காண்க. வாசம் - இயல்பாய்த் திருநீற்றிற்சூரிய மணம். அதனுள் இடப்படும் புனுகு பசுங் கற்பூரம் முதலியவற்றின் மணம் என்றலுமாம். மனந்தழைப்ப - நேசமுற என்க. மனந் தழைத்தலாவது பெறாப்பேறு பெற்றதனால் மனமகிழ்ச்சி மிக்கோங்குதல். நேசம் - விருப்பம். நேர்தல் - இசைதல். அவர் இசைதல் அருமையாதலின் விண்ணப்பஞ் செய்ய என்று கூறி, இவரது அன்புக்குட்பட்டு இசைந்தமை குறிப்பித்தார். வரும் பாட்டும் பார்க்க. வேறு 1804. | செய்தவ ரிசைந்த போது திருமனை யவரை நோக்கி "யெய்திய பேறு நம்பா லிருந்தவா றென்னே!" யென்று மைதிகழ் மிடற்றி னான்ற னருளினால் வந்த தென்றே, "யுய்து"மென் றுகந்து கொண்டு திருவமு தாக்க லுற்றார். |
22 (இ-ள்.) செய்தவர் இசைந்தபோது - தவத்திற் பெரியோராகிய திருநாவுக்கரசர் இசைந்தபோது; திருமனையவரை....என்னே என்று - திருமனைவியாரை நோக்கி அப்பூதியார் "நம்மிடத்துப் பொருந்தியபேறு இருந்தவாறுதான் என்னே!" என்று கூறிப், பின்னும்; மைதிகழ்....உய்தும் என்று உவந்துகொண்டு - விடம் விளங்கும் கண்டத்தையுடைய சிவபெருமானது திருவருளினால் இது வந்ததென்று போற்றியே "நாம் உய்தி பெறுவோமாக" என்று தம்மில் மகிந்து கொண்டு; திருவமுது ஆக்கல் உற்றார் - திருவமுதினை அமைக்கத் தொடங்கினார். (வி-ரை.) செய்தவர் - தவஞ்செய்தவர் என்க. செய்தவத்தின் பேறாகப் பெறப்பட்டவர் என்றலுமாம். இசைந்தபோது எய்திய பேறு - இருந்தவாறு - திருவமுது செய்ய இசைந்ததனைப் பெரும் பேறாகக் கருதினர். எய்திய பேறு இருந்தவா - என்றதனால், எய்தியது ஒரு பேறும், அமுது செய்ய இசைந்திருந்தது அதன்மேல் மற்றுமொரு பேறுமாக என்ற குறிப்புத் தரப்பட்டது. மைதிகழ்..உய்தும் - இப்பெரும் பேறுகள் தாம் ஒரு சிறிதும் எதிர்பாராத நிலையில் பெற்றபடியினால் திருவருளாலன்றி இவற்றைப் பெற இயலாதென்று சிவனருளை வழுத்தி யுய்வோம் என்றபடி. தாம் பல நாளும் தியானித்ததன் பயனாக இப்பேறு பெறலாயிற்று என்னும் தற்போத முனைப்புச் சிறிதும் இல்லாதவராதலின் சிவனருளால் வந்ததென்றே யுய்தும் என்றார். (அரசுகள்) தமக்கு அருட்பெருமை உளதாயிற்று என்றும், தமது பெருமையை உலகறிந் தமையால் தம் பெயரால் அறங்கள் செய்யப்பட்டன என்றும், தற்போதம் சிறிதும் இல்லாது தமது பெயரை எழுதின காரணம் வினவிய திருநாவுக்கரசு நாயனாரைப் போலவே, அவரைப் தியானப் பொருளாய்க்கொண்டு தாம் செய்ததவத்தின் பயனாக நாயனார் தாமாகவேவந்து கிடைக்கப்பெற்றனர் என்று தற்போத நினைவு சிறிதுமிலராயினர் அப்பூதியார்; அதனால் திருவருளால் வந்ததென்று கொண்டனர். தவம் தானே பலன் றராது; செய்த தவத்தின் பயனை இறைவர் கூட்டுவித்தல் வேண்டும் என்று ஞானசாத்திர உண்மை இங்கு உய்த்துணரக் கிடப்பதும் காண்க. "செய்வினையும் மதன்பயனுஞ் சேர்ப்பானும்" (சாக் - புரா) என்ற நுட்பம் கருதுக. "செய்தவரிசைத்த" என்று இத்திருப்பாட்டினைத் தொடங்கிக் காட்டிய குறிப்பும் இது. வந்ததென்றே என்ற பிரிநிலை ஏகாரமும் இக்குறிப்பு. |