தானே அறிவான் - இயல்பாகவே முற்றறிவுடையவர்; தனக்கு - வன்னை. நான்கனுருபு இரண்டனுருபாய் வந்த உருபு மயக்கம்; தாமே இயல்பாகவே முற்றறிவுடையாரைத் தெருட்ட வல்லவர் யாவர்? என்பது; என்றறிந்து - என்பதும் பாடம். 43 தனக்கே யடியனாய்த் தன்னடைந்து வாழும் எனக்கே யருளாவா றென்கொன் - மனக்கினிய சீராளன் கங்கை மணவாளன் செம்மேனிப் பேராளன் வானோர் பிரான். 44 தமக்கே யடியனாய்த் தம்மையே தஞ்சமாக அடைந்து வாழும் எனக்கு இறைவர் அருளாதவாறு என்னே! தனக்கே - வேறொருவர்க்குமின்றி என ஏகாரம் பிரிநிலை. 3ஆவது பாட்டுப் பார்க்க. "பொதுநீக்கித் தனைநினைய வல்லார்க் கென்றும் பெருந்துணையை" (தேவா); தன்னடைந்து - இரண்டனுருபு. தொக்கது. தஞ்சமாக அடைந்து; எனக்கே - ஏகாரம் அசை. கொல்! இரக்கக் குறிப்புத் தரும் அசை நிலை; மனக்கு - அத்துச்சாரியை புணர்ந்து கெட்டது. 44 பிரானவனை நோக்கும் பெருநெறியே பேணிப் பிரானவன்றன் பேரருளே வேண்டிப் - பிரானவனை எங்குற்றா? னென்பீர்க?; ளென்போல்வார் சிந்தையினும் இங்குற்றான்; காண்பார்க் கெளிது. 45 சிவனையே குறிக்கொள்ளும் சிவநெறியினையே விரும்பி அவனது அருளினைப் பெறுதலன்றி வேறொன்றும் கருதாது அவன் எங்குற்றான் என்று காணும் தீவிர எண்ணமுடையீர்களே! காண்பார்க்கு அவ்வாறு எளியனாய் என்போல்வார் சிந்தையினும் விளங்கி இங்குற்றான். பிரான் - சொற் பொருட் பின் வருநிலை. மும்மையினும் சிவனே பெருமான் என்றது குறிப்பு. இவை முறையே முழுமுதற்றன்மை, பேரருளுடைமை, எங்கு நிறைதல் என்ற இயல்புகளின் குறிப்புமாம்: "மன்னு சிவன்" (போதம். 5 வெண்) சிற்றுரை பார்க்க. நோக்குதல் - அழுந்தியறிதல்; பெருநெறி - ஒளி நெறி, சிவநெறி எனப்பட்டது. "பெருநெறிய பிரமாபுரம்" (தேவா). "எங்குற்றான்?" என்பீர்கள்! - விளி; என்பீர்களே; "சிவன் எவ்விடத்தான்? எவர் கண்டனர்? என் றோடிற்றிலேன்" (திருவா). எளிது - அன்பர் சிந்தையில் அரன் விளங்க வீற்றிருத்தலின், அங்கு அவனைக் காண்பதெளிது என்பது குறிப்பு. என்போல்வார் சிந்தையினும் - உம்மை இழிவு சிறப்பு. "என்போ லிகள்பறித் திட்ட இலையு முகையுமெல்லாம், அம்போ தெனக்கொள்ளும்" (திருவிருத்). 45 எளிய திதுவன்றே! யேழைகாள்! யாதும் அளியீ! ரறிவிலீ! ராவா - வொளிகொண்மிடற் றெந்தையராப் பூண்டுழலு மெம்மானை யுண்ணினைந்த சிந்தையராய் வாழுந் திறம். 46 சிவபெருமானை உள்ளே நினைந்துள்ள சிந்தையுடையவராகவே வாழ்கின்ற திறமானது எளிதன்றே! ஏழை மக்களே! சிறிதும் அளியற்றிருக்கின்றீர்கள்! அறிவில்லாதிருக்கின்றீர்களே! ஆ! ஆ!. |