்தனர். திருக்கடைக் காப்பில் நாயனார் "இரக்கமொன்றிலீர் எம்பெருமானீரே!" என்று பாடி இறைஞ்சினார். திருவருளாற் கதவம் அன்பர்கள் முன்பு காப்பு நீங்கித் திறந்தது. இருபெரு மக்களும் வீழ்ந்திறைஞ்சி உட்புகுந்து வணங்கினர். அடியார்கள் அரவோசை முழக்கி ஆர்த்தனர். பெருமக்கள் இருவரும் புறம்போந்த போது, நாயனார், பிள்ளையாரை நோக்கிக், "கதவம் அடைக்க நீரும் பாடியருளும்" என்றருளப், பிள்ளையார் "சதுரம் மறை" என்ற பதிகம் பாடியருளவே, எடுத்த திருப்பாட்டிற் கதவம் திருக்காப்புக் கொண்டது. அது கண்டு மகிழ்ந்து வணங்கி இருவரும் புறம்போந்து திருமடங்களிற் றங்கியருளினர். அது முதல் அக்கதவம் திறக்கவும் அடைக்கவுமாக நிகழ்ந்தது. அன்றிரவு தாம் அரிதில் திறக்கப் பாடியமையினையும், பிள்ளையார் அடைக்கப் பாடிய எளிமையினையும் எண்ணி "நம்பர் திருவுள்ள மறியாத தயர்ந்தேன்" என்று பெரிதும் அஞ்சி, இறைவர் திருவடிகளை நினைந்து, திருமடத்தில் ஒரு பக்கத்தில் அணைந்து பொருந்திய அவ்வுணர்வுடன் வாகீசர் துயில் கொண்டருளினர். இறைவர் அவரது கனவிற் றோன்றி "வாய்மூரில் இருப்போம்; தொடரவா" என்று அருளி மறைந்தனர். நாயனார் உடனே துயிலுணர்ந்து "வா என்று போனார்; அது என்கொல்" என்று பாடி, "இது எம்பெருமா னருளாகில் யான் அங்குச் செல்வேன்" என்று எழுந்து, திருவாய்மூரை நோக்கிப் புறப்பட்டனர். இறைவனார் முன் காட்டும் அந்தத் திருவேடத்துடன் முன்னே சென்றனர். நாயனார் பின் செல்லச் செல்ல அவர் அணுக முடியாதபடி முன்னே சென்று பொற்கோயில் ஒன்று காட்டி அதனுட் புகுந்து மறைந்தனர். இந்த அளவில் நாயனார் சென்ற செய்திகேட்டு ஆளுடைய பிள்ளையாரும் அங்கு எழுந்தருளினர். "பிழைத்துச் செவ்வியறியாதே திறப்பித்தேனுக்கே ஒளிக்கலாமேயன்றித், தமிழ் உறைப்புப் பாடி அடைப்பித்த பிள்ளையார் ஈண்டு வந்துளர்; அவருக்கு ஒளிக்கலாமோ?" என்று நாயனார் பாடியருள, இறைவர் பிள்ளையார் காணக் காட்சிதர, அவர் பாடித் தொழுது அரசுகளுக்குக் காட்டக், கண்டு, "பாட வடியார் பரவக் கண்டேன்" என்று பாடித் தொழுதனர். இருவரும் திருவாய்மூர் தொழுது திருமறைக்காட்டுக் கொழுந்தருளி யிருந்தனர்.