சத்தியாதலின் ஒரு பாகத்துக்குரியவர்; சங்கரநாரயணர் கோயிலில் இத்திருவுருவம் தேற்றமாய் வழிபடப்படுகின்றது. இருபாலும்..... நிறந்தெரிய மாட்டோம் - "விரைக்கம லத்தோன் மாலு மேவலான் மேவி னோர்கள், புரைத்ததி கார சத்தி புண்ணிய நண்ணலாலே" (சித்தி. 54); "அரியர்த்த வடிவம் முதலான இருபத்தைந்தும் சத்திவடிவங்களே. அச்சத்தியின் கூறாகிய ரோதயித்திரி சத்தி திருமாலை அதிட்டித்து நின்று காத்தற்றொழிலை நடாத்துதலின் அச்சத்திக்கு அதிட்டானமா யமைந்த திருமாலின் வடிவமும் இறைவனுக்குச் சத்தியவடிவமாக உபசரித்து வழங்கப்படும். திருமால் வடிவம் பிரதிட்டா கலையின்பால தாகவின், சாந்திகலையின் பாலுள்ள மகேசுர வடிவத்துள்ளதாகக் கூறல் அதிட்டிக்கும் சத்தியி னியைபாலேயாம் என்பது உய்த்துணர்ந்து கொள்ளப்படும். அயன் திருமால் வடிவங்கள் பிராகிருதமாகலின் அவை சிவதாதமின்மிய சத்தி வடிவமாதல் பொருந்தாமையும் அறியற்பாற்று. சிவபிரான், சனனிரோதயித்திரி - ஆரணி என்னும் சத்திகள் மூன்றினாலும் தோற்றம் நிலை - இறுதி என்றும் முத்தொழில் செய்யும் வடிவங் கொண்டருளி மகேசுர தத்துவத்தில் வைகுவன். அவ்வடிவங்கள் போலவே, பிராகிருத புவனத்து முத்தொழில் செய்யும் முச்சத்திகளால் அதிட்டிக்கப்படும் அயன் அரி அரன் என்போர்க்கும் வடிவங்கள் உளவென்பது "புவம்வளி புனல்" என்னும் ஆளுடைய பிள்ளையாரது சிவபுரம், பண் - நாட்டபாடைப் பதிகத்தின் முதன் மூன்று திருப்பாட்டினுங் காணலாம்." கருத்துக்கேற்ப இப்பாட்டிலும் இறைவரது பெயர் மறைந்து அவாய் நிலையாற், பொருள் செய்ய நிற்பதும் காண்க. 41 நேர்ந்தரவங் கொள்ளச் சிறுகிற்றோ? நீயதனை யீர்ந்தளவே கொண்டிசைய வைத்தாயோ? - போந்து வளங்குழலித் தாய்வளர மாட்டாதோ? வென்னோ? விளங்குழவித் திங்களிது. 42 இளம்பிறை யிதுதான், பாம்பு கவர்ந்ததனாற் சிறுகியதோ?; அன்றி, நீ பிளந்து அதனை அவ்வளவிற் பொருந்த வைத்தனையோ?' வளமுடைய மிக்க இளமையால் வளரமாட்டாதோ?; என்னோ? திங்கள் விரிதல் சுருங்குதல் முதலியன இன்றி என்னும் ஒரு தன்மைத்தாகி இறைவரது சடையில் மூன்றாம்பிறையா யிருப்பதற்குத் தற்குறிப்பேற்ற அணி வகையால் பல காரணங்களைக் கற்பித்தவாறு. இது அம்மை நேரில் அணிமையிற் கண்ட செய்தி குறித்தது. 22ஆவது பாட்டும் பிறவும் பார்க்க. என்னோ? - இரக்கக் குறிப்பு. 42 திங்க ளிதுசூடிச் சில்பலிக்கென் றூர்திரியேல்; எங்கள் பெருமானே யென்றிரந்து - பொங்கொளிய வானோர் விலக்காரேல் யாம்விலக்க வல்லமே? தானே யறிவான் றனக்கு. 43 எம் இறைவரே! திங்களைச் சூடிக்கொண்டு, சிறு பலிக்கு ஊரூர் திரிய வேண்டாம் என்று ஒளியுடைய தேவர்கள் விலக்காவிட்டால் இயல்பாகவே எல்லா அறிவுமுடைய பெருமானை யாமே விலக்க வல்லோம்? திங்களிது சூடி - உலகத்தை விளக்கி யமுது அளிக்கும் திங்களைச் சூடியவர் பலி திரிதல் வேண்டா என்பது குறிப்பு; சில்பலி - சிறு பிச்சை; ஊர் - ஊர்தோறும்; ஒளிய வானோர் - ஒளியுடையமையால் தேவர் எனப்படுவார். திவ் - ஒளி; ஒளியாவது தவ வலிமையும் அறிவுடைமையும். யாம் - ஒளியும் அறிவும் இல்லாத யாம்; |