பக்கம் எண் :


986திருத்தொண்டர் புராணம்

 

ஏவலர் முதலியோரும் திருத்தொண்டிற் கலந்த வரலாறுகள் மெய்ப்பொருணாயனார் புராணம், சிறுத்தொண்ட நாயனார்; புராணம் முதலியவற்றா லறியலாம்.

கொண்டு இறைஞ்சி - கூட அழைத்துக்கொண்டு போந்து எல்லாருமாகக் கூடிப் பணிந்து.

முனைவர் - முதல்வர் - தலைவர்.

தாள் முன்விளக்கும் புனைமலர் நீர் - தாள் விளக்குதல், கை விளக்குதல், வாய்பூசுதல் என்றிவைகட்குத் தரப்படும் நீர். இவை பாத்தியம் ஆசமனம் அர்க்கியம் என்று பூசை முறையிற் பெயர்பெறும். முன் - இவற்றுள் முதலிற் றரப்படும் நீர்பாதம் விளக்குவது பாத்தியம் என்பது.

மலர்புனை நீர் என்க. இறைவருக்கும் பெரியோர்க்கும் பாத்திய முதலியவற்றுக்குப் பயன்படும் நீரில் புதிய மலர்களையும் வாசனைப் பண்டங்களையும் இட்டுமந்திரித்துப் பண்பு செய்தல் மரபு.

தங்கண்மேல் தெளித்து உள்ளும் பூரித்தார் - திருவடி விளக்கியது புனித தீர்த்தமாதலின் அதுகொண்டு தமது உள்ளும் புறம்பும் தூய்மையாக்கிக் கொண்டனர் என்க. பூரித்தல் - நிறைவித்தல்.

புனைமலி நீர் - என்பதும் பாடம்.

20

1803.

ஆசனத்திற் பூசனைக ளமர்வித்து, விருப்பினுடன்
வாசநிறை திருநீற்றுக் காப்பேந்தி மனந்தழைப்பத்
தேசமுய்ய வந்தவரைத் திருவமுது செய்விக்கும்
நேசமுற விண்ணப்பஞ் செய, வவரு மதுநேர்ந்தார்.

21

(இ-ள்.) ஆசனத்தில்...அமர்வித்து - ஆசனத்தில் எழுந்தருளுவித்துச் செய்ய வேண்டிய அருச்சனை தூப தீபம் முதலியவற்றை விதிப்படி விரும்பிச் செய்து; விருப்பினுடன் - மிக்க விருப்பத்துடனே; வாசநிறை திருநீற்றுக் காப்பு ஏந்தி - வாசமிக்க திருநீற்றுக்காப்பு நிறைந்த திருநீற்று மடக்கை அவர்க்கு உபசாரமாக அவர் திருமுன் ஏந்தி; மனம் தழைப்ப - மனம் தழைத்தோங்க; தேசம் உய்ய..நேசமுற - உலகம் உய்யும்படி திருவவதாரம் செய்த நாயனாரைத் திருவமுது செய்விக்கும் அன்பு மீக்கூர; விண்ணப்பம்...நேர்ந்தார் - அவர்பால் விண்ணப்பஞ் செய்தார்கள்; அவரும் அதற்கு இசைந்தருளினார்.

(வி-ரை.) ஆசனத்தில் பூசனைகள் அமர்வித்து - ஆசனத்தில் என்றது பூசை முறையில் முதலில் செய்யப்படும் அங்கமாகிய, ஆசனங்கற்பித்து உரிய மந்திரம் பாவனைகளால் மூர்த்தியை அந்த ஆசனத்தில் எழுந்தருளச் செய்யும் முறை குறித்தது. "கொண்டு வந்து மனைப்புகுந்து குலாவு பாதம் விளக்கியே, மண்டு காதலினாத னத்திடை வைத்த ருச்சனை செய்தபின்" (443); "கதுமெனக் கணவனாரைக் கண்ணுதற் கன்ப ரோடும் விதிமுறை தீப மேந்தி" (951) என்றவிடங்களில் உரைத்தவையெல்லாம் ஈண்டுக்கொள்க. பூசனைகள் - தூபம் தீபங்கள் காட்டுதல் அருச்சித்தல் முதலாக மாகேசுர பூசைக்கு விதித்தவை. அமர்வித்தல் - விருப்பத்துடன் அமையச் செய்தல்.

விருப்பினுடன் - அமர்வித்தல் என்றும், விருப்பினுடன் ஏந்தி என்றும் முன்னும் பின்னுமாகக் கூட்டியுரைக்க நின்ற இடைநிலைத் தீபம்.

வாசநிறை திருநீற்றுக் காப்பு ஏந்தி -திருநீற்று மடக்கை ஏந்துதல். உபசாரங்களுள் ஒன்று. நீற்றுக்காப்பு - அதனைக் கொண்ட மடலுக்கு வந்தது. காப்பு - அணிந்தவரை இரட்சிப்பதனாற் போந்த பெயர்; இரட்சை என்னும் பெயரும்