அதற்குத் தக்கபடி பொருந்தும் சிவசின்னங்களாகிய திருநீறும் கண்டிகையும் விளங்கப்பூண்டு, இடையீடின்றி மனத்துப் பொருந்தக் கொண்ட தியான உணர்வினையும், தடைபடாது வந்து மேன்மேல் எழுகின்ற திருப்பதிகங்கள் பொருந்திய திருவாக்கினையும், கையினில் விளங்கும் திருவுழவாரப் படையினையும் உடையவராய்க் கைத்தொண்டு செய்து கலந்து கசிந்தனர். (வி-ரை.) மையல்துறை ஏறி - மையலைத் தரும் - செய்யும் - சமணசமயநெடிறி. ஈண்டுத் துறை என உருவகம் செய்யப்பட்டது. வழுக்குபவை, கராம் முதலியன உள்ளவை, அழுக்குள்ளவை, இறங்கி ஏற முடியாத ஆழமுள்ளவை முதலிய நீர்த்துறைகள் மக்களியங்கக் கூடாதனவாதல் போல, நன்மைபெற முயலும் உயிர்கள் நாடியடைய முடியாதபடி மயக்கந்தரும் புறச்சமயநெறி. துறை ஏறி - துறையினின்றும், நீக்கப்பொருளில் வரும் ஐந்தனுருபும் இழிவு சிறப்பும்மையும் தொக்கன. ஏறி மகிழ்ந்து - ஏறியதனால் மகிழ்ச்சியடைந்து. மகிழ்ந்து - செய்பவராய் - உடன் கலந்து கசிந்தனர் என்று கூட்டி முடித்துக்கொள்க. அலர்சீர் - அலார்தல் - மலர்போல விரிந்து புகழ்பெருகுதல். அலர் - நல்லாரறஞ்சொல்லப் பொல்லார் புறங்கூற, அல்லா ரலர்தூற்ற அடியார்க் கருள்செய்வான்" (பிள்ளையார் - குறிஞ்சி - நாகை - 10), "சமணர் சாக்கியர் நிச்சம் மலர் தூற்ற" (மேற்படி - நல்லூர் - 10) என்றபடி, அலர் - புறச்சொல் - பழிச்சொல் என்ற பொருளிற கொண்டு, பின்னர்ச் சமணர்கள் வஞ்சனை தெரிந்து சித்திரித்த (1347, 1348) பழிச்சொல்லைக் குறிப்பாலுணர்த்துவதனையும், அலர்சீர் - அந்த அலரே பின்னர் மிக்க சிறப்பாய் விளைவதனையும் குறிப்பிற் பெற வைத்ததனையும் உன்னுக. மனத்தொடு வாய்மையுடன் மெய் உற்ற திருப்பணி - திருப்பணிகள் மனம் வாக்குக் காயம் என்ற மூன்றும் ஒற்றித்த நிலையில் நின்று பொருந்தச் செய்யப்படுதல் வேண்டும். வாய்மை. இங்கு வாக்கின்றன்மை என்ற பொருளில் நின்றது. உண்மை - வாய்மை - மெய்மை என்ற ஒருபொருட் சொற்களின் கருத்துக் காண்க. ஓடு - உடன் - அந்தக்கரண புறக்கரணங்களைப் பிரித்துக் காட்டி எண்ணுப் பொருளில் வந்தன. அவ்வாறு திருப்பணிகள் செய்யும் நிலை பின்னர் உணர்வும், வாசகமும், உழவாரமுடன் என்றதனாலும், தொண்டு - கலந்து - கசிந்தனர் என்றதனாலும் உணர்த்தப்பட்டன. சிவசின்னம் விளங்கிட - திருநீறுங் கண்டிகையும் திருமேனியில் விளங்க. இதனால் சிவசின்னமணியாது சிவன் பணிகள் செய்யலாகா தென்பது விளங்கும். 1308 பார்க்க. சிவசின்னங்களைப் புறக்கணித்து வெறும் வாய்ஞானம் பேசுவோர் இதனைக் கருதுவார்களாக. எய்துற்ற தியானம் அறா உணர்வு - தியானம் - ஒன்றினிடத்துப் பதித்த மனம் அதினின்றும் மாறாது அழுந்தியிருக்கும் உணர்வுநிலை. எய்துற்ற என்பது அவ்வாறுள்ள நிலை கைவந்து பொருந்திய என்றும், சமணசமயச் சார்பில் முன்னரில்லாது இப்போது பொருந்திய என்றும் உரைக்க நின்றது. அறா உணர்வு - அழுந்திய அந்நிலை. வாய்த்தொண்டு கைத்தொண்டு முதலிய புறக்கரணங்களின் செயல் நிகழ்ந்தகாலத்தும் பிறழ்வுபடாது இருக்கும் அறிவு. "சிவபெருமான் றிருவடிக்கே பதித்த நெஞ்சும்" என்பது காண்க. ஈறு இன்றி எழும் திருவாசகம் - திருவாசகம் - இங்கு நாயனாரது தேவாரத் திருப்பதிகங்களைக் குறித்தது. வாசகம் - வாக்கினில் நிகழ்வது என்ற பொருள் தந்தது. "திருவாக்கினி னிகழ்வது அஞ்செழுத்துமே யாக" (1134) என்றது காணக். |