பக்கம் எண் :


அப்பூதியடிக ணாயனார் புராணம்991

 

திருத் "திங்களூர்" (பாட்டு - 1786)

(இக்கோயிலின் முன்பு அப்பூதியாரின் மகனுடலைக் கெசணர்வித்துத் திருநாவுக்கரசர் திருப்பதிகம் பாடி விடம் தீர்த்தருளினர்)

______

தலவிசேடம் : திங்களூர் - III - பக்கம் 315 பார்க்க. கோயில் மிகப் பழுதாயும் வெளிமதில் இடிந்து தரைமட்டமாயும் உள் மதில் பழுதுபட்டும் கோபுரங்கள் சிகரமின்றியும் உள்ளன: படம் பார்க்க. இவ்வாலயத்திற்குரிய செப்புப் படிமங்களுள் சோமாஸ்கந்தர் திருவுருவம் மட்டும் பாதுகாவலின் பொருட்டுத் தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் வைக்கப்பட்டுள்ளதென்று கேள்வி; கோயிலைச் சுற்றும் நல்ல நன்செய் நிலங்களாயுள்ளன; அப்பூதியார் வாழ்ந்த திருமனையோ, அஃதிருந்த இடமோ, அவர் அமைத்த குளமோ, அவர் தோற்றுவித்த சாலையோ சுவடும் காணக் கிடைத்தில. ஆலயத்துக்கு இரண்டு காலம் வழிபாட்டுக்காகச் செல்லும் ஆதிசைவராகிய அருச்சகரைத் தவிர வேறுயாரும் அக்கோயிக்குச் செல்வதாகக் காணவில்லை; தண்ணீர்ப் பந்தர் மட்டும் ஓர் இடங்குறித்து நீண்டகாலமாக நடந்துவருகிறது; அப்பூதியாரின் திருவுருவாதானும் இத்திருக்கோயிலில் வைத்து வழிபடப்பெறவில்லை.

அரசுகள் அப்பூதியாரின் மகனாரது உடலைக் கோயிலின் திருமுன்பு கொண்டுவரச்செய்து பதிகம் பாடி உயிர்ப்பித்த பாடற் சிறப்புடைய இத்திருக் கோயிலைப் புதுப்பித்தும், ஆளுடைய அரசுகள், அப்பூதியார் மகனார் மனைவியார் திருவுருவங்களைததாபித்தும், சோலை குளம் திருமடம் முதலியவை கண்டும் திருத்தொண்டு செய்தல் மிக மேலான சிவபுண்ணியமாகும்; சைவ மக்களின் சமய வாழ்க்கை நிலை இற்றைநாள் எத்துணைக் கீழ்நோக்கிச் சென்றுள்ளது என்பதற்கு இக்கோயிலின் நிலையும், இதனை அடுத்துத் திருப்பழகை கோயிலின் நிலையும் சான்று பகர்கின்றன. இதனோடமையாது. திருப்பழனத்துள்ள திருக்கோயில் ஆதிசைவ மூர்த்திகள் அப்பூதியார் திருநாவுக்கரசரைக் குருவாக அடைந்து அவரால் ஆட்கொள்ளப் பெற்றுய்ந்த வரலாறுகளைப்பற்றி இழிவு தோன்றப் பேசியும், பற்பல பொய்க்கதைகளைப் புனைந்து பரப்பியும் வருகிற நிலைமை சைவ வுலகத்தின் இக்கால அலங்கோல நிலைமையினை நன்கு தெரிவிக்கிறது; இறைவனருள் பெருக நிகழ்ந்து "மன்று ளாரடி யாரவர் வான்புகழ் நின்ற தெங்கு நிலவி யுலகெலாம்" என வளர்க.

சுவாமி - கைலாசநாதர். அம்மை - பெரியநாயகி யம்மையார்; பதிகம் 1 பொதுப்பதிகம்; இத்தலம் தேவார வைப்புத்தலங்களுள் ஒன்றாகவும் கொள்வர்.

திருப்பழனத்தினின்றும் வடக்கில் மட்சாலை வழி ஒரு நாழிகை யளவில் அடையத்தக்கது; இப்பதியில் வைணவ ஆழ்வார்கள் பாடல்பெற்ற விட்டுணு கோயில் ஒன்று பழுதுற்ற நிலையில் ஊருக்கு மேல்புறம் உள்ளது.