பக்கம் எண் :


அற்புதத் திருவந்தாதி923

 

வென்பே யணிந்திரவிற் றீயாடு மெம்மானார்
வன்பேயுந் தாமு மகிழ்ந்து.

30

(அருட்கண்ணால் காட்டப் பெறாத) பிறர் எவராலும் அறியப்படாத பெருமையுடையவரும் தாமே; அவர்களிற் பிறராகிய அருட்கண்ணுடையோரது பேருணர்விற் கண்டு அனுபவிக்கப்படுகின்றவரும் தாமே; (அவர் யாவர் எனில்?) தம்முடனே மூவர் என்றே எண்ணி ஏமாந்து காலாந்தரத்திற் கழிந்த பிறராகிய பிரமவிட்டுணுக்களுடைய எலும்பை அணிந்து இரவில் தீயில் நின்று வலிய பேயும் தாமும் மகிழ்ந்து ஆடும் எம்மானேயாவர்.

பிறர் அறியலாகா - "அருட் கண்ணால் நோக்காதார் அல்லாதாரே" (தேவா) என்ற பிறர்; பிறர் அறியும் - அவரல்லாத பிறர். உலகத்தோடிருந்தும் அவர்களாலறியப்படாத பிறர் என்றலுமாம். அருள் காட்டாகக் காணும் முத்தர்; பிறருடைய "மூவ ரென்றே யெம்பிரானொடு மெண்ணி விண்ணாண்டு மண்மேற், றேவ ரென்றே யிறுமாந்து" திரிபவர்; பிரம விட்டுணுக்கள். "பிரமனும் போயிருங்கடன் மூடியி்றக்கு மிறந்தான் களேபரமுங் கருங்கடல் வண்ணன் களேபர முங்கொண்டு கங்களாராய்" (தேவா) பேயும் தாமும் மகிழ்ந்து ஆடும் எம்மானார் - பெருமையருந்தாமே; பேருணர்வும் தாமே என்று கூட்டுக. உலகம் சங்கரிக்கப்பட்டபோது என்பேயணிந்து ஈமத்தில் ஆடுதலால் என்றும், பேயும் தாமும் மகிழ்ந்து ஆடுதலால் என்றும், பிறர் அறியலாகாமைக்கும் பிறர் அறிய வுணர்வினுள் நிற்றலுக்கும் முறையே காரணங்கள் கூறியவாறு. பேருணர் வென்றார் மூத்த நிலையில் அனுபவிக்கும் முற்றுணர்வாதலின்.

30

மகிழ்தி மடநெஞ்சே!; மானுடரி னீயுந்
திகழ்தி; பெருஞ்சேமஞ் சேர்ந்தா;- யிகழாதே;
யாரென்பே யேனு மணிந்துழல்வார்க் காட்பட்ட
பேரன்பே யின்னும் பெருக்கு.

31

நெஞ்சே! மகிழ்வாயாக; மானுடர்க்குள் நீ மிக்கு விளங்குகின்றாய்; சிவனுக்காட்பட்ட பேரன்பினாலே பெருஞ்சேமம் பெற்றாய்; அதனோடமையாது அந்தப் பேரன்பினையே இன்னும் பெருகச் செய்வாயாக.

சேமஞ் சேர்ந்தா யாதலின் மகிழ்தி; திகழ்தி; பெருக்கு என்று முடிக்க. பெருஞ்சேமம் - பெருங்காவல். "பெருங்காவல் பெற்றாராய்" (திருஞான - புரா - 60). திகழ்தல் - மிக்கு விளங்குதல். மேம்படுதல். "உலகத் தொருநீ யாகத் தோன்ற" (முருகு). இகழாதே அணிந்து உழல்வார் என்க.

31

பெருகொளிய செஞ்சடைமேற் பிள்ளைப் பிறையின்
ஒருகதிரே போந்தொழுகிற் றொக்குந் - தெரியின்
முதற்கண்ணான் முப்புரங்க ளன்றெரித்தான் மூவா
நுதற்கண்ணான் றன்மார்பி னூல்.

32

நுதற் கண்ணையுடைய சிவபெருமானது மார்பிற் புரளும் பூணு நூல்அவரது சடைமேல் உள்ள பிறையின் ஒரு கதிரே போந்து ஒழுகியது போன்றிருக்கின்றது.

பெருகொளிய என்பதனை மார்பின் என்றதனுடனும் கூட்டுக. சடையிற் பிறையின் கதிர் அச்சடைபோல விரிந்து செவ்வொளி வீசும் மார்பினும் போந்து ஒழுகியது போல என்க. பிள்ளைப் பிறையாதலின் போந்து ஒழுகிற்றே போலும் என்று தற்குறிப்பேற்றக் குறிப்பும் காண்க. ஒரு கதிரே - பிள்ளைப் பிறையானமையின் ஒரு கதிரே கொண்டது. முதற்கண்ணான் - எல்லார்க்கும் முன்னேயுள்ளவன்.