உண்மைத் தன்மையை அவர்கள் உணர்ந்திலர் என்பதும், அவர் கூறியதும் அதன் உண்மைத் தன்மையன்று என்பதும் "அறியா வாய்மை எண்டிசை மாக்களுக்கு யான் எவ்வுருவா யென்?" என்று அம்மையார் கூறுவதினாலும் விளங்கும். கூறக் கேட்டே - ஓடுகின்றவர்கள் வேடத்தன்மையைப் "பேய்!" என்று கூறிக்கொண்டு செல்ல, அதனை அம்மை கேட்டு என்க. அவர்கள் கூறியது உண்மைதானே? எனின், அற்றன்று; அம்மையார் கொண்ட பேய் வடிவத்தின் உண்மைத் தன்மைபற்றி 1765 உரைத்தவை பார்க்க. அது யாவரும் வந்து வணங்கிப் பயன்பெறும் "பேயாய நற்கணங்"களின் வடிவமேயின்றி அவர்கள் எண்ணி அகன்று ஓடுமாறு மக்களை அலைத்துத் துன்புறுத்தித் தாமும் நரகத்தில் இடர்ப்படும் அலகைகளாகிய பேய்வடிவமன்று என்பது. அதுபற்றியே அம்மை "மாக்களுக்கு யான் எவ்வுருவாய் என்?" என்றருளினர். "பித்த னென்றெனையுலகவர் பகர்வதோர்" "எவரும் தத்த மனத்தன பேச" என்ற திருவாசகம் கருத்துக்கள் ஈண்டுச் சிந்திக்கத் தக்கன. "அண்டர் நாயகனார்...என்?" என்பார் - என் தன்மையை இறைவர் அறிந்தாற்போதும்; அறியா மாக்களுக்கு எவ்வுருவாய்க் காணினும் அதனால் எனக்காவதொன்றில்லை என்பாராகி. என்பார் - முற்றெச்சம். அறியா வாய்மை "இன்றாம் கட்டு" - (சிவஞானபோதம் 1 வெண்பா); "அருங்கேடன்" (குறள்) என்பவை போல நின்றது. வாய்மை யறியா என்பது பொருள். வாய்மை யறிவு - உண்மை நாடி யறியும் அறிவு என்ற பொருளில் வ்தது. அஃதாவது ஆறாவது அறிவு எனப்படும். அவ்வறிவின்மைபற்றியே இவர்கள் ஆற்றிவின் மக்களுருவினரேயாயினும், ஐயறிவுடைய மாக்களே யாவர் என்பார் மாக்களுக்கு என்றதும் காண்க. என்பார் (1770) - சென்று - அணைந்து - நடந்து - சென்றார் - (1771) என மேல்வரும் பாட்டுடன் கூட்டி முடிக்க. அண்டர் நாயகனார் - மேல் நடு கீழ் என்ற அண்ட வானவர்கள் யாவர்க்கும் தலைவர். தேவதேவர். அறிவுடைய தேவர்கள் அறிவார்கள்; அறிவில்லா மாக்கள் அறியாவிடின் என்? என்பது குறிப்பு. 1771. (வி-ரை.) வடதிசை...சென்று - வெள்ளிக்கயிலை வரையை நண்ண வழிப்பட்டு வந்தாராதலின் வடக்கு நோக்கிச் செல்வாராகி, வடதிசைத் தேயங்களை மிக விரைவாகக் கடந்து சென்றனர். அத்தேயங்களும், வழிகளும், அவற்றின் தன்மையும் திருநாவுக்கரசு நாயனார் புராணத்துள் (1613 - 1625) விரித்துக் கூறினாராதலின் இங்குத் தேயமெல்லாம் என்று சுருங்கக் கூறி யமைந்தனர். முற்றும்மை தொக்கது. அவை திருப்பருப்பத முள்ளிட்ட மலைகளடர்ந்த நாடு, தெலுங்கு, கன்னடம், மாளவம், இலாடம், மத்திமபைதிரம், கங்கை நாடு, கற்சுரம் முதலியன. மனத்தினுங் கடிது சென்று - திருநாவுக்கரசு நாயனார் பலநாள் திருமேனி முழுதும் வருந்த வழி நடந்து கடந்து சென்ற நிலையினையும், இங்கு அம்மையார் மனத்தினும் கடிது சென்று, இங்குநீங்கியவுடன் அங்குக் கயிலையின் பாங்கணைந்த விரைவும் காண இஃதெவ்வாறாயிற்றோ?, எனின், அம்மையார் கொண்ட பேயாய வடிவத்தின் பெற்றியால் ஆகியதென்க. அதுபற்றியே அப்பர்பெருமானது கயிலையாத்திரையைப் பத்துத் திருப்பாட்டுக்களால் அறிவித்த ஆசிரியர் அம்மையார் செய்த அதே கயிலை யாத்திரையினைப் பாதி விருத்தத்தால் அருளிக் காட்டிய அழகும் காண்க. மனத்தினுங் கடிது செல்லுதல். அன்பு மிகுதிப் பாட்டினால் உளதாகும் ஓர் உண்மை நிகழ்ச்சி. "பூதநா யகன்பால் வைத்த மனத்தினுங் |