நஞ்சினை உண்டதனால்; கண்டம் கறுத்ததுவும் அன்றியே - மிடறு கறுத்ததுவுமல்லாமல்; செஞ்சடைமேற் பால் மதியினுள்ளே மணி மறுவாய்த் தோன்றும் வடு உண்டு - சிவந்த சடையின் மேலே சூடும் பால்போல வெள்ளிய மதியினுள்ளே வடுவும் உண்டு. நஞ்சம் உண்டதனால் இறைவரது கண்டம் கறுத்தது; அதனோடு அமையாது சடையிற் சூடிய பிறையினும் மறுவாகிய வடு வுண்டாயிற்று. விடத்தின் கொடுமை யுணர்த்திய உயர்வு நவிற்சி யணி. யாழ் இயற்று வோர்பாற் சார்ந்த சீதம் யாழினையும் தாக்கி, யாழ் வீக்கழியும் என்று யாழ்ப்பாணர்க்கு இறைவர் பலகையிட்ட வரலாறு இங்கு நினைவு கூர்தற்பாலது; "பாணர் பாடுஞ், சந்தயாழ் தரையிற் சீதந் தாக்கில் வீக்கழியுமென்று, சுந்தரப் பலகை முன்னீ ரிடுமெனத் தொண்ட ரிட்டார்" (திருநீலகண்ட யாழ்ப்பாணர் புராணம் 6.) பணியுறும் - வார்-(நீண்ட) சடை என்று கூட்டி உரைப்பாருமுண்டு. பான்மதி - பால் - பான்மை. நல்லூழ் - உடைய என்று கொண்டு உரைத்தலுமாம். மணி மறுவாய் - வடுவாயினும் அழகாய்த் தோன்றும் என்றபடி. வடிவுத் தோன்றும் என உம்மை விரித்துரைக்க. 55 வடுவன றெனக்கருதி நீமதித்தி யாயிற் சுடுவெண் பொடிநிறத்தாய் சொல்லாய் - படுவெண் புலாற்றலையி னுள்ளூண் புறம்பேசக் கேட்டோ நிலாத்தலையிற் சூடுவாய் நீ. 56 திருநீறணிந்த மார்பினையுடையவரே! இறந்த பிரமனது மண்டை யோட்டில் பலி ஏற்று உண்டது குற்றமென்று புறத்தினுள்ளார் பேசக் கேட்டோ நீ நிலா வைத் தலையிற் சூடுவாய்; அது (கபாலத்திற் பலி உண்ணுதல்) குற்றமன்றென்று நீர் கருதுவீராகில் சொல்லுவீராக! நிலாவைச் சூடுதல். மண்டையோட்டிற் பலி ஏற்றுண்டதற்கு ஒரு பரிகாரம் போல வுள்ளதென்று கற்பனை செய்தபடி. புறம் - புறத்தார் பேசும் ஏச்சு. நீ - முன்னையது, வடுவன்று என மதித்த நிலைக்கும், பின்னையது, வடுவாமென்று கொண்டு பரிகாரம் செய்தல் போன்று செயல் செய்த நிலைக்கும் வந்தன. நிறம் - மார்பு; படு தலை - இறந்த பிரமனது தலை ஓடு. தலை - ஓட்டினுக்கு. ஆகு பெயர்; ஊண் - ஊண்ணுதலை; இரண்டனுருபு விரிக்க. ஊண் -முதனிலை நீண்ட தொழிற்பெயர். 56 நீயுலக மெல்லா மிரப்பினு நின்னுடைய தீய வரவொழியச் செல்கண்டாம் - தூய மடவரலார் வந்து பலியிடா ரஞ்சி விடவரவ மேலாட மிக்கு. 57 இறைவரே! நீர் உலகமெங்குஞ் சென்றிரந்தாலுங், உம்முடைய தீய பாம்பை விட்டுச் செல்வீராக; பாம்பு மேலே படம் விரித்தாடக் கண்டாற் பயந்து தூய பெண்கள் வந்து பலியிட மாட்டார். பாம்பினை அணியாதிருக்க மற்றுமொரு காரணங் கூறியபடி. 27, 28 முதலிய பாட்டுக்களில் முன் உரைத்தவையும் பிறவும் பார்க்க. அம்மையாரது தாயாகிய தலையன்பின் றிறத்தால் தெருட்டியவா றமைந்தது இத்திருப்பாட்டு. தூய - பலியிடுதலாற் றூய்மை யாதலை விரும்பிய நீர் பலிக்குச் செல்வது பலியிடும் அவரைத் தூய்மையாக்கும் அருளின் பொருட்டே யாதலின் அக்காரியத்தின் பொருட்டேனும் பாம்பினை அணிந்து, செல்லாதீர் என்றபடி. "தலத்துத் தன் |