பக்கம் எண் :


984திருத்தொண்டர் புராணம்

 

பூதியார் ஆதலின் தமது ஞான குருநாதரைக் கைவரப்பெற்றபோது அடியார் என்றும் குரு என்றும் இருதன்மையிலும் வைத்துத் திருநாவுக்கரசரை இறைவராகவே கண்டார். இறைவரருள் பெற்றபோது முன்பு நின்று செய்யும் ஆடுதல், பாடுதல் முதலியவை ஈண்டும் நிகழ்வனவாயின. "ஆடு கின்றிலை கூத்துடை யான்கழற் கன்பிலை யென்புருகிப் பாடுகின்றிலை" (திருவாசகம்); "மெய்விரவு பேரன்பு மிகுதியினா லாடுதலு, மவ்வியல்பிற் பாடுதலு மாய்நிகழ்வார்" (1055) முதலியவை காண்க.

உற்ற விருப்புடன் சூழ ஒடினார் - வலம் வந்தனர். ஆயின், வலம் வருவார் அதற்குரிய விதிப்படி அடியிட்டு மெல்ல நடந்து செல்லாமல் ஓடியது விருப்ப மிகுதியினால் ஆகியது என்பார், உற்ற விருப்புடன் என்றார்; உறுதல் - மிகுதல்.

பாடினார் - நாயனாருடைய பெருமைகளையும், தாம் பெற்ற பேற்றினையும் பாட்டாகச் சொல்லுதலும் உவகை நிறைந்தபோது உள்ளங் கலந்து எழுந்து கீதம் பாடுதலுமாம். "திரண்டு திரண்டுன் றிருவார்த்தை விரிப்பார் கேட்பார் மெச்சுவார்" (திருவாசகம்).

18

1801.

மூண்டபெரு மகிழ்ச்சியினான் முன்செய்வ தறியாதே
ஈண்டமனை யகத்தெய்தி யில்லவர்க்கும் மக்களுக்கும்
ஆண்டவர செழுந்தருளு மோகையுரைத் தார்வமுறப்
பூண்டபெருஞ் சுற்றமெலாங் கொடுமீளப் புறப்பட்டார்,

19

1802.

மனைவியா ருடன்மக்கண் மற்றுமுள்ள சுற்றத்தோர்
அனைவரையுங் கொண்டிறைஞ்சி யாராத காதலுடன்
முனைவரையுள் ளெழுந்தருளு வித்தவர்தாண் முன்விளக்கும்
புனைமலர்நீர் தங்கண்மேற் தெளித்துள்ளும் பூரித்தார்.

20

1801. (இ-ள்.) மூண்ட.....அறியாதே - பெரு மகிழ்ச்சி முண்டதானலே முன்னர்ச் செய்யக் கடவ திது என்பதும் அறியாதவராகி; ஈண்டமனை அகத்து எய்தி - திருமனையின் உள்ளே விரைந்து சென்று; இல்லவர்க்கும்....உரைத்து - மனைவியாருக்கும் மக்களுக்கும் வீட்டில் உள்ள ஏனைச் சுற்றத்தாருக்கும் ஆண்ட அரசுகள் எழுந்தருளும் உவகையைச் சொல்லி; ஆர்வமுற - ஆசை மிக; பூண்ட...புறப்பட்டார் - அன்பு பூண்ட அப்பெருஞ் சுற்றத்தார் எல்லாரையும் உடன் கொண்டு மீண்டு வெளியில் வந்தாராகி,

19

1802. (இ-ள்.) மனைவியாருடன்......இறைஞ்சி - மனைவியாருடன் மக்களும் மற்றும் உள்ள சுற்றத்தார்களும் முதலிய எல்லாரையும் கொண்டுவந்து வணங்கி; ஆராத காதலுடன் - தணியாத ஆசையோடு; முனைவரை...பூரித்தார் - தலைவராகிய வாகீசரை உள்ளே எழுந்தருளச் செய்து முன் அவருடைய பாதங்களை விளக்கும் மலர்களிட்ட பாத்திய நீரைத் தங்கள்மேல் தெளித்துக்கொண்டு அத்தீர்த்தத்தை உள்ளேயும் நிறைத்தனர்.

இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபுகொண்டுரைக்க நின்றன.

1801. (வி-ரை.) பெருமகிழ்ச்சி மூண்டதனால் என்க. மூண்டதனால் அறியாதே என்பதாம். முன் செய்வது - மனைக்கடைத்தலையில் அணைந்து நிற்கின்ற அவரை உள்ளே எழுந்தருளச்செய்து ஆசனத்தமர்த்திப் பின் உபசரிக்க வேண்டிய முறைப்படி செய்வதற்கு முன்செய்யும் காரியங்கள். முன் - திருமுன்பு என்றலுமாம்.

அறியாதே - அவற்றைச் செய்யாது அவர் நின்றபடியே அங்குக் கடைத்தலையில் நிற்கும்படி விடுத்துத் தாம் மனையகத்து எய்தியதனால் அறியாது செய்தனர்