வற்றை மனிதர் செல்லலாகாத வழிகளாகியும் ஆசை மிகுதியால் நடந்து கடந்து சென்றனர். கிழங்கு இலை கனி முதலியவற்றை உண்ணுதலையும் விட்டு, இரவும் பகலுமாக நடந்தனர்; கால்கள் பரட்டளவும் தேய்ந்தன. கயிலையில் வைத்த ஆசையினால் கைகளினால் தாவித் தாவிச் சென்றனர்; கைகள் மணிக்கட்டு அளவும் தேய்ந்தன. தேயவும் நில்லாது அந்த வெம்பரற் புகை மூளும் கடுங்கானத்துள் மார்பினால் வருந்தி உந்திச் சென்றனர். மார்பமும் தசை நைந்து எலும்புகள் முறிந்தன. அதன்மேல் உடம்பு முழுதும் தேயும்படி புரண்டு சென்றனர். உடம்பு முற்றும் தேயவே மேற்செல்லும் புறச்செயலின்றி; அவ்வழியில் தமிழாளியார் தங்கினர். நிலைபெற்ற தீந்தமிழாற் பின்னும் இவ்வுலகத்து நின்று அவர் போற்றிடவேண்டுமென்னும் திருவுள்ளங்கொண்டு, சிவபெருமான் அப்போது அவர் கயிலையை அணைவதற்கு அருள் செய்யாது, அங்கு ஒரு தடாகத்தையும் உண்டாக்கித் தாமே முனிவர்வேடத்தால் எழுந்தருளி வந்து நாயனாரின் நேர் நின்று நொந்து நோக்கினர். அவரும் எதிர்நோக்க, "உடம்பு அழியும்படி நீர் இந்தக் கொடிய காட்டில் வந்ததென்னை?" என்று கேட்டனர். அதற்கு "வடகயிலையிற் சிவபெருமான் உமையம்மையாருடன் இருக்கும் பெருங் கோலத்தைக் காணவந்தேன். முனிவரே! இது என் குறிப்பு" என்று நாயனார் கூறக், "கயிலைமாமலையாவது மனிதர் காணுதற் கெளிதோ? தேவர்களும் காணற் கரியதாம். இங்கு வந்து என்ன காரியஞ் செய்துவீட்டீர்? இனி இம்மட்டில் மீள்வதே கடன்" என்று முனிவர் அருளினர். "இறைவருடைய கயிலைக் காட்சி கண்டாலன்றி, அழியும் இவ்வுடல்கொண்டு மீளேன்" என்று நாயனார் மறுத்துக் கூற, அவர் துணிபு கண்டு முனிவர் வானில் மறைந்து, அசரீரி மொழியாலே "ஒங்கு நாவுனுக்கரசனே! எழுந்திரு" என்று கூறியருளினார். நாயனாரும் ஊறுபாடுகள் முற்றும் நீங்கிய திருமேனியுடன் எழுந்தனர். "அண்ணலே! உனது கயிலைத் திருக்கோலத்தைக் கண்ணாற் காண அருள் புரிவாயாக?" என்று பணிந்தனர்; "இந்தப் பொய்கையுள் மூழ்கித் திருவையாற்றில் அத்திருக்கோலத்தைக் காண்பாயாக!" என்று இறைவர் அசரீரி மொழியால் அருளினர். நாயனார் "வேற்றாகி விண்ணாகி" என்னும் திருத்தாண்டகங்களாற் றுதித்து அருள் ஆணையின்படி பொய்கையுள் மூழ்கினார். ஆதிதேவர் திருவருட் பெருமையை எவரே அறிவார்? திருவையாற்றில் ஒர் வாவியின்மேல் வந்தெழுந்தனர். ஐயாற்றில் சர அசரமாயின எல்லாம் சிவமும் சத்தியுமாகப் பொலியக் கண்டு, பணிந்துகொண்டே திருக்கோயிலின் முன் வந்தனர். அக்கோயிலே கயிலைமலை யாயிற்று; மால் அயன் இந்திரன் முதலிய தேவர்கள் போற்றினர்; மறைகள் முழங்கின; சித்தர் வித்தியாதரர் முதலியோர் நெருங்கினர்; அரம்பையர் கானமும் முழவும் தழைத்தன; கங்கை முதலிய புனித தீர்த்தங்கள் வணங்கின; கணநாதர்களும் பூத வேதாளங்களும் போற்றினர்; மற்றுமொரு வெள்ளிமலை போல இடப தேவர் எதிர் நின்றனர்; நந்திபெருமான் திருமுன்னர்ச் சேவகம் செய்தனர்; வெள்ளி மலையின்மேன் மரகதக் கொடியுடன் விளங்கும் பவளமலை போலச் சிவபெருமான் விளங்கினார்; இத்திருப்பெருங் கோலத்தைக் கண்டனர் வாக்கின் மன்னவனார். அக்காட்சி யமுதத்தைக் கண்களாற் பருகினர்; கைகுவித்து விழுந்து எழுந்து மெய்குலையத் திருமுன்பு நின்று ஆடினார்; பாடினார்; அழுதார்; திருத்தாண்டகங்களாற் போற்றினார். இவ்வாறு சிலநேரம் அவர் கண்டுகொண்டிருக்க இறைவர் அக்கோலத்தை மறைத்தருளினர். நாயனார் வருந்தினர். தாம் கண்ட காட்சித் திறத்தினை "மாதர்ப் பிறைக்கண்ணி யானை" என்ற திருப்பதிகத்தாற் போற்றினார். பின்னர் அத்திருத்தலத்திற் றங்கித் திருத்தாண்டகங்கள் - திருக்குறுந் |