பக்கம் எண் :


994திருத்தொண்டர் புராணம்

 

வேகத்தாற் போதுவான் - என்பதும் பாடம்.

26

1809. (வி-ரை.) எரிவிடம் - எரிக்கும் விடம். எரித்தல் ஈண்டு உயிர்த்தன் மையைத் தாதுக்களினின்று அழித்தல் என்ற பொருளில் வந்தது. எரி போன்ற விடம் என்றலுமாம்.

முறையே ஏறி - என்பது இரத்தமுதலாக ஒன்றற்கொன்று தொடர்பாக அமைந்துள்ள தாதுக்களில் அத்தொடர்பு முறையிலே பரவி முதல் இரத்தத்திலும், பின்னர், அந்த இரத்தவோட்டம் இருதயத்துட் சென்று, அங்கு நின்றும் ஒருமுறை இருமுறை மும்முறை என்று உடல் முழுவதும் பரவும்போது, இறைச்சியிலும் மேதையிலும் எலும்பிலும் என்றிவ்வாறு ஒவ்வொரு ஓட்டத்தில் ஒவ்வொருதாதுவில் பரவுதல் என்றதாம்.

தலைக்கொண்ட - உச்ச நிலையினை அடைந்த.

ஏழாம் வேகம் - இரத்தவோட்டம் இரத்தாசயத்தினிற் சுத்தி செய்யப்பட்டு உடலின் பல உறுப்புகளினும் சென்று பரவி மீள அங்குச் சேர்தல் ஒரு ஓட்டம் அல்லது வேகம் எனப்படும். இவ்வாறு ஒடிச்செல்லும் இரத்தத்தில் விடம் பொருந்த அதனால் ஒரு முறை ஒடும்போது அது பரவப்பட்ட ஒரு தாது அழிவுபடும் அடுத்த முறை இன்னொரு தாதுவும் என்றிவ்வாறு ஏழு முறை செல்ல ஏழுதாதுவும் அழியும். இதனை "ஏழாம் வேகம் தெரிவுற...கருகித் தீந்து" என்றார்.

ஏழாம் வேகம் தெரிவுற கருகித் தீந்து" - ஏழு வேகம் முற்றியதனால் தாதுக்களேழும் விடத் தன்மையினைப் பற்றிக்கொண்டு கருமை நிறம் விளங்கி, வேக மேழும் முற்றிய தன்மை கரு நிறம் தோன்றியதனால் வெளியில் தெரிய நின்றது ஆதலின் தெரிவுற என்றார். எயிறும் கண்ணும் மேனியும் என்ற இவையே கரு நிறம் தோன்றவுள்ளன. தீந்து - எரிபட்டது போன்ற நிலையடைந்து.1

1806 முதல் 1809 வரை நான்கு பாட்டுக்களினும் மகன் செயல் கூறப்பட்டது. அவனைப் பற்றிய வினையெச்ச முற்றுக்களுக்குத் தோன்றா எழுவாயாய் வைத்தது தற்போத மிழந்து பணிசெய்த இவனதுயர்வு குறிப்பு.

விரி உரை குழறி - மனக் கருத்தை விரிக்கும் சொல் நேராய் ஒலிக்க வராது தடுமாற்றத்தை அடைதல் உயிர் போகும் நிலையின் அணிமையை உணர்த்தும் ஓர்குறி; ஆதலின் ஆவி விட என்றதனை அடுக்கவைத்தார்.

ஆவி விடக்கொண்டு - உயிர் போகும் நிலை வரினும் அதனைப் போகவிடாது தன் உறுதியினால் தடுத்து நிறுத்திக்கொண்டு. இது மிக்க வலிமையினால் கூடுவதாம். "தீதிலா நெறியில் விட்ட, சொற்றிறங் கேட்க வேண்டிச் சோர்கின்ற வாலிதாங்கும், கொற்றவன்" (486) என்ற மெய்ப்பொருள் நாயனார் வரலாறு ஈண்டு நினைவு கூர்தற்பாலது.

மயங்கி வீழ்வான் - வீழ்ந்தான் - உடலைத் தாங்கி நிற்கும் நரம்பு - முதலிய தாதுக்களின் இயல்பு அழிந்தமையின் மயக்கமும், அதனால் உடல் வீழ்வதும் நேர்வன: ஏறி - கருகி - தீந்து - குழறி - மயங்கி வீழ்வான் - என்ற இவைகள் அவன் வீழ்ந்த நிலையின் முன்னிகழ்ச்சிகளாய் வீழ்ந்ததற்குக் காரணமாயின என்று குறிக்க வீழ்வான் - வீழ்ந்தான் என்று முடித்தார். வீழ்வானாகி - விழுந்தான் என்க.

பரிகலக் குருத்து -பரிகலமாகப் பயன்பட நின்ற வாழைக் குருத்து.

______

 1.

குறிப்பு:-விடம் எறும் வேகம் என்பது பற்றியும், பாம்பு விடம் - தீர்வு - முதலியவை பற்றியும் எனது சேக்கிழார் 101 - 103 பக்கங்கள் பார்க்க.