பக்கம் எண் :


அற்புதத் திருவந்தாதி929

 

இறைவரைப் பற்றிய சிந்தை நீங்காது வாழும் திறம் எளிதிற் கூடுவதன்று; அளிப் பெருக்கினால் அது கூடுவது. இது எளிதேயாம் என்றலுமொன்று. அளி - கருணை. அளியீர் - அளியில்லாதீரே! "அளிவள ருள்ளத் தானந்தக் கனியே" (திருவிசைப்பா). யாதும் அளியீர் - அடியார்க்கு ஒன்றும் தரமாட்டீர் என்றலுமாம். ஆ! ஆ! இரக்கக் குறிப்பு. யாதும் எளியதிதுவன்றே. யாதும் - சிறிதும்; ஒன்றும். அளியீர் - இரங்கத்தக்கவர்களே! என்றலுமாம்.

46

திறத்தான் மடநெஞ்சே சென்றடைவ தல்லாற்
பெறத்தானு காதியோ பேதாய் - நிறத்த
விருவடிக்க ணேழைக் கொருபாக மீந்தான்
றிருவடிக்கட் சேருந் திரு.

47

உமையம்மையாருக்கு ஒரு பாகம் ஈந்த இறைவரது திருவடியின் கண்ணே சேர்கின்ற முத்தித் திருவானது, இடைவிடாது சிந்திக்கத் தரும் திருவருளின் திறத்தானன்றி, மடநெஞ்சே, வேறு உனது ஆன்மபோத முயற்சி வீதத்தாற் பெறுதற்குரிமையுடையை யாவையோ? (ஆகாய்);

திறம் - அருட்டிறம்; ஏகனாகி யிறைபணி நிற்றலும், சிவனருள் கண்டுகாட்டக் காண்டலுமாகிய தன்மைகள். நிறத்த - நிறம் பொருந்திய; இரு - வடி - கண் - ஏழை - பெரிய கூர்மையுடைய கண்களையுடைய உமையம்மையார். இருவடிக்கண் - இரண்டு மாவடும் பிளவு போன்ற கண் - எனலுமாம். "வடிக்கண் இவை" (திருக்கோவையார்).

47

திருமார்பி லேனச் செழுமருப்பைப் பார்க்கும்;
பெருமான் பிறைக்கொழுந்தை நோக்கும் - ஒருநாள்
இதுமதியென் றொன்றாக வின்றளவுந் தேரா
ததுமதியொன் றில்லா வரா.

48

மதியில்லாத அரவு, இறைவரது மார்பில் அணிந்த பன்றிக் கொம்பினைப் பார்க்கும்; சடையிற் சூடிய பிறைக் கொழுந்தினைப் பார்க்கும்; இவ்வாறு இன்று வரை இவ்விரண்டனுள் இதுதான் மதி என்று தேறாது நிற்கும்.

மதி - சந்திரன்; இதுதான் என்று தெளிந்து நிச்சயிக்க லாகாமையின் பிறையினைத் தீங்கு செய்து மறைக்க முடியாது நிற்கின்றது என்று காரணங் காட்டிய தற்குறிப்பேற்ற அணி. மதியிலாமையின் - தேராது என்று தேராமைக்குக் காரணங் காட்டும் வகையால் உடம்பொடு புணர்த்தி ஓதினார். மயக்கவணி. மதியொன்று ஒன்றும் - ஒரு சிறிதும். "ஓர் ஊணுமுறக்கமுமின்றி" (பொன். வண் - அந் - 34); ஒருநாள் - ஒரு நாளேனும்.

அராவி வளைத்தனைய வங்குழவித் திங்கள்
விராவு கதிர்விரிய வோடி - விராவுதலாற்
பொன்னோடு வெள்ளிப் புரிபுரிந்தாற் போலாவே?
தன்னோடே யொப்பான் சடை.

49

இளம் பிறையின் வெள்ளிய கதிர்கள் விரிய ஓடிப் பொருந்துதலால் பொன்னிழையோடு வெள்ளியிழை புரிந்தாற் போலிருக்க மாட்டாவோ? தனக்குவமையில்லாத இறைவரது சடை.

அராவி வளைத்தனைய - வெள்ளியைஅராவி வளைத்தது போன்றது பிறையின் வடிவம். சடைகள் - செக்கர் வானத்தின் வடிவம்போன் றிருத்தலின்அவற்றின் மேல் பிறையின் வெண்கதிர் தோயப் பொன்னும் வெள்ளியும் சேர்த்துத் திரித்துப் புரிந்ததுபோலும். தன்னோடே ஒப்பான் தன்னைத்தானே ஒப்பான். தன்னை ஒப்பார் வேறில்லாதவன்; இறைவரது சடையினை இப்பாட்டாற் கூறிய அம்மை,