என்பதாம். பத்தி முதிர்வின் மகிழ்ச்சியினாற் செய்யப்பட்டதாதலின் அஃது அபசாரமாகாது உபசாரமேயாயிற்று. "பத்தர் சொன்னவும் பன்னப்படுபவோ?" என்றது அவரது செய்கைக்குமாம். ஈண்ட - விரைவாக. அன்பு திரண்ட என்றுரைப்பாருமுண்டு. மனையகத்து ஈண்ட எய்தி என்க. இல்லவர் - மனைவியார் அன்று மனையின்கட் குழுமியிருக்கும் பேறுபெற்ற சுற்றத்தாரையும் குறிக்க இல்லவர் என்றார். மனைவியாருடன்.... சுற்றத்தார் (1802) என்று மேல்வரும்பாட்டில் இதனை இரட்டுறமொழிந்து கொண்டு விரித்தல் காண்க. ஓகை - உவகை என்பது ஓகை என நின்று, உவகையாகிய செய்திக்குவந்தது. ஆர்வமுற - ஆர்வமுற உரைத்து என்றும், ஆர்வமுறக்கொ(ண்)டு என்றும், ஆர்வமுறப் புறப்பட்டார் என்றும் கூட்டி உரைக்க நின்ற இடைநிலைத் தீபம். பூண்ட பெருஞ் சுற்றம் - பூண்ட - அன்பு பூண்ட. பெருஞ் சுற்றம் - பெருமையாவது அப்பூதியாரது அன்பும் தம் அன்பும் ஆதரவுபட வந்து சுற்றிச் சூழ்தல். நாயனார் எழுந்தருளும் பெரும்பேறு வாய்க்கப்பெற்ற அத்திருநாளில் அங்கிருக்கப் பெறுதலும் குறிப்பு. சுற்றம் எலாம் - சுற்றம் என்றது ஈண்டு மனைவியார் மக்கள் முதலிய அனைவரையும் குறித்தது. எலாம் என்றது தாதியர் ஏவலர் முதலிய அனைவரும் என்று பொருளும் தந்து நின்றது. "மனைவியாருடன்...அனைவரையும்" என்று மேல்வரும் பாட்டிற் கூறுதல் காண்க. மீளப் புறப்பட்டார் - மனையினுட் புக்கவர் மீள வெளியில் வந்தார். புறப்படுதல் - புறத்தின் வருதல். மீள - முன்னர் "நங்கள்பிரான் றமரொருவர் எனக்கேட்டு நண்ணினார்" (1791) என்றது முதன் முறை மனையினின்றும் புறப்பட்டது. அது பொதுவகையால் அடியார் ஒருவரைக் காணப் போந்தது. இப்போது மீண்டும் போந்தனர் - இது சிறப்பு வகையாற் போந்தது. மீள - அரசினது திருவருள் பெற்று இப்பிறவியின்று மீட்சி பெற்று, "மான்மறிக் கையர் பொற்றாள்" பெறும் பேறு வாகீசரடைவாற் பெறுதற்கு (1827) என்ற குறிப்பும் காண்க. புறப்பட்டாராகி - இறைஞ்சி எனமேல்வரும் பாட்டினுடன் கூட்டுக. முற்றெச்சம். செய்யுளின் தொடர்ச்சி நோக்கி எச்சமாக்கி உரைக்கப்பட்டது. 19 1802. (வி-ரை.) மனைவியாருடன் - தம்மோடு ஒத்த பங்கு உடையவராதலானும், சுற்றத்துள் முதன்மை பெறுவாராதலானும், மனையின் வாழ்க்கைக்குரிமை யுடையவராதலின் நாயனாரை உபசரிப்பது அவர்பாலதே யாதலானும் அச்சிறப் புக்களை உணர்த்த முதற்கண் வைத்து ஓதியதுமன்றி, உடன் என்ற உருபையும் சார்த்தி ஓதினார். பின்னர்ச் சரித நிகழ்ச்சியினும் அரவினால் மகன் வீந்ததனை மறைத்து நாயனாரைத் திருவமுதூட்ட நினைந்து செய்த அன்பின் திறம் உள்ளதும் குறிப்பு. அவர் திறம் அப்பூதியர்பால் நின்றது போலவே மனைவியாரிடத்தும் நிறைந்து நிற்க உள்ளதும் குறிப்பு. அவர் திறம் அவ்வாறமையாவிடின் இச்சரித விளைவுக்கு ஏதுவில்லையாகு மென்பதும் உணர்க. மக்கள் - "நிறைகோன் மக்கள்" (1784); "சேயவர் தம்மின் மூத்த" (1805); "இவர்க்கு மூத்த சேயையுங் காட்டுக" (1814); "பிள்ளைகளுடனே நோக்கி யரும்புதல்வர்களும்" (1822); "மைந்தரும்" (1823); முதலியவற்றால் அப்பூதியார்க்கு மக்கள் பலரிருந்தனர் என்பதுணரப்படும். இவர்களுள் பெண் மக்களுமுண்டோ என்று ஈண்டு வேண்டப்படா ஆராய்ச்சியிற்புகும் ஆராய்ச்சியாளருமுளர். அனைவரையும் - சுற்றத்தோர் அனைவரையும் என்றும், மக்களும் சுற்றத்தோர்களும் ஏனை ஏவலர் முதலிய அனைவரையும் என்றும் உரைக்க நின்றது. தாதியர் |