பக்கம் எண் :


பேயார் என்கிற காரைக்காலம்மையார் புராணம்899

 

கருதுங்கோயில்...கழுமலமே" (1); "ஆறு சமயங்கட் கொருதலைவன் கருதுமூர்...முதுகுன்றமே" (1); முதலிய தேவாரங்கள் காண்க. திருக்கூத்தை முன் வைத்துத் தலத்தைப் போற்றுதல் குறிப்பு. தலத்தை வணங்கிப் போற்றுதல் வழிபாட்டு முறைகளுள் ஒன்று. இக்கருத்துப் பற்றியே ஆலங்காடதனில் - ஆடுகின்ற கோலங்காண் பொழுது பாடி நடம்போற்றி - என்று ஆசிரியர் அறிவுறுத்தியருளினர்.

பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) கொங்கை திரங்கி...பெண் பேய் - அம்மையார் தம்மைப் பற்றிச் சொல்லிக் கொண்டது. கொங்கை திரங்குதல் நரம்பெழுதல், குண்டு கண்ணுடைமை, வெண்பல்லுடன் பற்கணீண்டிருத்தல், குழிந்த வயிறும் சிவந்த பங்கியும் நீண்ட பறடும் நீள்கணைக்காலும் உடைமை முதலிய இவை எலும்புகளே உடம்பாயமைந்த பேய் வடிவத்தை அம்மையார் பெற்ற நிலையினைக் குறிப்பன. பெண் பேய் - பேய் வடிவினிலும் பால்வகைப் பகுபாடு காணப்படும் உண்மை காண்க. "வருமிவள் நம்மைப் பேணும் அம்மை" (1774) என்றதும் காண்க. "ஆங்கு நின்றாள்கள்...பேய் வடிவு" (1765) வேண்டிப்பெற்று, "நற் கணத்தி னொன்றாய நாம்" (அற் - அந் - 86) என்ற நிலையடைந்தமையால், அம்மையார் ஐயனது திருக்கூத்தை நேரே காண்பதும், உடனிருந்து ஆடியும் பாடியும், முழக்கியும் களித்த பேய்க் கணங்களுடன் கூடி வழிபடப் பெற்றதும் கைகூடினர். இப்பதிகத்தினும், மேல்வரும் பதிகத்தினும் பேய்க் கணங்களின் செயலினையே பற்றியும், அவை வாழுமிடமாயும் ஐயன் அருட் கூத்தியற்றும் ஆடரங்காயும் உள்ள சங்காரக் காட்டினைப் பற்றியும் பாடியருளுதல் காண்க. பெண் பேய் தங்கி அலறி உலறு காட்டில் - என்றதனால் கயிலையில் நின்றும் போந்த அம்மையார் ஆலவனங் கண்டு அங்குத் தங்கிக் கூத்துக்காண அலறி உலற, ஐயன் ஆடல்காட்டி யருளினர் என்பது பெறப்படும். சடை எட்டுத்திசையும் வீசுதல் - எல்லாத் திக்குக்களிலும் ஆடல் நிரம்புதல். அங்கங் குளிர்ந்து அனலாடுதல் - அனலாடல் - சங்காரமும், அங்கங் குளிர்ந்து ஆடுதல் - புனருற்பவத்தின் பொருட்டு மேற்கொள்ளும் அருளும் குறித்தன. எங்கள் - தம்மையும் கணங்களையும் ஏனை உலகினையும் உளப்படுத்தியது. அப்பன் - "அப்பா" என்று (1775) இடம் திரு ஆலங்காடே - தலச்சிறப்புப்பற்றித் துதித்தது - (2) காலைநீட்டி - வாங்கி - மசித்து - எழுதி - நக்கு - வெருண்டு - பார்த்து - துள்ளி - சுளிந்து - என்ற வினையெச்சங்கள் அவிக்க என்ற வினையெச்சத்தின் பகுதியுடன் முடிந்தன. இவ்வினை களுக்குப் பேய்க்கணம் என்ற எழுவாய் தொக்கு நின்றது. மசித்து மையை எழுதி - மசித்தல் - குழைத்தல். அரைத்தல் - மை எழுதல் - "மையினாற் கண்ணெழுதி"(அப். தேவா.) பேய்களின் செயல்கள் விரிக்கப்பட்டன. - (3) வாகை...ஒலிப்ப - வாகை - பாலைக்குரியதோர் பெருமரம். வெண் நெற்று ஒலிப்ப - வாகையின் நெற்றுக்கள் வெண்மை நிறமுடையவை - விரிந்து இலகுவாய்க் கொத்தாய் நின்றிருப்பன. ஒலித்தல் - காற்றில் சல சல என்று ஒலித்தல். "வாகை வன்னெற்றொலிப்ப" (ஞானாமிர்தம்). மயங்கிருள் கூர் நடு நாள் - அறிவை மயக்கும் திணிந்த இருளின் செறிவுடைய நடுயாமம். நடு நாள் - நடு இரவு. இஃதருகிய வழக்கு, நள்ளிருள் என்னும் வழக்கும், நாள் தொடக்கத்தை நள்ளிரவு தொடங்கிக் கணிக்கும் முறை வழக்கும் காண்க.கூகை - ஆண்டலை - ஆந்தை - பாட - குதிக்க என்றதனால் நடுநாள் என்பது இரவு என்ற பொருள் கொண்டுரைக்கப்பட்டது. கூகை முதலியன இரவிற் சரிக்கும் இயல்பின; இவை பாலைநிலப் புட்கள். ஆண்டலை - கூகை - ஆந்தை - இனத்தைச் சார்ந்ததோர் வகைப் புள். ஆண் தலை போன்ற வடிவுடைமையாற் பெற்ற பெயர். பாட என்றும், குதித்தோட என்றும் அவ்வளவிற் கூறிய அதனால் நடுநாளை என்பதற்குப் பாலைக்குரிய பொழுதாதல்