ஊடலில் நாயகியின் அடியை நாயகன் பணிதலுமுரித்து என்ற அகப்பொருட்கருத்தைப்பற்றி உமை அம்மையாரையும் ஐயனையும் ஒருங்கே போற்றியது இத்திருப்பாட்டு. சிலம்படியாள் - உமையம்மையார். பெயர்மாத்திரையாய் நின்றது. சிலம்படி மேல் உள்ள செவ்விய அரத்தத்தைச் சேர்த்தியதனால் முடியைக் கோலஞ் செய்தான் என்பது. நலம் பெற்ற - இக்கோலம் என்று கூட்டுக. செவ்வரத்தம் - செம்பஞ்சு. சேர்த்தல் ஒன்றினால் ஊடல் தவிர்த்ததுடன் செக்கரினு மிகுத்தலுமாகிய இரு பயன் போந்தன என்றார். எதிராதல் - ஒன்றினையொன்று இகலுதல். முதிராமதி - என்றும் மூன்றாம் பிறையாயிருத்தல். "வளராத பிறையும்" (தேவா); சத்தி தத்துவத்தினின்றும் அதன் கீழுள்ள சிவதத்துவங்கள் தோன்றும் முறைமை குறிப்பு. 68 முடிமேற் கொடுமதியான் முக்கணா னல்ல வடிமேற் கொடுமதியோங் கூற்றைப் - படிமேற் குனியவல மாமடிமை கொண்டாடப் பெற்றோம் இனியவல முண்டோ வெமக்கு. 69 இறைவரது திருவடியை முடிமேற்கொண்டு, அதனாலே கூற்றை மதியோம்; அத்திருவடிக் கடிமை செய்ய நிலந்தோய வணங்கப் பெற்றோம்; ஆதலின் இனி நமக்கு அவல முண்டோ? (இல்லை). கொடுமதி - வளைந்த பிறைமதி! அடிமேற் கொடு கூற்றை மதியோம் என்க. கொண்டு என்றது கொடு என இடை குறைந்து வந்தது. படிமேற்குனிய - நிலத்தின் வீழ்ந்து வணங்க. வலமாம் அடிமை - வல்லோமாகும் அடிமைத் திறம். வலஞ் சூழ்ந்து என்றலுமாம். அவலம் - பிறவித் துன்பம்; கூற்றை மதியோம் என்றது இப்பிறப்பின் துன்பத்திற் காட்படோம் என்றபடி; "வஞ்சநமன் வாதனைக்கும் வன்பிறவி வேதனைக்கும், அஞ்சி யுனையடைந்தே னையா பராபரமே" (தாயுமானார்). 69 எமக்கிதுவோ பேராசை? யென்றுந் தவிரா; தெமக்கொருநாட் காட்டுதியோ? வெந்தாய்! - அமைக்கவே போந்தெரிபாய்ந் தன்ன புரிசடையாய்! பொங்கிரவில் ஏந்தெரிபாய்ந் தாடு மிடம். 70 எந்தையே! இரவில் நீ எரிபாய்ந் தாடுமிடம் எமக்கொருநாட் காட்டுவாயோ? என்று வேண்டுகின்றோம்; இந்தப் பேராசையோ எமக்கு என்றும் தவிராது. இது இந்த என்ற சுட்டுப் பொருள் தந்து நின்றது; இப்பேராசையோ தவிராது என்றும் ஓகராம் பிரித்துக் கூட்டி முடித்துக்கொள்க; ஆடும்: இடம் காட்டு தீயோ - என்றவாற்றால் நடம் காணக் காட்டுதி என்றது குறிப்பு. பாய்ந்தாடுதல் - குதித்து ஆடுதல். ஏந்து எரி - பொங்கி மேலெரியும் தீ. 70 இடப்பால வானத் தெழுமதியை நீயோர் மடப்பாவை தன்னருகே வைத்தால் - இடப்பாகங் கொண்டாண் மலைப்பாவை கூறொன்றுங் கண்டிலங்காண் கண்டாயே முக்கண்ணாய் கண். 71 இடமகன்ற வானிடத்தே எழுகின்ற மதியினை இரு பெண்களுள் ஒருவராகிய கங்கை நங்கையிடத்து வைத்துவிட்டாயானால் மற்றொருவராகிய இடப்பாகத்தில் உள்ள பார்வதி யம்மையாருடைய கூறு ஒன்றினையும் காண்கின்றிலோம்; மூன்று கண்ணுடையவரே! இதனை எண்ணித் தெளிவீராக! |