(இ-ள்.) வாதில் தோற்ற அமணரை - வாதத்தில் தோல்வியுற்ற அமணர்களை; வன்கழு - வலிய கழுமரத்திலே; தீது நீங்கிட ஏற்றுவித்தார் திறம் தீமை நீங்கும்படி ஏற்றுவித்த குலச்சிறையாருடைய திரங்களை; யாது போற்றினேன் - இதுகாறும் என்ன அளவில் போற்றி செய்தேன்? (ஒன்றும் போற்றினே னலலேன்); மேல் இனி - மேலே இனி; வேத நீதி...தாள் - வேத நீதி விளங்கும் பெருமிழலைக் குறும்ப நாயனாருடைய பாதங்களை; ஏத்துகேன் - ஏத்தப் புகுகின்றேன். (வி-ரை.) இப்பாட்டினால் குலச்சிறையாரது சரித வரலாற்றை நிறைவு செய்தும், இதுவரை கூறிப்போந்த புராணத்தை முடித்துக் காட்டியும், இனி மேல்வரும் புராணத்துக்குத் தோற்றுவாய் செய்தும் காட்டியருளிய திறம் கண்டுகொள்க. வாதில் தோற்ற அமணர் - சுரவாதம், அனல்வாதம், புனல்வாதம் என்றவற்றில் இறுதியாய் புனல்வாதத்திலும் தோல்வியுற்ற எண்ணாயிரம் அமண குருமார். இவர்களே "இதிலும் தோல்வியுற்றோமாயின் இவ்வேந்தனே எங்களை வெங்கழு வேற்றுவான்" என்று தாமே ஒட்டி வாது செய்தார்களாவார். கழு - கழுவின்கண்; ஏழனுருபு தொக்கது. தீது நீங்கிட - மாதவர்களாகிய அடியார்கள் இருந்த திருமடத்தில், நாடித்தீயை இட்ட தீமையாகிய அபசாரம் அவர்களைப் பற்றாது அவர்கள் தீமை நீங்கி உய்யும்படி. அரசன் இறைவன் தாணையை நிறுத்துபவனாதலின் நீதியின்படி அரச தண்டனையைப் பெறும் உயிர்கள் தமது குற்றத்தினின்றும் நீங்குவர் என்று நூற்றுணிபு. அமணராற் சைவமாகிய உண்மை நிலைக்கு உளவாகிய தீமைகள் நீங்கிட என்றலும் ஒன்று. ஏற்றுவித்தார் - அவர்களது இசைவின்படியும், அவர்கள் செய்த அபசாரங்களுக்கு கழுவாய் வகுக்கும் தகுதியின்படியும், அரசணையின்படியும் நீதிமுறையினை நிறைவேற்றுவித்த அம்மட்டே அமைச்சு நிலையில் குலச்சிரையார் செய்தனர் என்பது. இதன் விரிவு திருஞானசம்பந்த நாயனார் புராணம் 853 - 865 பாட்டுக்களிற் காண்க. திறம் - திண்மை வைப்பினாற்செய்த திருத்தொண்டின் வலிமைத் தன்மை. யாது போற்றினேன் - அதன் தகுதிக்குரியவாறு யாதும் போற்றினேனல்லேன் என்பது குறிப்பு. வினா இன்னமை குறித்தன. யாது போற்றினேன் மேல்இனி ஏத்துகேன் - இரண்டு வினைகளையும் அடுத்து வைத்தது மேல்வருவதும் அவ்வாறேயாம் என்ற குறிப்புத் தருவதாம். இந்த இரண்டும் பதினொரு திருப்பாட்டுக்களில் அமைந்த அமைப்பும், இரண்டும் அவ்வப் பரமசாரியர்களது சரிதத்துடனிணைந்து நிற்பதும் பிற ஒற்றுமைப் பாடும் குறிக்க. வேத நீதி மிழலை வேதங்களில் விதித்த நியதிகளாகிய ஒழுக்கத்தில் நிகழ்கின்ற இடமாகிய மிழலை. இதனைக் "குறும்பர்" என்றதனுடன் கூட்டி, உபநிடதங்களிற் கூறும் ஞானயோகம் கைவந்தவராதலின் என்பர் ஆறுமுகத் தம்பிரானார். மிழலைக் குறும்பர் - மிழலையின் அதிபராகிய குறும்பர். குறும்பர் - சிற்றரசர் குறுநில மன்னர். "குன்றுங் கானு முடைக்குறும்ப ரிடங்க டேரறும் குறைவறுப்ப" (கழறிற் - புரா - 51). தாள் மேல் இனி ஏத்துகேன் என்று கூட்டி முடிக்க. 11 |