பக்கம் எண் :


900திருத்தொண்டர் புராணம்

 

பற்றி நண்பகல் என்று கொள்ளுதல் பொருந்தும். இங்குக் குறித்தது சங்கார நிலையாதலின் அதனை நடு இரவு என்றும் நடுப்பகல் என்றும் இருவழியும் கூறுதல் இயையும் என்க. ஈகைபடர் தொகை - கள்ளி நீழல் இரண்டு கொடிபோற் படர்வது; அதனைத் தொடர்ந்து கள்ளியும் நிற்பது சுடலையாகிய பாலையினியல்பு. இவை பாலைக்கருப்பொருள்கள். - (4) குண்டில் ஓமக்குழி - ஆழ்ந்து உள்ள ஓமகுண்டம். குண்டு - ஆழம். வட்டம் எனினுமாம். நரி - பாலைக்குரிய மாக்களுள் ஒன்று. ஓமக்குழிச் சோற்றை நரி தின்ன இதனை முன்னே நாம் கண்டிலமே என்று பேய்கள் கைகொட்டி ஓடுகின்றன என்று கூறியது ஈமங்களின் பொது இயல்பு பற்றியது. மண்டலம் நின்று - பிரணவமாகிய வளைவுக்குள் நின்று, உளாளம் இடுதல் - வளைந்து சுற்றி வருதல். வாதித்தல் - மாறி வருதல். - (5) கழுது பேய். பெண் பேய் என்று பேய் இனத்திற் பால்பகுத்துக் கூறியதற்கேற்ப இங்குப் பிள்ளைப் பேயும் கூறினார். காளி - பாலையின் தெய்வம். பிள்ளைப் பேய் பற்றிக் கூறியதும் ஈமங்களின் பொது இயல்பு. - (6) அணங்காடுதல் - வெறியாடுதல். அணங்கு - தெய்வம் - கொண்டாற் போன்றாடுதல் - தெய்வத்தை முன்னிட்டு ஆடுதல்; புரட்டி ஆங்கே - புரட்டியிடும் அவ்விடத்து. புரட்டி என்பது வரை பேய் முதலியவற்றின் செயல்கள். அட்டமே பாய - குறுக்காக "அட்டமாக வீட்டு" (725) எட்டுத்திசையும் என்றலுமாம். (7) கொள்ளிவாய்ப் பேய் - பேயின் வகை, வாயினில் எரிகொள்ளிபோலப் புகையும் எரியும் உமிழவரும் வடிவுடையது. அழல் - விழி அழல்போலச் சிவந்த ஒளி வீசும் கண். துணங்கை - கூத்துவகை; பிணத்தை வாங்கி என்பது சுடுகாட்டின் பொதுவியல்பு. வட்டணை - சுழற்சி. கூத்தின் வகை. ஓரி கிழ நரி; கதிக்க - ஆட. - (8) நாடும்......சூழ பொது இயல்பு. உலக வாழ்வு நிலையாமைக் குறிப்பு. நன்னெறி நாடி நயந்திறந்தவர்களைச் சூழும் பேய்க்கணத்தால் சூழப்பட இறைவர் ஆடுவர் என்பது. சூழச்சுழ - சூழ - இரண்டனுள் முன்னையது பிணத்தின் மாடே சூழ என்றும், பின்னையது சூழ ஆடும் என்றும் கூட்டியுரைக்க நின்றன. காடும் - கடலும் - மலையும் - மண்ணும் என்பன முறையே முல்லை - நெய்தல் - குறிஞ்சி - மருதம் என்ற நானிலமுங் குறித்தன. விண்ணும் என்றது இறைவர் அண்டமுற நிமிர்ந்தாடும் குறிப்புத் தருவது. அனல் கையேந்தி ஆடும் - என்றது சங்காரக் குறிப்பும், சுழல என்றது மீளப் புனருற்பவக் குறிப்பும் தருவன. - (9) துத்தம்......ஓசை - துத்தம், கைக்கிளை, விளரி, தாரம், உழை, இளி, ஓசை - இவை ஏழிசைகள். தமிழ் இசையியலில் அறியப்படுவன. பண் - இசை யமைதி. 221-ன் கீழ் உரைத்தவை பார்க்க. சச்சரி.....மொத்தை - இயங்களின் வகை. எல்லாப் பண்களையும், எல்லா இயல்களையும் முழக்கி வாசித்தக் சூழவுள்ள பேய்க் கணங்களின் செயல். அத்தனை விரவினோடு - இவ்வகைகள் எல்லாம் பொருந்தியிருக்கும் அத்தன்மையோடு. அத்தனை என்பது இவையெல்லாம் பொருந்த வைத்து ஒன்ற ஆடுதல் பிறர்க்கரிது என்ற குறிப்புப்படநின்றது. ஏழிசைகளின் பெயர்களையும் பல்பலவரம் இயங்களின் பெயர்களையும் அடைமொழிகளுமின்றி அடுக்கி யாப்பமைதிக் கொப்பக் கூறிய தமிழ்க் கவிநயம் காண்க. இயல்களுள் நரம்புக்கருவி, தோற்கருவிகளும், ஒருமுகம் இருமுகம் முதலாகவுடையவை முதலியவையும் அடங்கும். - (10) புத்தி கலங்கி...இட்டசெந்தீ - இறந்தவர்க்கு உலகோர் செய்யும் ஈமச்சடங்கு. பொது இயல்பின் உலகநிலை பற்றி உரைத்தவாறு. புத்தி கலங்கி மதிமயங்கி - கடமை செய்து - என்று கூட்டுக. இறந்தமை குறித்துச் சுற்றம் துயருறுதல் குறித்தது. இவை கடமை செய்யும் அளவுதான் உள்ளதென்பதும், "நீரினின் மூழ்கி நினைப்பொழிந்தாரே" (திருமந்திரம்) என்றபடி பின்னர் மறத்தலியல்பென்பதும் குறிப்பு. மதிமயங்கி இறந்தவர் என்று கூட்டிப், புலனைந்தும் பொறி கலங்கி நெறி மயங்கி யறி வழிந்