போத மா முனிவர் - ஞானப் பெருமுனிவர். "தம்முதல் குருவுமாய்த் தவத்தினி லுணர்த்தவிட், டன்னிய மின்மையி னரன்கழல் செலுமே" (போதம் - 6 சூ) என்றபடி, குருவை உபாசித்துப்பெற்ற முதல்வனது திருவடி ஞானத்தாலே பதியை நாடிக் கண்டு பாசம் நீங்கப்பெற்றவராதலின் ஞானப்பெருமுனிவர் எனப்பட்டார். பாச நீங்கப்பெற்றவரென்பது, விடத்தினால் மகன் வீந்தவழி மனம் துளங்குதலின்றித் திருத்தொண்டின் முயன்றும், மகன் உயிர் பெற்றெழுந்த வழி மகிழ்தலின்றித் தொண்டினுக்குச் சிறிது இடையூறு செய்தானென்று வழி நொந்தும், வேறொரு பேர் எனக் கேட்டபோது சிந்தை முனிவு கொண்டும் இவ்வாறு வரும் வரலாறுகளா லறியப்படும். மனைவி மக்களோடு இல்லறத்தில் வாழ்ந்தாராயினும் அப்பூதியார், அப்பற்றில்லாது மனத்தின்கண் ஞானத்துறவு பூண்ட பெருமுனிவர் என்றும், அக்கண்கொண்டு அவரது சரிதம் காணப் புகுதல் வேண்டுமென்றும் உலகரை வழிப்படுத்தியது ஆசிரியரது தெய்வக்கவிநலமாம். முனிவர் என்றலே அமைவுடைத்தாயினும், போதம் என்றது "தம்முதல் குருவுமாய்த் தவத்தினி லுணர்த்தப் பெற்ற" போதத்தினை உடையவர் என்றும், மா என்றது அதனில் உறைப்புப் பெற்று நின்ற சிறப்புடையவர் என்றும் விளக்கியவாறு. செய்த திருத்தொண்டு புகலலுற்றேன் - அவரது பண்பும் தொண்டின் வரலாறும் ஒருவகையால் திருநாவுக்கரசு நாயனார் புராணத்தினுள் (1465 - 1476) படினும், அந்நாயனார் செய்த அளவே அதனுள் விரித்தும் இவர் செய்த அளவு சுருக்கியும் பேசப்பட்டன என்பதும், இனி, ஈண்டு, இந்நாயனார் அதனிற் செய்த திருத்தொண்டு விரித்துப் பேசப்படும் என்பதும் கருத்தாகக் கொள்க. அப்பூதியாராம் போதமாமுனிவர் செய்த என்று உடம்பொடு புணர்த்தி ஓதியதும் அக்கருத்தைக் குறிப்பாலுணர்த்துவதுடன், முனிவராதலிற் செய்த எனக் காரணக் குறிப்பும் சரிதத் தோற்றுவாயாகும் குறிப்பும்பட நின்றது. முன்பரவும் - என்பதும் பாடம். 66 _______சரிதச் சுருக்கம் :-காரைக்கால் என்பது கடல் துறைமுகப் பட்டினம். கடலலைகள் சங்குகளைச் சுமந்து கரையேறி அவற்றைக் கழிகளில் இட, அதனால் வளம் பெருக நிகழ்வ தவ்வூர். அவ்வூரில் வணிகர் குலத்தலைவர் தனதத்தனார் என்பவர். அவர் செய்த தவத்தினால் அவரிடமாகத் திருமடந்தை வந்து அவரித்தாள் என்று சொல்லும்படியாகப் புனிதவதியம்மையார் வந்தவதரித்தனர். தளர்நடைப் பருவத்திலேயே சிவபெருமானது அடிமைப்பாங்கு பெறும் காதல் சிறக்கும் குதலை மொழிகளையே பயின்றனர்; சிவனிடத்தன்புடன் அழகின் கொழுந்து வளர்வதுபோல வளர்கின்றாராய்ச்; சிறுமியருடன் வண்ட லாட்டயரும் போதெல்லாம் சிவபெருமானைப் பற்றிய மொழிகளையே பயின்று வளர்ந்து பெண்டன்மை யறியும் பருவமுற்றனர். இவர்களது மரபுக்கேற்கும் தொல்குலத்தில் வந்த நாகப்பட்டினத்து நிதிபதி யென்பாருடைய மைந்தன் பரமதத்தனுக்கு மணம் பேசிக் கலியாணம் செய்தனர். நம் குடிக்கு ஒரு புதல்வியாதலினால் புனிதவதியாரைக் கணவனோடு நாகப்பட்டினத்துக்கு போகாமல் காரைக்காலிலேயே வாழ்ந்திருக்கும்படி அழகிய மாடம் ஒன்றைப் பக்கத்தில் அமைத்து அளவற்ற நிதிகளையும் கொடுத்துத் தனதத்தன் அமைவு செய்தனன். பரமதத்தனும் அவ்வாறே பெருங்காதல் சிறக்க வாழ்ந்து, மனைவளம் பெருக்கி, வாணிகத்துறையில் மேம்பட்டனன். அவனது இல்வாழ்க்கையின் அருந்துணைவியாராகிய புனிதவதியாரும் சிவபெருமானது திருவடியின் |