இவ்வாறு தத்தம் சிறுமை கண்டு ஒழுகுவது அறிவுடைமையும் ஈடேறும் நெறியுமாம்; இவ்வாறன்றி இது தம் பெருமை யென்றறிவது ஆணவத்தைமிகச் செய்து வீழ்ச்சிக்கே காரணமாகும். இவ்வுண்மையை இந்நாள் உலகம் சிறிதும் காணாது ஒழுகுகின்றது கொடுமை! இதை அறிந்து தக்கவாறு ஒழுகின் உலகம் நலம் பெறும். இங்கு அப்பர் பெருமான் "சிறுமையேன் யான்" என்று தம்மை அறிவித்துக் கொண்டது அவையடக்கம் போன்ற உபசாரமன்றி, உண்மையிலே உணர்ந்து உள்ளூறி அப்பர் பெருமான் ஒழுகிய நெறியாகும் என்பதற்கு, "பித்தனேன் பேதையேன் பேயே னாயேன் பிழைத்தனக னெத்தனையும் பொறுத்தாயன்றே" என்று இறைவரிடத்து அவர் உள்ளங்கலந்து செய்யும் விண்ணப்பங்கள் பலவும் சான்றாம். நின்றேற்ற - அருள் பெருகு - என்பனவும் பாடங்கள். 16 1799. | அரசறிய வுரைசெய்ய, வப்பூதி யடிகடாங் கரகமல மிசைகுவியக், கண்ணருவி பாய்ந்திழிய, வுரைகுழறி, யுடம்பெல்லா முரோமபுளகம்பொலியத் தரையின்மிசை வீழ்ந்தவர்தஞ் சரணகம லம்பூண்டார். |
17 (இ-ள்.) அரசு அறிய உரை செய்ய - இவ்வாறு அரசுகள் அப்பூதியார் தம்மை அறியும்படி உரைத்தருளிச் செய்யவே; அப்பூதி அடிகள் தாம் - உண்மை அறிந்து கொண்ட அப்பூதியடிகள்; கரகமலம் மிசை குவிய - கைமலர்கள் தாமே தலையின்மேல் குவிந்துகொள்ளவும், கண் அருவி பாய்ந்து இழிய - கண்களினின்றும் நீர் அருவிபோலப் பாய்ந்து வழியவும்; உரை குழறி...பொலிய - மொழி தடுமாறி உடம்பு முழுதும் மயிர்க்கூச்செறிந்து விளங்கவும் (இவ்வண்ணம் மெய்ப்பாடுகள் உண்டாகும் நிலையினை அடைந்து); தரையின்...பூண்டார் - நிலத்தின் மேல் உடல் பொருந்தக் கீழே வீழ்ந்து அவருடைய திருவடித்தாமரைகளைத் தலையிற் பொருந்தப் பூண்டனர். (வி-ரை.) தாம் எதிர்பாராமலும் அறியாமலும் இருந்த நிலையில் சடுதியில் தமக்கு வலியக் கிடைத்த பெரும்பேற்றினை அறிந்தபோது அப்பூதியார்அடைந்த மனநிலையும் மெய்ப்பாடும் ஆகிய செயல்களை அறிவிப்பது இத்திருப்பாட்டு. 1795 - 1796 - 1797 பாட்டுக்களில் அறியுமாறு அப்பூதியார் இருந்த நிலையினையும், இப்பாட்டினிற் றெரியுமாறு அவர் அடைந்த அதனின் முற்றும் மாறுபட் நிலையினையும் தெரிவிக்கும்படி சித்திரம் தீட்டுவதென்றால் ஒரு பெரும் ஓவியப் புலவனுக்கும் அரிய வேலையாம். இவ்விரு பெருமக்கள் முதன் முறை சந்தித்த இந்நிலையினை நம கண்முன் காணும்படி தீட்டுவது ஆசிரியரது தெய்வக் கவிநலத்திற்கே உரியதும் எளியதுமாம். அரசு - திருநாவுக்கரசர். முன் பாட்டில் கூறியபடி தம்மை அறிந்து அறிவித்துக் கொள்வது நாவுரசருக்கே இயல்பதாம் என்பார் அரசு என்ற தன்மையாற் கூறினார். அறிய - அப்பூதியார் அறிந்துகொள்ளும்படி. கர கமலம் மிசை குவிய - மனத்தின் தூண்டுதலாகிய முயற்சியின்றிக்கைகள் தாமே தலையின்மேல் ஏறக் கூம்புதல் நீண்ட பழக்கத்தலாவது. குவிய என்ற கருத்துமது. மேல் சரண கமலம் என்பதற்கேற்ப இங்குக் கர கமலம் என்றார், ஓரினமாய்க் கூடும் ஒற்றுமை நயம்பற்றி. கண் அருவி பாய்ந்து இழிய - நீர் என்பது தொக்கி நின்றது. அன்புவெளிப்பாட்டினால் கண்ணீர் பாயும் மெய்ப்பாடு நிகழ்வதற்கு முன் கண்ணினுள் மறைந்து நிற்பது போல, அது குறிக்கும் சொல்லும் தொக்கி நின்ற நயம் காண்க. |