பக்கம் எண் :


அற்புதத் திருவந்தாதி939

 

கருத்தினால் கருதிற்று - பலகாலும் சிந்தித்துச் சூழ்ந்த; திருத்தலாம் - திருந்தப் பெறலாம்; சிக்கென - உறுதியாக; பரு - தாங்க - நீர் - பெரிய அலைகளையுடைய கங்கை; எப்போதும் - பெத்த முத்தி யிரண்டிலும்.

73

ஓத நெடுங்கடல்க ளெத்தனையு முய்த்தட்ட
வேது நிறைந்தில்லை யென்பராற் - பேதையர்கள்
எண்ணா திடும்பலியா லென்னோ நிறைந்தவா
கண்ணார் கபாலக் கலம்.

74

கபாலமாகிய பலிப்பாத்திரம், பெருங்கடல்களை யெல்லாம் கொண்டு பெய்தாலும் சிறிதும் நிறைந்த தில்லை என்று கூறுவர்; அற்றாயின், தாருகாவன இருடிகளின் பெண்கள் எண்ணாது இடுகின்ற பலியுணவினால் நிறைந்தவாறு என்னே? (அதிசயம்!)

கடல்கள் எத்தனையும் - கடல்கள் முழுமையும்! ஏழு கடல்களையும்; உய்த்து அட்ட - கொண்டு பெய்யவும்; சிறப்பும்மை தொக்கது; ஏதும் ஒரு சிறிதும்; நிறைந்ததில்லை என்பது நிறைந்தில்லை என நின்றது; பேதையர்கள் - தாருகாவனத்து இருடியர்களின் மனைவியர்கள்; எண்ணாது - பலிக்கு வந்தவர் இறைவர் என்றும், தம்மைக் கற்பழித்த நிலை கண்டு முனிவர்களுக்கு நல் உணர்வு ஊட்ட வந்தவர் என்றும் எண்ணாது; பேதையர்களாதலின் எண்ணாராயினர் என்ற குறிப்புப்பட உடம்பொடு புணர்த்தி ஓதினார்; கண்ணார் - கண்கள் பொருந்திய கபால மாதலின் கண்களின் துவாரங்களுடையது. திறத்தலும் மூடுதலுமாகிய இமைகளையுடையவை கண்; இவை மதகுபோன்று மூடியபோது கலம் நிறைந்தது. திறந்திருந்தபோது கலம் நிறைந்தில்லை. கண் ஆர் - இடம் அகன்ற என்பதுமாம். கபாலக்கலத்தைப் போற்றியது.

74

1கலங்கு புனற்கங்கை யூடாட லாலு
மிலங்கு மதியியங்க லாலு - நலங்கொள்
பரிசுடையா னீன்முடிமேற் பாம்பியங்க லாலும்
விரிசடையாங் காணில் விசும்பு.

75

கங்கை ஒடுங்கலாலும், மதி யியங்குதலாலும், பாம்பு இயங்குதலாலும் விசும்பு இறைவரது சடைபோன்றது. சடை - விசும்பு போன்றது என்றும் இயைக்கலாம்.

விசும்பு - ஆகாயம் - வானம்; விசும்பிற் கங்கை என்றது ஆகாயத்தினின்றும் வந்த நிலை; மதி சந்திரன்; வானிற் சரிப்பது; பாம்பு என்றது இராகு, கேதுக்கள்; இறைவர் சடையில் கங்கையினையும் பிறையினையும் பாம்புகளையும் தரித்த தன்மை பற்றிச் சிலேடைவகையராய்ப் போற்றியது. "கலை நிரம்பாத், திங்கட்கு வானந் திருவொற்றி யூரர் திருமுடியே" (திருவிருத்); காணில் - கருதுமிடத்து; இறைவர்க்கு வியோமகேசி என்றதொரு திருப்பெயர் கூறும் மரபும் ஈண்டுக் கருதத்தக்கது.

75

விசும்பில் விதியுடைய விண்ணோர் பணிந்து
பசும்பொன் மணிமகுடந் தேய்ப்ப - முசிந்தெங்கும்
எந்தாய் தழும்பேறி யேபாவம் பொல்லாவாம்
அந்தா மரைபோ லடி.

76

எந்தையே! உம் திருவடிகள் தேவர்கள் பணியும்போது அவர்களுடைய பொன்மணிக் கிரீடங்கள் உரிஞ்ச அதனால் தழும்பேறித் தாமரைபோலச் சிவந்தன! அந்தோ!