பக்கம் எண் :


அற்புதத் திருவந்தாதி925

 

அடுங்கண்டாய் வெண்மதியென் றஞ்சி யிருள்போந்
திடங்கொண் டிருக்கின்ற தொக்கும் - படங்கொள்
அணிமிடற்ற பேழ்வா யரவசைத்தான் கோல
மணிமிடற்றி லுள்ள மறு.

35

இறைவரது மிடற்றில் உள்ள விடத்தினது கறுப்பு, தன்னை மதி அடகுமென்று அஞ்சி இருள் புகலடைந்து தங்குமிடம் போன்றது.

இருள் அஞ்சிப்புகலடைந்தது போலும் என்பது தற்குறிப்பேற்ற உவமை அணி. இடங்கொண்டிருக்கின்றது - புகலடைந்தது; மறு - மறுப்போன்ற விடத்தின் கருநிறத்தை; மறு என்றதுபசாரம். கண்டாய் - அசை.

35

மறுவுடைய கண்டத்தீர்! வார்சடைமே னாகந்
தெறுமென்று தேய்ந்துழலு மாவா! - வுறுவான்
றளரமீ தோடுமேற் றானதனை யஞ்சி
வளருமோ பிள்ளை மதி.

36

திருநீலகண்டரே! உமது சடையின்மே லிருக்கும் அரவு தன்னை வந்தடர்க்கு மென்று எண்ணித், தேய்ந்து, பிள்ளைமதி வருந்தும்; அதன் மேலும்அது தளரும்படி மேல் வந்து ஓடுமாகில் மதி வளர்தலும் கூடுமோ?

தற்குறிப்பேற்ற அணி. இறைவரது சடைமேற்றங்கிய பிறை வளராது ஒரே தன்மையதாய் நிற்றலுக்குக் காரணங் கற்பித்தபடி; ஆ ஆ!- இரக்கக் குறிப்பு; அம்மையார் தாயாந்தன்மையிற் பிள்ளைமதிக் கிரங்கிய நிலை; பிள்ளை - என்ற குறிப்புமது.

36

மதியா வடலவுணர் மாமதின்மூன் றட்ட
மதியார் வளர்சடையி னானை - மதியாலே
யென்பாக்கை யாலிகழா தேத்துவரே லிவ்வுலகில்
என்பாக்கை யாய்ப்பிறவா ரீண்டு.

37

சடையினானை யிகழாது ஏத்துவரேல் உலகில் உடம்பெடுத்துப் பிறவார்.

என்பு ஆக்கையால் - எலும்புகளை மாலையாகக் கோத்து அணிதலால்; இகழ்தற்குக் காரணம் கூறியபடி. மதியாலே ஏத்துவரேல் - என்று கூட்டுக. "அயர்வாள் மதியினாலே சென்னியிளம் பிறையணிவார் கோயில் வாயிற் றிசைநோக்கிக் கைதொழுதாள்" (திருஞான - புரா - 475); என்பு ஆக்கையாய் - எலும்பினால் தாங்கப்பட அமைந்த உடம்புடையராய். இனம்பற்றி எலும்பில்லாத உடம்பும் கொள்க. ஈண்டு - இவ்வுலகமேயன்றிப் பிறவி சேரும் எவ்வண்டமும் கொள்க. சிவனை ஏத்துவோர் பிறவாமை பெறுவர் என்பது.

37

ஈண்டொளிசேர் வானத் தெழுமதியை வாளரவந்
தீண்டச் சிறுகியதே போலாதே - பூண்டதேரர்
தாரேறு பாம்புடையான் மார்பிற் றழைந்திலங்கு
கூரேறு காரேனக் கொம்பு.

38

சிவபெருமான் மார்பில் விளங்கும் பன்றிக் கொம்பு சந்திரன் அரவம் தீண்டச் சிறுகியது போலும்.

வெள்ளியதாய் வளைந்துள்ள பன்றிக்கொம்பு சிறுகிய பிறைபோன்றது என்பதும், பிறை சிறுகியதற்குக் காரணம் அரவந்தீண்டியது போலும் என்பதும் ஆம். தற்குறிப்பேற்றத்தை உள்ளுறுத்த உவமையணி. ஒளிசேர்வானம் - பரந்து சிவந்த மார்புக்கும் பிறை - எனக்கொம்புக்கும் உவமை. போலாதே - ஏகாரம் எதிர்