இவர் எனக் காட்டி நின்றது; இதுவரை அழுந்தீயறியும் அறிவு மாத்திரையிற் புலப்பட அறிந்து, தொண்டு செய்து "அன்றுந் திருவுருவங் காணாதே யாட்பட்டேன், இன்றுந் திருவுருவங் காண்கிலேன் - என்றுந்தான், எவ்வுருவோ னும் பெருமா னென்பார்கட் கென்னுரைக்கேன், எவ்வுருவோ நின்னுருவ மேது?" (61) என்று பாடி, வேண்டியவாறே, இங்கு அம்மையார் இறைவரைக் கட்புலப்படக் காண்கின்ற இந்நிலையில் காணும் ஞான அடையாளங்களுள் இவை சிறந்தன என்க. 55 1772. | தலையினா னடந்து சென்று, சங்கர னிருந்த வெள்ளி மலையின்மே லேறும் போது மகிழ்ச்சியா லன்பு பொங்கக் கலையிளந் திங்கட் கண்ணிக் கண்ணுத லொருபா கத்துச் சிலைநுத லிமய வல்லி திருக்கணோக் குற்ற தன்றே. |
56 (இ-ள்.) தலையினால்...போது - தலையினால் நடந்துபோய்ச் சங்கரன் எழுந்தருளியிருந்த வெள்ளிமலையாகிய கயிலைமலையின் மேலே ஏறும்போது; மகிழ்ச்சியால் அன்பு பொங்க - மகிழ்ச்சிமீக்கூர்தலினால் அன்பு மேன்மேல் அதிகரிக்க; கலை...நோக்குற்றது அன்றே - ஒரு கலையுடன் நின்ற இளமை பொருந்திய பிறைச் சந்திரனாகிய கண்ணியை அணிந்த கண்ணுதலின் ஒரு பாகத்தில் அமர்ந்த வில்லைப்போன்ற நெற்றியினை உடைய பார்வதியம்மையாரது திருக்கண் பார்வையப்போதே பொருந்தியது. (வி-ரை.) தலையினால் நடந்துசென்று - வெள்ளி மலையின்மேல் ஏறும்போது மகிழ்ச்சியால் அன்பு பொங்க - என்றது எந்த மலையாயினும் காலினால் ஏறும்போது அயர்ச்சி தரும்; அவற்றுள்ளும் வெள்ளிமலை மிக வருத்தந் தருவ தொன்றாம். "மனித்தராற் போகலா நெறியன்றியும்" (1619) "மானுடப் பான்மையோர் அடைவதற் கெளிதோ?" (1630) என்றவற்றையும், அப்பர் பெருமான் சென்றுபட்ட அல்லல் நிலைகளையும் காண்க. இவ்வாறாகவே, காலினாலும் கடந்து செல்லுதற்கரிய இதனைத் தலையினால் நடந்து சென்று ஏறுவதென்னின் வேறு யாவர்க்கும் அரிதேயாம். ஆனால் அம்மையார் அதனை எளிதின் இயற்றினதோடும், மகிழ்ச்சியால் அன்பு பொங்கவும் நின்றனர் என்றால் அவரது பேரன்பின் திண்மையும், பெற்றுக்கொண்ட பேயுருவின் றிறமையும் இனிது புலனாகும். தலையினால் நடந்து சென்று - இது மிக அரியதொன்றென்பார் இங்கும் முன்பாட்டிலும் மேல்வரும் பாட்டிலுமாக மூன்று முறையும் கூறினார் ஆசிரியர். ஒருமுறை கூறிய செய்தியை அவ்வாறே பின்னும் கூறாத நிலையுள்ள ஆசிரியரது இயல்பினையும் உன்னுக. இறைவர் தமக்குச் செய்த பேரருளினைப்பற்றிப் பெருங் களிப்பினாலே தலையால் நடந்துசென்றார் என்பதுமொன்று. "புலையனேனையும் பொருளென நினைந்துன் னருள்புரிந்தனை; புரிதலுங் களித்துத், தலையினால் நடந்தேன் விடைப்பாகா! சங்கரா!" (செத்திலாப் பத்து - 3) என்ற திருவாசகக் கருத்துக் காண்க. சங்கரன் - இன்பஞ் செய்பவன். அவன் செய்வது இணையற்ற பேரின்பமாதலின் அதன் முன்பு வெள்ளி மலையின்மேல் தலையினால் நடந்துசென்று ஏறும் பெருந்துன்பமும் ஒரு பொருளாய்ச் சிறிதும் முன்நில்லா தொழியும் என்பது கருத்து. மேற்காட்டிய திருவாசகத்தினையும் இக்கருத்துப்படச் சங்கரர் என்பது காண்க. மகிச்சியால் அன்பு பொங்க - இது வெள்ளிமலையின்மேல் தலையினால் நடந்து ஏறும்போது அம்மையாரின் மனநிலை. மேற்காட்டிய திருவாசகத்தினும் "களித்து" என்பது காண்க. |