பூதியாராகும் ஞானப் பெரு முனிவர் செய்த திருத்தொண்டினைச் சொல்லத் தொடங்குகின்றேன். (வி-ரை.) இப்பாட்டான் ஆசிரியர், இதுவரை கூறிப்போந்த சரிதத்தினை முடித்துக் காட்டி, இனி, மேற் கூறப்புகும் சரிதத்துக்குத் தோற்றுவாய் செய்கின்றனர். ஆதியோடு.........பாடும் - இறுதியாய் முடிந்த முடிபாக வைத்து அம்மையார் கேட்டுப் பெற்ற வரமாகலானும், இஃதொன்றே ஏனைய வரங்களை உள்ளடக்கி நிற்குமாகலானும், இஃதொன்றினைக் கூறுந்துணையே அதனைப் பாடும் முறையிற் பயப்பித்த ஏனைச் சரித வரலாறுகள் எல்லாம் நினைக்க வருமாகலானும், இது பற்றியே சரித முழுதும் முடித்துக் காட்டினார், இஃதொன்றானே சரித முழுமையும் நினைக்க வருமாறு; ஐயன் நடமாடும் போது கீதம் முன்பாடுதல் சிவ பூதங்களாகிய பேய்க்கணங்களுக்கே இயைவது; ஆதலின் அம்மை அவற்றுள் ஒன்றாகிய பேய் வடிவம் பெற்றனர்; அதனை வேண்டிப் பெற்றனர்; மரங்களின் இறைவன் தரப்பெற்றதனால் கணவன் தெய்வமென்று கருதித் தொடர்பு விட்டானாக, அம்மையார் உலக நிலையின் முன்னைய அவ்வுடம்பு விட்டு இவ்வடிவம் வேண்டலாயினர்; கணவன் வைக்க என அளித்த மாங்கனிகள் இரண்டினில் ஒன்றனை அடியார்க்கு இட்டு அமுதூட்டினபின் அதனையும் அவன் கேட்க இது நிகழலாயிற்று; அம்மை பிறந்து மொழிபயின்றபின்னெல்லாம் அடியாரிடத்தும் ஐயனிடத்தும் காதல் சிறந்து ஒழுகிய நலத்தால் ஒருநாள் வந்த அடியார்க்கு அமுது ஊட்டத் திருவமுது மட்டும் கைகூடக், கறியமுது அங்கு உதவாதபடியால், மாங்கனிகள் இரண்டினில் ஒன்றை அம்மையார் படைக்க நேர்ந்தது என்றிவ்வாறு கண்டு கொள்க. கீதம் - இறைவன் புகழோடு கூட்டிப் பாடும் இசைப் பாட்டு. "இறைவனது தன்மை பாடிக், கருந்தடங்கண் ணார்கழல்பந் தம்மானைப் பாட்டயருங் கழுமலமே" (தேவா). இறைவன் புகழுடன் கூடாத வெற்றிசையில் இந்நாள் மாக்கள்பெரு மயக்கமுற்றுக் கழிந்து கேடுறுதல் வருந்தத் தக்கதொன்றாம். வெற்றிசை வறிய புலனின்பங்களுள் ஒன்றாய்க்கழிந்து, நன்மை தாராமை மாத்திரையேயன்றிப், புலனின்பத்துக்கடிமைப் படுத்துதலின், தீமையும் பயப்பதாகலின் பெரியோர் இதனை ஒதுக்குவர். "பூதப்படையாளி யெழுத்தஞ்சும் வழுத்தி" (947); "சடை முடியா ரஞ்செழுத்தி னிசை பெருக" (950); திருவாள னெழுத்தஞ்சுந் தூய விசைக்கிளை கொள்ளும் (551) "குழனாதத் தஞ்செழுத்தாற் றமைப்பரவும் இசை விரும்புங் கூத்தனார்" (964) என்று ஆனாயர் புராணத்துட் கூறியனவும், ஆண்டுரைத்தனவும் நினைவு கூர்க. "......பேயாரிம் மூவர் கற்குமிய லிசைவல்லோர்" (புராண வரலாறு - 46) என்றபடி அம்மையார் இயல் இசை என்ற இருதிறத் தமிழும் வல்லாராதலின் இங்குக் கீதம் என்பது இறைவன் புகழமையப்பாடும் இசை என்பதாம். முன்பாடும் - இறைவர் திருமுன்பு என்றும், பிறருக்கெல்லாம் முன்னே என்றும் உரைக்க நின்றது. ஒளிகிளர் என்க. ஒளியாவது ஞானவொளி. போற்றி - (அத்துணைகொண்டு) புகலலுற்றேன் என்று முடிக்க. அத்துணை கொண்டு என்பது இசையெச்சம். அப்பூதியாராம் போதமா முனிவர் - ஆம் என்ற ஆக்கச் சொல் உண்மை குறித்து நின்றது; "நிர்க்குணனாய் நின்மலனாய் நித்தியா னந்தனாய்" (போதம் - 9. சூ. உதாரண வெண்பா 3) என்புழிப்போல. |