பிள்ளையார் பாண்டிநாடு சென்றது பழையாறை வடதளி - அமணர் வஞ்சனை அகற்றியது அந்நாளில் பாண்டிநாடு சமணத்தில் மூழ்கிச் சைவம் பொலிவழிந்து நின்றது. மன்னவனும் சமணனாயினன். சிவ வழிபாடு குறைந்தது. அது கண்டு வருந்திய மங்கையர்க்கரசி யம்மையாரும் குலச்சிறை மந்திரியாரும், அங்கு எழுந்தருளிச் சைவத்தாபனம் செய்து வளர்க்க வேண்டுமென்று, ஆளுடைய பிள்ளையார்பால் விண்ணப்பித்துப் பரிசனைங்களை விடுத்தனர். அதுகேட்ட பிள்ளையார் சமணர்களது வன்செயலை மாற்றிச் சைவநெறி விளங்கும்படி தெய்வத் திருநீற்றினை எண்ணிக்கொண்டு, பாண்டிநாடு செல்ல எழுந்து நாயனாருக்கு அறிவித்தருளினர். நாயனார் "அமணர் வஞ்சனையில் மிக வல்லவர்; நாளும் கோளும் தீயன; நீர் அங்குச் செல்லலாகாது;" என்று விலக்கினர். பிள்ளையார் அதை மறுத்துப், "புத்தரையும் சமணரையும் திருநீறு அழிவிக்கும்; இதுதிடம்; இறைவர் துணை நிற்க, நாளும் கோளும் நல்லவாகும்; பாண்டிநாட்டில் யானே போய்ச் சமணததைச் சிதைத்து வருகின்றேன்; நீர் இங்குக் கும்பிட்டு இருப்பீர்" என்று உரைத்துப, புறப்பட்டு எழுந்தருளினர். நாயனார் அங்கு நின்றும் மீண்டும் திருவீழிமிழலையிற் சென்று பணிந்து திருவாவடுதுறையிற் கும்பிட்டு, அங்குப் பிள்ளையாருக்கு ஆயிரம் பொன் அளித்த பெருமையைப் போற்றிப்பாடிப், பிற பதிகளிலும் வணங்கிப் பழையாறை வடதளியிற் சேர்ந்து திருக்கோயிலைக் கைகூப்பித் தொழுதனர். அக்கோயிலை மறைத்துச் சமணர் பாழியாகவாக்கினர் என்றுகேட்டு வருத்தி, அங்கு இறைவரது வண்ணங்கண்டு கும்பிட்டாலன்றி மேற் செல்வதில்லை என்று துணிந்து, "அமணர் திறம் அழித்து உம்மைக் காணக் காட்டும்" என்று இறைவர் பாதம் நினைந்துகொண்டு, அருகு ஒரிடத்தில் அமுது செய்யாது நாயனார் அமர்ந்தனர். இறைவர் அரசனது கனவில் எழுந்தருளி, அமணர் வஞ்சனையால் மறைக்கத் தாம் இருந்த அடையாளங்களைக் காட்டி, அவற்றைப் போக்கி அரசுகள் தம்மைக் கண்டு கும்பிடுமாறு செய்யும்படி அறிவித்தருளினர். அரசனும் உணர்ந்து அடையாளத்தின் வழி கண்டு, அமணரைத் தூரறுத்துப் போக்கித், தூய்மை செய்து, விமானமாக்கி, அரசுகளை அடி பணிந்து அறிவித்தான். அரசுகள் சென்று வழிபட்டு "அமணர் மறைத்தாலும் மறைக்க வொண்ணுமோ" என்ற பதிகம் பாடி இறைஞ்சினர். திருப்பைஞ்ஞீலியில் பொதிசோறு பெற்றது அங்கு நின்றும் காவிரியி னிருகரையிலும் உள்ள தலங்களைப் பணிந்து பாடிச் சென்றனர். திருவானைக்கா, திருவெறும்பியூர், திருச்சிராப்பள்ளி, திருக்கற்குடி, திருப்பராய்த்துறை முதலிய தலங்களை வணங்கினர். திருப்பைஞ்ஞீலியைச் சார வருகின்ற அப்போது, வழி வரும் இளைப்பினாலும், பசியினாலும், நீர் வேட்கையினாலும் மிக வருந்தினர். ஆயினும் அதனால் மனம் சிறிதும் அலைவுபடாமல் நாயனார் அத்தலத்தை நோக்கி எழுந்தருள, இறைவர் அவரது வருத்தம் நீக்குதற்கு, அவ்வழியில் ஒரு சோலையும் குளமும் அமைத்து அந்தணர் வேடத்துடன் வழி போவார்போலப் பொதிசோறுடன் எழுந்தருளியிருந்தனர். நாயனார் அங்கு எழுந்தருள, வேதியர் அவரை நோக்கி, " இந்தப் பொதி சோற்றினை உண்டு இளைப்பு நீக்கி மேற் செல்வீர்" என்று கூறினர். நாயனார் அது ஈசர் அருள் என்று அறிந்தார்போல, வேதியர் சொல்லைப்பற்றி மேலும் எண்ண நினையாது, பொதி சோற்றினை வாங்கி அமுது செய்து இளைப்பாறினர். பின்னர்த் திருப்பைஞ்ஞீலிக்குச் செல்வாராகிப் புறப்பட, வேதியர், தாமும் அங்குப் போவதாய் உடன் வந்து நகரத்தின் பக்கத்தில் மறைந்தனர். நாயனார் "இறைவர் அடியேனையும் பொருளாக அளித்த கருணை இருந்தபடி |