திருவெம் - 10) என்பதும் "கிராத வேடமொடு கிஞ்சுகவாயவள், விராவு கொங்கை நற்றடம் படிந்தும்", "கேவேட ராகிக் கெளிறது படுத்தும்" (திருவாசகம்) என்று மறைகளாற் போற்றப்படுதலும் காண்க. பூதம் - சென்ற காலம். பூதப்பால் - பூதகணங்களுள் ஒன்றாக வைத்து என்றலுமாம். 62 வடிவுடைய செங்கதிர்க்கு மாறாய்ப் பகலே நெடிதுலவி நின்றெறிக்குங் கொல்லோ? - கடியுலவு சொன்முடிவொன் றில்லாத சோதியாய் சொல்லாயால் நின்முடிமேற் றிங்க ணிலா. 63 சோதியாய்! நின்முடிமேல் உள்ள பிறை செங்கதிரவனுக்கு மாறாகப் பகலிலே கதிர் வீசுமோ? சொல்க. திங்கள் நிலாவை எறிக்குமோ என்க; நிலா - ஈண்டு மதியின் கதிர் குறித்தது; வடிவுடைய செங்கதிர் - ஞாயிறு; இறைவரது வலதுகண். குறைந்து இற்றொழியாது வளர்ச்சி பெறும் பொருட்டுத் தலையிற் சூடியபடியால் பகலிலும் எறிக்குமோ என்று வினவியபடி. சோதியாய் என்றதனால் அலகில் சோதியாகிய உமது திரு முன்பு ஞாயிறு முதலிய எச்சுடரும் அடங்கித் தோன்றுவதுபோல இத் திங்களும் அடங்கியே நிலா எறிக்கும்; ஆயினும் வளர்ச்சியும் பெறும் என்றது குறிப்பு. ஓ - ஆல் - அசைகள். சொன்முடிவு ஒன்றில்லாத - உணர்ந்தோதற்கரியவன். 63 நிலாவிலங்கு வெண்மதியை நேடிக்கொள் வான்போல் உலாவி யுழிதருமா கொல்லோ - நிலாவிருந்த செக்கரவ் வானமே யொக்குந் திருமுடிக்கே புக்கரவங் காலையே போன்று. 64 செவ்வானமே போன்ற திருமுடிக்குள் புக்கு, அரவம், ஒளி வீசும் பிறையினைத் தேடிப் பற்றும் பொருட்டுக் காற்றேபோல உலாவித் திரிதருமே? தேடிக்கொள்வான் - தேடிப் பற்றும் பொருட்டு; மதியைப் பற்றுதல் பாம்பின் இயல்பாதலின் அதுபற்றி மதியிருந்த சடைமுடியில் பாம்பும் இயங்கும் காட்சிக்கு எடுத்த தற்குறிப்பேற்ற அணி; அரவம் முடிக்கே - புக்கு - காலையே போன்று - உலாவி உழிதருமா? என்று கூட்டுக. முடிக்கு - உருபு மயக்கம். கால் - காற்று; பாம்பு செல்லும் வேகத்தைக் குறிக்க வினைபற்றி வந்த உவமம். நிலா - முன்னையது கதிரையும், பின்னையது மதியையும் குறித்தன. அந்த நிலா இருந்த - என்று சுட்டு விரித்துக் கொள்க. 64 1காலையே போன்றிலங்கு மேனி; கடும்பகலின் வேலையே போன்றிலங்கும் வெண்ணீறு; - மாலையின் றாங்குருவே போலுஞ் சடைக்கற்றை; மற்றவற்கு வீங்கிருளே போலு மிடறு. 65 அவருக்கு, உதய காலம்போன்று திருமேனி சிவந்து விளங்கும்; நடுப்பகல் போன்று அத்திருமேனியில் உள்ள வெண்ணீறு வெள்ளிதாய் விளங்கும்; அந்திமாலை மேற்கொண்ட இனிய உருவம் போன்று சடைக் கற்றை பொன்னொளியின் விளங்கும்; அதன்மேல் வேறு திணிந்த இருளே போன்று திருமிடறு விளங்கும். நாளின் பல கூறுகளாகவே இறைவனது திருமேனிப் பகுதிகளைக் கண்டு போற்றியது. நாள் முழுதும் சிவனாகவே கண்டு திளைக்கும் தன்மை. இது "பரமே பார்த்திருப்பர் "பதார்த்தங்கள் பாரார்" என்றும் "பார்த்த விடமெல்லாம் |