மேலாய மேகங்கள் கூடி என்றும், ஓர் என்றும், கூறிய இலேசால் மேகங்கூடி மறைப்பினும் பொன் ஒளியே மிக்கு மேலெழும் என்பது கருத்து. காருரிவை - கரியதோல்; உவமையிற் கூறிய அக் கார்போன்ற உரிவை என்றலுமாம். அன்று போர்த்தபோது என்க. அன்று என்பது யானையின் சங்காரகாலத்தையும், போது என்றது இதனுள் தோல் போர்த்த நிலையையும் குறித்தன. மேகங்கள் நீர் பெய்தல் போலக் களிறு மதம் பெய்தது என்பார் மதகளிறு என்றார். பண்பும் உருவும் தொழிலும் பற்றிய உவமை. உரிவை - உரித்தலாற் பெறப்படுவது என்ற காரணம் பற்றித் தோலுக்குப் போந்த பெயர்; அறுவை - தறியினின்றும் அறுத்தலாற் பெறப்படுவது பற்றித் துணிக்கு வந்தது போல ஐகாரம் செயப்படு பொருளுணர்த்தும் விகுதி. புதைத்தல் - தனக்குள் ஆக்கி மூடுதல். 60 1அன்றுந் திருவுருவங் காணாதே யாட்பட்டேன் இன்றுந் திருவுருவங் காண்கிலேன் - என்றுந்தான் எவ்வுருவோ னும்பிரா னென்பார்கட் கென்னுரைக்கேன்! எவ்வுருவோ நின்னுருவ மேது? 61 அன்றும் உமது திருவுருவைக் காணாதே ஆட்பட்டேன்; இன்றும் அதனைக் காண்கில்லேன்; உமது பெருமான் எவ்வுருவினன் என்று கேட்பார்க்கு என்ன சொல்லுவேன்? உமது உருவந்தான் யாதோ? பணிப்பீராக. அன்று - அருள் விளக்கம் பெறாது உலகில் நின்று ஆட்செய்த நிலை; இன்று - அருள்பெற்றுச் சிவபூத நற்கணத்தி லொன்றாகப்பெற்று அதனால் உலகை விட்டுத் திருக்கயிலையை அடையச் செல்லும் நிலை. முன்னது பெத்த நிலையும், பின்னது முத்தநிலையுமாம். முன்னர்த் தன்னையும் உலகையும் கண்டமையின் இறைவனுருக் காணாதாயிற்று; பின்னர் உலகையும் தன்னையும் காணாமையின் இறைவனுருவத்தை வேறு காணவியலாதாயிற்று; "பெத்தத்துந் தன்பணியில்லை பிறத்தலால், முத்தத்துந் தன்பணி யில்லை முறைமையால், அத்தர்க்கிரண்டு மருளா லளித்தலாற், பத்திப்பட் டோர்க்குப் பணியொன்று மில்லையே" (திருமந். 2628) என்ற கருத்து இங்குக் கருதுக. என்பார் என்றது உடனணைந்த அன்பர் கூட்டம். "குறித்துத் தொழுதொண்டா பாதம் (40); ஏனை, "அறியா வாய்மை எண்டிசை மாக்களின் பேச்சினை அம்மையார் பொருட்படுத்தாராதல் காண்க. அன்பர் கூட்டத்துள் "திரண்டு திரண்டுன் திருவார்த்தை விரிப்பார் கேட்பார் மெச்சுவார்" (திருவா) என்றபடி இறைவரது தன்மைகளே பேசப்படுதல் வழக்கு. ஏது - எத்தன்மையது. 61 ஏதொக்கு? மேதொவ்வா? தேதாகு? மேதாகா தேதொக்கு மென்பதனை யாரறிவார்?- பூதப்பால் வில்வேட னாகி விசயனோ டேற்றநாள் வல்வேட னான வடிவு. 62 முன்னாளில் வில் ஏந்திய வேடராகி எதனை ஏத்திருக்கும் வந்து விசயனுடன் போர் செய்த அந்நாளில் வலியவேடனாகிய வடிவு எதனை ஒத்திருக்கும்? எதனை ஒத்திராது? அதற்குப் பொருந்துவது எது? பொருந்தாதது எது? எதனோடு பொருந்து மென்பதனை அறிவார் யாவர்? (ஒருவருமிலர்). வேடனாக வந்த கிராதவேடம் இழிந்ததாதலின் உயர்ந்தவற்றோடு பொருந்துமா? என்பனவாதி வினாக்கள் கிளம்ப நியாயமில்லை; இறைவர் இழிந்தவும் தாமே உயர்ந்தவும் தாமே என்று இதனாற் காட்டி நின்றாராதலின் என்பது. "ஏதவனூ ரேதவன்பே ராருற்றா ராரயலார், ஏதவனைப் பாடும் பரிசு?" (திருவா. |