பக்கம் எண் :


அப்பூதியடிக ணாயனார் புராணம்993

 

பதைப்பு - சடுதியில் சேர்ந்த அபாயத்தால் நிகழும் உடல் நடுக்கமாகிய மெய்ப்பாட்டுடன் கூடிய மனநடுக்கம். பதைப்புடன் ஓடிவந்தான் என்று கூட்டுக. பாந்தள் பதைப்புடன் பற்றும்என்று பாம்பின் செயலுக்கு கூட்டியுரைக்கவும் நின்றது.

பாத்தன் - பாம்பு. பற்றும் - தீண்டும். பற்றும் வேகம் - என்றது பற்றிய தால் உளதாகும் விட வேகம்.

வேகத்தால் எய்தி - விரைந்து செல்லும் வேகத்தினாற் சேர்ந்து. "விடவேகத்திற் - போதுவான் வேகம் முந்த" என இதனை மேல் உரைப்பது காண்க. இங்குக் கூறியது மனத்துணிபு. மேல் உரைப்பது அதனைச் செயலில் நிகழ்த்துவது.

கொய்த - என்று இறந்த காலத்தாற் கூறியவதனால் குருத்தரிந்த செய்கை முன்னர் முடிந்தமையும் கூறியபடி. குருத்தை ஈறும்போது அரவு கையில் தீண்டியதாயினும் அதனால் அம்முயற்சியினைக் கைவிட்டுவிடாது, நிறைவேற்றி முடித்தான் என்பது குறிப்பாற் கூறப்பட்டது. இதனானும் இப்பாட்டிற் கூறிய "சென்று கொடுப்பன்" என்ற மனத்துணிபானும், மேல்வரும் பாட்டிற் கூறுமாறு அதனைச் செயலில் நிறைவுபடுத்திய வகையானும் மகனது வீரமும் மனத் திண்மையும் வினைத்திட்பமும் அன்பின் உறைப்பும் உணர்த்தப்பட்டமை காண்க.

சென்று கொடுப்பன் - விடவேகத்தினையும் தான் செல்லும் வேகத்தினையும் சென்று சேரும் தூரம் நேரங்களையும் துணிந்து கூறிய மன உறைப்பு.

வீழாமுன் - விடவேகத்தால் தான் வீழ்த்தப்படுவது உறுதி யென்று துணிந்து மேற்செயலை நிச்சயித்தனன் என்க.

பையர - என்பதும் பாடம்.

25

1808. (வி-ரை.) பொருந்திய - அரவம் தீண்டியதனாற் றன்பால் வந்து சேர்ந்த இவர்க்கிது பொருந்தாதாயினும் குருவருள் வெளிப்பாடுற்றுப் பொருந்து தற்காக வந்து பொருந்திய என்பது குறிப்பு. விடம் பொருந்திய வேகம் என்று கூட்டியுரைத்தலுமாம்.

விடவேகத்தின் - வேகத்தினும். இன் - எல்லைப் பொருளில் வந்த ஐந்தனுருபு, முந்த - விடவேகத்தினும் போதும் வேகம் முற்பட; மிகுதியாக; இதற்குப் பிறர் வேறுரைத்தார்.

முந்த வருந்தியே - முந்துதலினால் வருத்தமுற்று - அஃதாவது வேகத்திற் செல்வதனால் இரத்தவோட்டம் மிகுதிப்பட அதனுட் கலந்த விடத்தின் கொடுமையால் வருத்தமும் மிகுதிப்பட.

அணையும் போழ்து...என்று - செல்கின்ற காலத்தில் இவ்வாறு எண்ணிக் கொண்டு, செல்லத் தொடங்கியபோது வீழுமுன் வேகமாய்ச் சென்று கொடுப்பேன் என்று துணிந்து ஓடத்தொடங்கினான்; ஓட்டத்தினால் வருத்தம் மிகுந்தது; அப்போது "இதனை ஒருவரும் சொல்லமாட்டேன்" என்று எண்ணிக் கொண்டே சென்றனன்.

திருந்தியகருத்து - திருத்தமாவது - யான் இதனை அறைந்தால் அதுபற்றித் தீர்வுதேடப் பெற்றோர் முதலியவர் முயல்வர்; அதனால் காலந்தாழ்க்கும்; அதனால் அருந்தவர் அமுது செய்தலும் தாழ்க்கும்; அது அபராதமாகும்; ஆதலின், என் பொருட்டு அந்த அபராதம் நிகழாமல் நான் இதனை எவர்க்கும் சொல்லமாட்டேன் என்றிவ்வாறு அன்பு வழியிற் கருத்தை ஒருப்படுத்தியது.

செழுமனை - இந்நிகழ்ச்சியால் சிவனருளும் குருவருளும் திகழ்ச் செழிக்கும் மனை. "அந்தமின் மனை" (458) என்றதும் ஆண்டுரைத்தவையும் பார்க்க.