பக்கம் எண் :


பேயார் என்கிற காரைக்காலம்மையார் புராணம்907

 

அவரைவிட்டு நீங்கிவிடுதல் வேண்டுமென்று மனத்துள் துணிந்து கொண்டான். ஆனால் அதனை எவர்க்கும் சொல்லாது தொடர்வின்றி ஒழுகிவந்தனன்.

அம்மையாரை விட்டுச் செல்வதே எண்ணமாக முயற்சி செய்வானாய், அவ்வணிகன் "நான் இனிக் கடல்மீது நப்பவிற்சென்று அயல்நாட்டில் வாணிகம் செய்து நெடுநிதி கொணர்வேன்" என்று சொல்லக், கிளைஞர்கள் அவ்வாறே மரக்கலம் சமைப்பித்தனர். அதற்கு வேண்டிய கம்மியர்களையுமுடனே கொண்டு, தான்செல்லும் அயற்புலங்களில் விரும்பும் பண்டங்களை நிறைய ஏற்றி, நல்ல நாளில் கடற் கடவுளைப் போற்றிக், கப்பல் ஏறிச் சென்று, தான் கருதிய தேயத்தில் சேர்ந்து, அங்கு வாணிபத்துறையில் பெரும் பொருள் ஈட்டி, மீண்டும் அந்தக் கப்பலேறிப் பாண்டிநாட்டில் 1ஓர் பட்டினத்தைச் சேர்ந்தனன். அங்குத் தான் கொணர்ந்த பொருள்களை யெல்லாம் ஒருவழிப்படுத்திப் பெருகும்படி சேர்த்து, அவ்வூரில் ஒரு வணிகனது மகளை மணஞ்செய்து கொண்டனன்; முன்னை மனைவியாராகிய அம்மையாரிடத்துத் தான் செய்த வஞ்சனை வெளித்தோற்றாத வண்ணம் மனத்துள்ளே மறைத்துவைத்து, வெளிக்காட்சிக்கு முகமலர்ந்து ஒழுகினான்; இவ்வாறு மிகுந்த செல்வம்பெருக வாழுநாளில் ஒரு பெண் மகவைப் பெற்ற னன்; தனது முன்னை மனைவியாரைத் தான் தொழும் குலதெய்வமென்றே கொண்டு அவர் பெயரையே அம்மகவுக்குப் பேர் இட்டனன்.

இவன் இவ்வாறு இங்குத் தங்கினானாக, இப்பால், காரைக்காலில் அம்மையார் கற்பு நிலையினோடு மனையில் தங்கி அறம்புரிந்து வைகினர். அந்நாளில் வணிகன் பாண்டி நாட்டுப் பட்டினத்தில் பெருஞ்செல்வஞ் செய்தமர்ந்த செய்தியை அம்மையாரின் கிளைஞர் கேள்வியுற்றுத், தம் உற்ற கிளைஞரை அனுப்பி அச் செய்தியின் உண்மையினை அறிந்துகொண்டு, அவ்வணிகனிருந்த இடத்தில் அம்மையாரைக் கொண்டுபோய் விடுவதே கருமம் என்று துணிந்தனர். அவ்வாறே சிவிகையில் அவரை ஏற்றித் திரையான் மூடித், தோழியரும் சுற்றத்தாருமாகச் சில நாள் நடந்து கடந்து போய், அந்தப் பட்டினத்து மருங்கு சார்ந்து, மனைவியாரைக் கொண்டுவந்தணைந்த தன்மையை அக்கணவனுக்கு முன் சொல்லிவிடுத்தனர். அதனைக் கேட்டலும் வணிகன் பயங்கொண்டு, பின்னர் மணஞ்செய்த மனைவியையும் பெற்ற மகவையும் உடன்கொண்டு வந்து, அங்கு மானிளம் பிணைபோல் நின்ற அந்த மனைவியார் அடியல் தாழ்ந்து, "யான் உமது அருளினால் வாழ்வேன்; அப்பான்மை பற்றி இவ்விளங் குழவிக்கு உமது நாம மிட்டுள்ளேன்" அச்சமோடு சுற்றத்தார்பால் ஒதுங்கி நிற்க, அவர்கள் வெள்கி, அவனை நோக்கி, "உன் மனைவியை நீ வணங்குவதென்னை?" என்றனர். அவன், "இவர் மானிடம் அல்லர்; நற்பெருந் தெய்வமே யாவர்; அதை நான் அறிந்து நீங்கிய பின் பெற்ற இம்மகவுக்கு அவர் பெயரை இட்டுள்ளேன்; ஆதலால் அவரை அடிவணங்கினேன்; நீங்களும் பணிமின்கள்" என்று சொன்னான். "சுற்றத்தாரும் இதுவென் கொல்?" என்று நின்றனர்.

வணிகன் சொன்ன மாற்றம் கேட்டு அம்மையார், இறைவன் றிருவடியைத் துதித்துச், சிந்தை ஒன்றிய வுணர்வுகொண்டு, "இங்கு இவன் குறித்த கொள்கை இது; இனி, இவன் பொருட்டு இதுவரை தாங்கிநின்ற அழகு தங்குதற்கிடனாகிய தசைகளின் சுமையை இங்குக் கழித்து, உம்மிடம் அங்கு உள்ள பூத கணங்கள் போற்றும் பேய் வடிவம் அடியேனுக்குப் பாங்குபெற அருளுதல் வேண்டும்" என்று பரமரைப் போற்றி நின்றனர். அப்பொழுதே இறைவருடைய திருவருளி

____________

1இது பொருநையாறு கடலொடு கலக்குமிடத்தில் உள்ள கனகலம் என்ற ஊர் என்று வடமொழிப் பிரமாண்டபுராணம், பூர்வ பாகம் 12ஆம் அத்தியாயம் கூறுமென்ப.