பக்கம் எண் :


906திருத்தொண்டர் புராணம்

 

கீழே அன்பு பெருங்காதலாக விளையும்படி ஒழுகி, அதனுடனே மனையறத்தின் பண்பும் வழாது பயின்றுவந்தனர்; சிவனடியார்கள் வந்தணைந்தால் நல்ல திருவமுது அளித்தும், பொன்னும் மணியும் துகிலும் முதலியவற்றையும் தமது அன்பு மிகுதியினால் அவ்வடியவர் தகுதியின்படி வேண்டுவனவற்றைக் கொடுத்தும், சிவபெருமான் திருவடிக்கீழே உணர்வு மிகும் வண்ணம் ஒழுகிவந்தனர்.

இவ்வாறு வாழுநாளில் அங்குத், தொழில் நிமித்தம் வந்தணைந்த சிலர் பரமதத்தனுக்கு ஓரிரண்டு மாங்கனிகள் கொடுத்தனர். அவன் அவற்றை முன்வாங்கி, அவர்கள் வேண்டியவற்றை முடித்து, அக்கனிகளை வீட்டிற் கொடுக்கச் சொல்லினான். அவ்வாறு கணவன் வரவிட்ட இரண்டு மாங்கனிகளையும் புனிதவதியார் வீட்டில் வாங்கிவைத்த பின், சிவனடியார் ஒருவர் மிகுந்த பசியுடையவராகி மனையின்கண் வந்து புகுந்தனர். அவரது நிலையினைக் கண்டு "இவ்வடியார் பசியைத் தீர்ப்பேன்" என்று அம்மையார் அமுதூட்டத் தொடங்கினர். அதுபோழ்து கறியமுது உதவாது திருவமுது மட்டும் கைகூட, இப்போது அடியவரைப் பசிதீர உண்பிப்பதன் மேல் பேறு வேறு இல்லை என்று துணிந்து, பரிகலத்தில் திருவமுது படைத்துக், கணவன் வைக்கச் சொல்லி அனுப்பிய அந்த மாங்கனிகள் இரண்டினில் ஒன்றைக்கொண்டு வந்து படைத்து, மகிழ்வோடும் அமுது செய்வித்தனர். மூப்பின் தளர்ச்சியினாலும் முதிர்ந்து முடுகிய பசிநோயினாலும் அயர்ந்தணைந்த அத்திருத்தொண்டர், அம்மையார் அன்புடன்அளித்த அத்திருவமுதினை மாங்கனியோடு உண்டு அவரது செயலினை உவந்து சென்றனர். அதன்பின் பெரும்பகலில் வணிகனும் மனையில் வந்து நீராடி உண்ணப்புக, அம்மையார் கடப்பாட்டின் ஊட்டுவாராகி, அடிசிலும் கறிகளும் உரிய முறையாற் படைத்து, அவன் வைப்பித்தவற்றுள் எஞ்சியிருந்த மாங்கனியினையும் பரிகலத்தில் இட்டனர். அவ்வாறு மனைவியார் படைத்த மதுரமிக்க கனியினை உண்ட சுவை யாராமையால் வணிகன், "இதுபோன்ற பழம் இன்னுமொன்றுளது; அதனையும் இடுக" என்று கேட்க, அம்மையார், அதனைக் கொண்டுவர அணைவார் போல அவ்விடத்தினின்று நீங்கிச் சென்று, வேறு செயல் காணாது மெய்ம்மறந்து, உற்றவிடத்து உதவும் சிவபெருமான் திருவடிகளைத் தம் மனம் பொருந்த உணர்ந்தனர். உடனே அவரது கையினுள் அதிமதுரக்கனி ஒன்று வந்திருந்தது அதனைக் கொண்டு வந்து மகிழ்ந்து கலத்திட்டனர்; அதனை வணிகன் உண்ணவே அதன் சுவை அமுதினும் மேற்பட உளதாயிட, "இது முன் தரும் மாங்கனியன்று; மூவுலகினும் பெறுதற்கரியது; இதனைப் பெற்றது வேறெங்கு?" என்று அம்மையாரைக் கேட்டனன்; அம்மையார், இறைவர் தமக்குச் செய்த பேரருளின் றிறம் பிறர் அறியும்படி எடுத்துச் சொல்லத்தக்கதன்று என்று அதனை உரை செய்யவும் மாட்டாது - கற்பின் நெறியினால் கணவன் கேட்டதற்கு உண்மை உரையாமை மெய்வழியன்று என்று அதனை உரை செய்யாதுவிடவு மாட்டாது - கலங்கி நடுங்கி, எவ்வாறாயினும் செய்தபடி சொல்லுவதே கடன் என்னும் சீலத்தினாலே, இறைவரை வணங்கிக்கொண்டு, கணவனுக்குக் கனி புகுந்தபடியினை விரித்துக்கூறினார் அதுகேட்ட கணவன் அதன் உண்மையினைத் தெளியாதவனாய், இது சிவன் திருவருளாயின், இன்னமும் ஒரு கனி அவனருளால் அழைத்து அளிப்பாய் என்றனன். அம்மையார் அங்குநின்றும் அகன்று இறைவரைப் பரவி "ஈங்கு இதனை அருள் செய்யாவிடில் என் உரை பொய்யாகும்" என்று வேண்ட, அவரருளாலே ஒரு மாங்கனி வந்து எய்திற்று; அதனைக் கணவன் கையிற் கொடுத்தனர்; அவள் அதனை அதிசயித்து வாங்கினான். ஆனால் வணிகன் அவ்வாறு தன் கையிற் புக்க மாங்கனியைப் பின்னைக் காணாதபடி அது மறைந்துவிட்டது. அவன் பயந்து, மனந்தடுமாறி, அம்மையாரை ஒரு தெய்வம் என்று கருதி;