கரவெளியாய்த் தோன்ற" என்றும் உள்ள பெரியோர் இயல்பு. "நெருநலையாயின்றாகி நாளை யாகி நிமிர்புன் சடையடிக ணின்ற வாறே" என்று நின்ற திருத்தாண்டகத்துள் போற்றப்பட் உண்மையும், திருவுருத்திரத்தின் கருத்துமாம். காலதத்துவத்துள் இறைவனைக் கண்ட காட்சியுமாம். அவற்கு - அவன் பண்டறி சுட்டு. மற்று வீங்கும் - மற்று என்பது முன் சொன்ன காலை - நண்பகல் - மாலை என்ற மூன்றற்கும் வேறுபட்ட என வினை மாற்றின்கண் வந்தது. 65 மிடற்றில் விடமுடையீ! ரும்மிடற்றை நக்கி மிடற்றில் விடங்கொண்ட வாறோ? - மிடற்றகத்து மைத்தா மிருள்போலும் வண்ணம் கரிதாலோ? பைத்தாடு நும்மார்பிற் பாம்பு. 66 திருநீலகண்டரே! உமது மார்பிற் படம் விரித்தாடும் பாம்பு உமது மிடற்றை நக்கி மிடற்றில் விடங்கொண்டு கரிதாயினவாறோ? அன்றி அதன் வண்ணந்தான் உமது மிடற்றினது மைபோன்ற இருளைப் போலக் கரியதா? (அறிகிலம்). இறைவரது மார்பிற் புரளும் பாம்பிற்குக் கருமை போந்தது என்ன காரணம் என்று வினவியபடி. மிடற்றை நக்கி விடங்கொண்டவாறோ என்றது தற்குறிப்பேற்றம். மைத்தாம் இருள் - மை குழைத்தது போன்ற இருள். "கருகு மையிருளின் கணம்" (இளையான் - புரா - 15). விடங்கொண்டவாறோ - விடங்கொண்டு அதனாற் கரியதாயினவாறோ என்றபடி. விடந்தீண்ட மேனி கருகும். "எயிறுங் கண்ணுமேனியங் கருகி" (அப்பூதி - புரா. 27). இப்பாட்டுக்கு இவ்வாறன்றி, நஞ்சை யடைந்ததனாலோ? இருளையொத்த நிறத்தைத் தான் பெற்றுக் கொண்டதனாலோ? பாம்பு ஆடும் - என்று பொருள் கொண்டனர் முன் உரைகாரர். 66 பாம்பு மதியு மடமானும் பாய்புலியுந் தாம்பயின்று தாழருவி தூங்குதலால் - ஆம்பொன் உருவடிவி லோங்கொளிசேர் கண்ணுதலான் கோலத் திருவடியின் மேய சிலம்பு. 67 பாம்பும், மதியும், மானும், புலியும் பயின்று, கங்கையாறும் இழிதலால் இறைவரது திருவடியில் தரிக்கப்பெற்ற வீரக்கழல் அவர்க்கு உரியதாம். "பாம்போடு திங்கள் பகை தீர்த்தாண்டாய்" (தேவா) என்ற பகையுடைய பாம்பும் மதியும் பகையின்றி நன்றாகவிருக்க வைத்தலானும், அவ்வாறே மானும் புலியும் இருக்க வைத்தலானும், உலகை அழிக்கும் பெருக்குடன் ஆர்த்துவந்த கங்கையின் மிகை தணித்து உலகை ஆக்கும் வகையால் இழிய வைத்தலானும், பேராற்றலும் பேரருளும் உடைய இறைவராதல் தெரித்தலால் வீரக்கழல் பிறர்க்கன்றி இவர்க்கே உரியது. இவ்வாறு அருள் அடையாளங்களைத் தாங்கியவர் பிறர் இலர் என்பது. சிலம்பு ஈண்டுக் கழலை யுணர்த்தி நின்றது. சிலம்பு - ஆம் - என்றது கூட்டி முடிக்க. தாங்குதலால் - என்பதும் பாடம். 67 சிலம்படியா ளூடலைத் தான்றவிர்ப்பான் வேண்டிச் சிலம்படிமேற் செவ்வாத்தஞ் சேர்த்தி - நலம்பெற் றெதிராய செக்கரினு மிக்கோலஞ் செய்தான் முதிரா மதியான் முடி. 68 உமையம்மையாரது ஊடலைத் தவிர்க்கவேண்டி அவரடிமே லிட்ட செம்பஞ்சைச் சேர்த்து இறைவர் தமது முடியை எதிராய செக்கரினும் நலம்பெற்ற இக்கோலம் செய்தான். |