பக்கம் எண் :


910திருத்தொண்டர் புராணம்

 

16. கணவன் வினவிய செய்திக்கு உண்மையைக் சொல்லாது விடுதல் கற்பு நெறிக்கு இழுக்காகும்.

17. இறைவரது திருவருள் நிகழ்ச்சி பக்குவமுடையோர்க்கு விளங்குவதன்றி ஏனைச் சாமானியர் தெளிந்தறிதற் பாலதன்று (1745).

18. இருவேறு தருமங்கள் தம்முள் முரண்பட்டபோது உண்மையை ஒளியாது உரைத்து விடுதலே சிறந்த தருமமாம் (1744).

19. எல்லாம் சிவனிடத்தே ஒப்புவித்த அன்பு நிலையில் உள்ளார்க்கு வரும் துன்பே கவலையே முதலியவற்றைத் தானே தாங்கி நிற்பது சிவனது செயல் (1745 - 1746).

20. அன்பு நெறியிற் றெளியாதார்க்கு அருள் வெளிப்பாட்டு நிகழ்ச்சிகள் அச்சமே விளைப்பன. (1747).

21. மரக்கலம் செய்தல், மரக்கலத்தில் கடல் கடந்து வேற்றுப் புலங்களில் விரும்பும் பண்டம் கொண்டு சேர்த்து வாணிபம் செய்தல் என்றிவை பல்லாயிரம் ஆண்டுகளின் முன்னரே நமது முன்னோர்கள் அறிந்து கையாண்டுவந்து பழக்கத்தில் வந்தவையாம். அந்தத் தொழில்களும் அயல் நாட்டு வாணிபமும் அறவே ஒழிந்த நிலையில் நமது நாடு காணப்படுவது நம் நாட்டின் தாழ்ந்த நிலையினைக் காட்டுவது (1748 - 1749).

22. மனைவியை வஞ்சித்துப் பொய்ப்போக்குக் காட்டி நீத்துச் சென்று விடுவது கணவன்பால் நல்லொழுக்கமன்று. (1748 - 1752).

23. (குல) தெய்வத்தின் பெயரை இட்டழைத்ததனால் அத்தெய்வத்தை மகிழ்விப்பது கருதி, மகவுக்குப் பெயராக இடுவது முந்தைநாள் வழக்கு (1754).

24. மனைவியைக் கணவன் புறக்கணித்து நீத்து அகன்று விடினும், அது பற்றி மனைவியின் சுற்றத்தார் பூசல் செய்யாது, எவ்வாற்றாலும் மனைவி கணவனுடன் வாழ வேண்டியது கற்பு நெறியெனக்கொண்டு, மனைவியைத் தாமே கொண்டு போய்க் கணவனிடம் சேர்த்துவிட முயல்வது நல்ல சுற்றத்தாரின் செயல். (1757).

25. கணவன் பிரிந்தொழுகி நீத்த மனைவியை அவனிடம் சேர்த்துவிடக் கொண்டுபோம்பொழுது திரையிட்ட சிவிகையிற் கொண்டு செல்வது முந்தை நாட் பழம்பெருங் குடிகளின் வழக்கு. (1758).

26. மனைவியாரைத் தெய்வமென்று எண்ணித் துணிந்துகொண்ட கணவன் அத்துணிவுபற்றி நிலமுற வீழ்ந்து பலருங் காண வணங்குதலு மோரியல்பாகும். (1761).

27. உடலின் நாயகனாற் கைவிடப்பட்டபோது அவனை விட்டொழிந்து உயிரின் நாயகனாகிய சிவன்பாலே சித்தம் வைத்து அவனுடைய சார்பே சார்பாக அடைந்து விடுவது உண்மையறிந்த பெண்ணியல்பு. (1765).

28. சிவபூதங்களின் வடிவாகிய பேய் வடிவம் உயர்வுடையது; ஆனந்த மயமானது; இறைவர் திருக்கூத்தாடும்போது பாடியும் ஆடியும் மகிழ்ந்து வருதற்கியைபுடையது. (1765 - 1768).

29. தாம்வேண்டிப் பெற்றுக்கொண்ட பேய் வடிவத்தினைக் கண்டு உரை இகழ்ந்தும் பயந்தும் ஓடினும், அம்மையார் "அறியா மாக்களாகிய உலகர்க்கு நான் எவ்வுருவமாய்த் தோன்றினும் என்னை?; எனது இறைவன் என்னை அறிகுவரே என்று அமைந்தனர். இது உண்மை யுணர்ந்தோரது நிலை. உலகர் அறியாது கூறும் புகழ்ச்சி இகழ்ச்சிகளைப் பொருட்படுத்தாது, இறைவன் றிருவுள்ள நேர்படுதலையே வேண்டி அமைந்து ஒழுகுவர் அறிவுடையோர். (1770).