இடப்பால் வானம் - மேல் இடமகன்ற ஆகாயம். வானத்துள் மதி எழுந்தால் எல்லாப் பொருள்களையும் விளக்கும்; அவ்வாறன்றி ஒரு பொருளைச் சாரவைப் பின் சார்ந்துள்ள மற்ற பொருளை அதுவே மறைக்கும்; ஆதலின் முடியின் ஒரு பால் உள்ள கங்கையை மதி சார வைத்தால் முடியின் கீழ்த் திருமேனியில் ஒரு பாகங்கொண்ட பார்வதியை மறைக்கும் என்பது கருத்து; முக்கண்ணாய் என்றது மூன்று கண்ணுடையீ ராதலின் உமக்கு ஒரு கண்ணும், இரு தேவியர்க்கும் ஏனையிரண்டு கண்ணும் சமமாக வைக்க வேண்டியவர் என்ற குறிப்புடன் நின்றது; கண்டாயே - தெரிவீர்; கண் - எண்ணுக; கண்ணுதல் - எண்ணுதல்; காண் - அசை; சடையினையும் மதியினையும் ஒருங்கே கண்ட காட்சியை நயம்படக் கூறி ஐயனை இரண்டு தேவியாருடன் போற்றிய வகை. முக்கண்ணாய்க் காண் - என்பதும் பாடம். 71 1கண்டெந்தை யென்றிறைஞ்சிக் கைப்பணியான் செய்யேனேல் அண்டம் பெரினு மதுவேண்டேன் - றுண்டஞ்சேர் விண்ணாளுந் திங்களாய்! மிக்குலக மேழினுக்குங் கண்ணாளா! வீதென் கருத்து. 72 இறைவரே! உம்மை மனத்தினுள் கண்டு, எந்தையே என்று துதித்து வணங்கிக்கைத்திருத்தொண்டு செய்யப் பெற்றிலேனேயாகில், வீடு பெறுவதாயினும் அதனை நான் வேண்டேன்; இதுவே எனது கருத்து. கண்டு - என்றதனால் மனத்தினுட் காண்பதும், எந்தை என்று - என்றதனால் வாக்கினாற்றுதிப்பதும், கைப்பணி - என்றதனால் மெய்யினால் பணி செய்தலும் என்று மனம் வாக்குக் காயம் என்ற மூன்றானும் ஒருங்கு பணி செய்தல் பெறப்பட்டது. கண்டு - இறைஞ்சி - செய்யேனேல் - என ஒரு வினை முடிபு கொள்ள வைத்தமையால் இவை ஒருங்கே நிகழும் தன்மை கூறப்பட்டது. அண்டர் - மேலாகிய பரமுத்தி; அண்டம் என்பது ஆகுபெயராய் அண்டங்களின் ஆட்சி என்று கொண்டு எவ்விதமாகிய ஏனைப் பதமுத்திகளும், போகங்களும் என்றுரைப்பினுமாம். முத்தியினும் உயிர் சிவானுபவம் பெற்றும் ஆளாத லுடைமை சாத்திரங்களுட் பெறப்படும். "ஆளாநாமங்கு" என்பது ஞானசாத்திரம். "வீடும் வேண்டா விறலின் விளங்கினார்" "பாரமீசன் பணியல கொன்றிலார்" என்ற இது பற்றியே அடியார் திறங்களை வடித்து எடுத்து ஆசிரியர் சேக்கிழார் பெருமான் திருக்கூட்டச் சிறப்பினிற் போற்றியருளினர். சீவன்முத்தர்களாகிய எந்தம் பெருமக்களே இவ்வாறு பெருமிதத்துடன் போற்றத்தக்கவர்கள்; ஏனையோர் சொல்வது பொய்யேயாகும். உலகமேழினுக்கும் என்றது "அவர்க்கே யெழுபிறப்பு மாளாவோம்" என்றபடி ஏழுவகைப் பிறப்பின் நிலையும், கண்ணாளா - என்றது அருள்கொண்ட தலைவனுடைய அருமைப்பாடும் குறித்தன. தொண்டிலின்றி வீடுபெற வரினும் வேண்டேன் எனத் தொண்டினது சிறப்புக் கூறப்பட்டது. "போகம் வேண்டி வேண்டிலேன்" (திருவாசகம்); ‘கோலநீடிய நிதிபதி வாழ்க்கையுங் குறியேன்" (கந்தபுராணம் - ) முதலிய கருத்துக்கள் காண்க. 72 1கருத்தினா னீ கருதிற் றெல்லா முடனே திருத்தலாஞ் சிக்கெனநான் சொன்னேன் - பருத்தாங்க வெள்ளநீ ரேற்றா னடிக்கமல நீவிரும்பி யுள்ளமே யெப்பேது மோது. 73 மனமே! நீ சூழ்ந்து கருதியவை எல்லாவற்றையும் சிறப்புப் பெற உறுதியாக அடையலாம்; நான் உறுதியாகச் சொன்னேன்; (அதற்கு வழியாவது இதுவே); இறைவரின் திருவடித்தாமரைகளை எப்போதும் நீ விருப்பத்துடனே ஓதுவாயாக. |