பக்கம் எண் :


908திருத்தொண்டர் புராணம்

 

னாலே, வேண்டியவாறே பெறுவாராகி, உடம்பில் அழகு இடமாகப் பொருந்திய ஊனை எல்லாம் உதறிவிட்டு எலும்பு சேர்ந்த உடம்பேயாக, விண்ணும் மண்ணும் போற்றும் பேய்க் கண வடிவமாயினார். மலர்மழை எங்கும் பொழிந்தது; தேவதுந்துபிகள் முழங்கின; தேவரும் முனிவரும் ஆர்த்தனர்; பூதகணங்கள் குணலையிட்டாடின; சுற்றத்தார்கள் தொழுதஞ்சி அகன்று போயினர்.

அப்பொழுது உண்டான ஒருமை ஞானத்தினால் இறைவனைப் பாடி, அம்மையார் "திருவடி போற்றும் நற்கணத்தினி லொன்றானேன் நான்" என்ற கருத்துடன் அற்புதத் திருவந்தாதி பாடியருளினர்; இறைவரின் சீர்ப்பாடுகளை ஆய்ந்த திருவிரட்டை மணி மாலையினையும் அருளிச்செய்து, ஞானப் பேருணர்வு பொங்கத் திருவருள் கூர்தலால் திருக்கயிலையை வழிபடும் வழியால் வடதிசை நோக்கிச் செல்வாராயினர்.

அவரைக் கண்டவர்கள் வியப்புற்று அஞ்சி அவ்விடத்தைவிட்டு ஓடுபவர்களாய் "பேய்! பேய்!" என்று தாந்தாம் கண்ட அக்கோலத்தின் தன்மையை உள்ளவாறே கூறுவதனைக் கேட்ட அம்மையார், "இறைவர் என்னை அறிவாராயின், அதுவே சாலும்; அறியா நிலையின் மாக்களுக்கு நான் எவ்வுருவாகக் காணப்பட்டாலென்னை?" என்று சொல்வாராயினர். வடதிசைத் தேயங்களை யெல்லாம் மனவேகத்தினும் மிக்க வேகத்தாற் சென்று திருக்கயிலையின் அருகு அணைந்தனர்; அங்குக் காலினாற் செல்லுதலைத் தவிர்ந்து. தலையினால் நடந்து, மலை மீதேறி, மகிழ்ச்சிமீதூரச் சென்றனர். அப்போது இமயவல்லியாரது திருநோக்கு இவர்மேற் பதிந்தது. அம்பிகை அதிசயித்து இறைவரை நோக்கித் "தலையினால் நடந்து இங்கே ஏறிவருகின்ற எலும்புடம்பின் அன்பு என்னே?" என்று வினவ, இறைவர் "வருகின்ற இவள் நம்மைப் பேணும் அம்மையே யாவள்; இந்தப் பெருமைசேர் வடிவத்தினையும் வேண்டிப் பெற்றுக் கொண்டனள்" என்றருளினர். அப்போது அம்மையாரும் அருகு வந்தணைய, "அம்மையே!" என்ற ஒரு மொழியினை உலகமெல்லாமுய்ய இறைவர் அருளிச் செய்தனர். அதுகேட்டு அம்மையார் "அப்பா!" என்று அலறி, அவருடைய திருவடிகளில் வீழ்ந்து எழுந்து நின்றனர். இறைவர் "இங்கு நம்மிடத்து வேண்டும் வரம் யாது?" என்று கேட்க, "என்றும் மாறாத இன்ப அன்புவேண்டும்; பிறவாமை வேண்டும்; அன்றிமீண்டும் பிறப்பு உளதாயின் உன்னை என்றும் மறவாமை வேண்டும்; இன்னும்; நீ ஆடுகின்றபோது நான் மகிழ்ந்து பாடிக்கொண்டு உன் திருவடியின் கீழே இருந்தலும் வேண்டும்" என்றனர். இறைவர் அதனைக் கூடும்படி அருள் செய்வாராகித், "தென்றிசையிலே நீடும் வாழ்வினைத் தரும் பழையனூர்த் திருவாலங்காட்டில் நாம் ஆடும் பெரு நடனத்தை நீ கண்டு ஆனந்தத்துடன் எப்போதும் நம்மைப் பாடிக்கொண் டிருப்பாயாக" என்றருளிச் செய்தனர் அம்மையாரும் இறைவரை வணங்கிக் கயிலையினின்றும் போந்து பேரன்போடும் திருவாலங்காட்டினைத் தலையினால் நடந்து அப்போதே சேர்ந்தனர்.

அங்கு அண்டமுற நிமிர்ந்தாடுகின்ற ஐயனது பெருங் கோலத்தினைக் காணும் பொழுது "கொங்கை திரங்கி" என்று தொடங்கி மூத்த திருப்பதிகத்தினை அத்திருத் தலத்தினைச் சார்ந்து திருக்கூத்தைப் பாடியருளிப் போற்றி, அங்கு எழுந்தருளினர். அந்நாளில் "எட்டி யிலவம்" என்னும் பதிகத்தினைக் "குழகன் ஆடும்" என்ற கருத்துடன் திருநடனம் பற்றிப் பாடியருளினர். இவ்வாறு ஐயனது எடுத்தபாத நிழலின் அம்மையார் என்றுமிருக்கும் பேறு பெற்றனர்.